(பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழியை நோக்கி, “தலைவர்நம் உயிர்க்கு உயிர் போன்றவர்; அவரைப் பிரிந்து கணப்போதும்பொருந்தும் வன்மையிலேம்; இத்தகைய நம்மை அவர் மறந்து ஆண்டேஇருப்பாராயின் அவர் பொருட்டுக் கடவுளைப் பராவுதலும் நிமித்தம்பார்த்தலும் என்ன பயனைத் தரும்?” என்று தலைவி கூறியது.)
 218.   
விடர்முகை யடுக்கத்து விறல்கெழு சூலிக்குக் 
     
கடனும் பூணாங் கைந்நூல் யாவாம் 
    
புள்ளு மோராம் விரிச்சியு நில்லாம் 
    
உள்ளலு முள்ளா மன்றே தோழி 
5
உயிர்க்குயி ரன்ன ராகலிற் றம்மின் 
     
றிமைப்புவரை யமையா நம்வயின் 
     
மறந்தாண் டமைதல் வல்லியோர் மாட்டே. 

என்பது பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

கொற்றன் (பி-ம். கொறன.)

     (பி-ம்.) 2. ‘பூணாது’, ‘கைநூல் யாவாமற்’; 3. ‘மோராமல்’; 7. ‘வலியோர்’.

     (ப-ரை.) தோழி-, உயிர்க்கு உயிர் அன்னர் ஆகலின் -நம் உயிருக்கு உயிரைப் போன்றவராதலின், தம் இன்று -தம்மை யின்றி, இமைப்புவரை - இமைப் பொழுது அளவேனும், அமையா- பிரிந்திருத்தலைப் பொருந்தாத, நம்வயின் - நம்மை, மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர் மாட்டு - மறந்து விட்டுத் தாம் சென்ற அவ்விடத்தே தங்குதலில்வல்ல தலைவர் திறத்தில், விடர் முகை அடுக்கத்து - பிளப்பையும் குகைகளையும் உடைய மலைப் பக்கத்தில் உள்ள,விறல்கெழு சூலிக்கு - வெற்றி பொருந்திய துர்க்கைக்கு,கடனும் பூணாம் - பலிக் கடன் கழித்தலைச் செய்வோம்;கை நூல் யாவாம் - கையில் காப்பு நூலைக் கட்டோம்;புள்ளும் ஓராம் - நிமித்தத்தையும் பாரோம்; விரிச்சியும்நில்லாம் - நற் சொல்லைக் கேட்டற்குச் சென்று நில்லோம்;உள்ளலும் உள்ளாம் - நினைத்தலையும் செய்யோம்.

     (முடிபு) தோழி, ஆண்டு அமைதல் வல்லியோர் மாட்டு, கடனும் பூணாம்; யாவாம்; ஓராம்; நில்லாம்; உள்ளாம்.

     (கருத்து) நம் அன்பு நிலை தெரிந்து விரைந்து வருதல் தலைவர்கடனாம்.

     (வி-ரை.) விறல் - மிடுக்குமாம். சூலத்தை உடைமையின் கொற்றவையைச் சூலியென்றாள். கடன் - பராய்க்கடன், பிரிந்த தலைவர் மீண்டுவந்து சேர்ந்து, பின் பிரியாது உறைய வேண்டுமென்று கொற்றவையைவழிபடுதலை இங்கே தலைவி குறித்தாள். முருகக் கடவுளையும் இங்ஙனம்வழிபடும் மரபு, “கெழீஇக் கேளிர் சுற்ற நின்னை, எழீஇப் பாடும்பாட்டமர்ந் தோயே” (பரி. 14:23-4) என்பதனாலும், ‘பிரிந்த கேளிர்வந்து புணர்ந்து பின் நீங்காமைப் பொருட்டு மகளிர் யாழை யெழுவிநின்னைப் பாடுகின்ற பாட்டை விரும்பினோய்’ (பரிமேல்.) என்னும்அதன் உரையாலும் அறியப்படுகின்றது.

     தலைவர் மேற்கொண்ட வினை நன்கு முடிய வேண்டும் என்றுகடம்பூணுதலும் உண்டு;

   
“செய்பொருள் வாய்க்கெனச் செவிசார்த்துவோரும்  
   
 ஐயம ரடுகென வருச்சிப் போரும்”்               (பரி. 8:107-8.)  

     தலைவரைப் பிரிந்த மகளிர் அவர் மேற்கொண்ட வினை நன்குமுடிந்து விரைவில் வந்து சேர வேண்டும் என்று கருதி நோன்பிருத்தல்வழக்கம். அந் நோன்பு நோற்குங்காற் கையில் காப்பு நாணணிவர்;

   
“பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை  
   
 வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து”      (நெடுநல். 141-2.)  

புள் ஓர்த்தல் - நிமித்தம் பார்த்தல் (மலைபடு. 448, ந.); தலைவர்வருதற்குரிய நன்னிமித்தங்களைப் பார்த்தல். விரிச்சி- நற்சொல்; தலைவர்வரவைக் குறிப்பால் தெரிவிக்கும் நற்சொல். பிரிந்த தலைவரது வருகையை விரிச்சி பார்த்து நின்றறியும் மரபை,

  
“நாழி கொண்ட நறுவீ முல்லை  
  
 அரும்பவி ழலரி தூஉய்க்கை தொழுது  
   
 பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்பச்  
   
 சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்  
   
 உறுதுய ரலமர னோக்கி யாய்மகள்  
   
 நடுங்குசுவ லசைத்த கையள் கைய  
   
 கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்த்தர 
   
 இன்னே வருகுவர் தாய ரென்போள் 
   
 நன்னர் நன்மொழி கேட்டன மதனால் 
   
 நல்ல நல்லோர் வாய்ப்புட் டெவ்வர் 
   
 முனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து 
   
 வருத றலைவர் வாய்வது நீநின் 
   
 பருவர லெவ்வங் களைமா யோயென”              (9-21.)  

என்னும் முல்லைப் பாட்டுப் பகுதியால் அறியலாகும்.

     ‘ஒருகணப் பொழுதேனும் அவரைப் பிரிந்து அமையேமாகியநம்மைப் பிரிந்து, தாம் சென்ற இடத்தே நம்மை மறந்து இருக்கும் மனவலியை உடையர் தலைவர். அவர் நம் உயிருக்கு உயிர் போன்றவராதலின், நம் நிலையை உணர்ந்து விரைவில் வரும் கடப்பாடுடையர். அங்ஙனம் அவர் செய்யாராயின் நாம் கடவுளை வழிபட்டுப் பயன் என்?' என்று தலைவி கூறினாள்.

     அன்று ஏ; அசை நிலைகள். நம்வயின்: உருபு மயக்கம்.

     ஒப்புமைப் பகுதி 1. விடர் முகை: குறுந். 239:2, 343:4; நற். 156:9, 158:5,261:8, 322:4, 332:5; ஐங். 395:2.

     விடர்முகை யடுக்கம்: அகநா. 47:6; புறநா. 374:12.

     2. கடன் பூணல்: “நிலையுயர் கடவுட்குக் கடம்பூண்டு” (கலி. 46:16.)

     கைந்நூல் யாத்தல்: “செந்நூல் யாத்து” (முருகு. 231); “காப்புநூல் யாத்து” (தொல். புறத். 5, ந. மேற்.)

     3. விரிச்சி நிற்றல்: “திருந்திழை மகளிர் விரிச்சி நிற்ப” (நற். 40:4); “நென்னீ ரெறிந்து விரிச்சி யோர்க்கும்” (புறநா. 280:6.)

     4. உள்ளலும் உள்ளாம்: குறுந். 37:1, ஒப்பு.

     5-6. தலைவரையின்றித் தலைவி யமையாமை: “தம்மின் றமையாநந்நயந் தருளி” (நற். 1:7); “தம்மின்றி, யாமுயிர் வாழு மதுகையிலேமாயின்” (கலி. 24:13-4); “தம்மல தில்லா நம்மிவ ணொழிய” (அகநா. 313:8.)

     7. வல்லியோர்: குறுந். 266:4.

(218)