(தலைவன் சிறைப்புறத்தில் இருப்பத் தலைவி தோழிக்குக்கூறுவாளாய்த் தன் துயரின் மிகுதி கூறி, “தலைவர் நம் துயர் நீக்க இதுசெவ்வி” என்று உணர்த்தியது.)
 219.   
பயப்பென் மேனி யதுவே நயப்பவர் 
    
நாரி னெஞ்சத் தாரிடை யதுவே 
    
செறிவுஞ் சேணிகந் தன்றே யறிவே 
    
ஆங்கட் செல்க மெழுகென வீங்கே 
5
வல்லா கூறி யிருக்கு முள்ளிலைத் 
    
தடவுநிலைத் தாழைச் சேர்ப்பர்க் 
    
கிடமற் றோழியெந் நீரிரோ வெனினே. 

என்பது சிறைப்புறம்.

வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார் (பி-ம். வெள்ளூர்கிழார் வங்கனார் வெண்பூதியார்.)

     (பி-ம்.) 1. ‘பசப்பென்’; 2. ‘நாஅர் நெஞ்சத்’; 5. ‘மள்ளிலைத்’;6. ‘சேர்ப்பற்’; 7. ‘நீரோ’.

     (ப-ரை.) தோழி--, பயப்பு என் மேனியது - பசலையானது எனது மேனியின் கண்ணது; நயப்பு அவர் நார் இல்நெஞ்சத்து அரு இடையது - காதல் அவரது அன்பற்றநெஞ்சமாகிய செல்லுதற்கரிய இடத்தின்கண்ணது; செறிவும் -எனது அடக்கமும், சேண் இகந்தன்று - நெடுந்தூரத்தில்.நீங்கியது; அறிவு - எனது அறிவு, ஆங்கண் செல்கம் எழுகென - தலைவர் உள்ள இடத்திற்கே செல்வேம் அதன்பொருட்டு எழுவாயாக என்று, வல்லா கூறி ஈங்கு இருக்கும் -நம்மால் மாட்டாதவற்றைக் கூறி இங்கே தங்கி இருக்கும்;எ நீரிரோ எனின் - எந்தத் தன்மையில் உள்ளீரோ என்றுபரிவு கூர்ந்து வினாவிக் குறைதீர்ப்பராயின், முள் இலை-முள் அமைந்த இலையை உடைய, தடவு நிலை தாழைசேர்ப்பர்க்கு - பருத்த அடியை உடைய தாழையை உடையகடற்கரைத் தலைவருக்கு, இடம் - இது தக்க செவ்வியாகும்.

     (முடிபு)தோழி, பயப்பு என் மேனியது; நயப்பு ஆரிடையது;செறிவும் இகந்தன்று; அறிவு இருக்கும்; எந்நீரிரோ எனின், சேர்ப்பர்க்குஇடம்.

     (கருத்து) தலைவர் வரைவதற்கு ஏற்ற சமயம் இது.

     (வி-ரை.) பகற்குறிக்கண் நிகழும் இடையீட்டால் வருந்திய தலைவி,தலைவன் வரைந்து கோடலை விரும்பிக் கூறியது இது. இதன்கண் தன்நிலையைப் புலப்படுத்தி, இது நீங்குதற்குரிய செவ்வி இதுவென்றுதலைவன் உணரும்படி கூறினாள், அவன் அதனை உணர்ந்து விரைவில்வரைந்து கொள்வான் என்பது கருதி.

     நயப்பு - விருப்பம்; இங்கே தலைவன் மாட்டுள்ள அன்பு; நயப்பு,தலைவன் நெஞ்சளவிலே நிற்றலல்லது எம் மாட்டுத் தொடர்ந்திலதெனலும் ஒன்று. செறிவு - அடக்கம்; அறிவு - நன்மை பயப்பனவும், தீமை பயப் பனவும் அறிவிப்பது; இவ்விரண்டும் பெண்பாலார்க்குரிய சிறப்பு இயல்புகளைச் சார்ந்தன;

   
“செறிவு நிறைவுஞ் செம்மையுஞ் செப்பும் 
   
 அறிவு மருமையும் பெண்பா லான”             (தொல். பொருள். 15)  

தலைவன் உள்ளவிடத்தே செல்வேமெனத் தலைவி கூறுதல் மரபு;

   
“காமக் கிழவ னுள்வழிப் படினும் 
   
 தாவி னன்மொழி கிழவி கிளப்பினும்”          (தொல். களவு.22)  

என்பதன் உரையைப் பார்க்க.

     இடம் - செவ்வி; “இடனறிந் தூடி” (நாலடி. 384.) மன் ஆக்கப்பொருளில் வந்தது, எந்நீரிரோ வெனின் - என் நிலையில் உள்ளீரோஎன்று வினவப்புகின்; என்றது அங்ஙனம் வினவிக் குறைதீர்க்க எண்ணின்என்றவாறு.

     ஒப்புமைப் பகுதி 1. பயப்பும் நயப்பும்: அகநா. 344:12-3; குறள். 1181,1189-90.

     வல்லா கூறல்; தொல். செய். 113.

     6. தடவுநிலை: குறுந். 66:1.

(219)