கூவன் மைந்தன். (பி-ம்.) 4. ‘ரிரவிற்’.
(ப-ரை.) கூவல் குரால் ஆன் படு துயர் - கிணற்றின்கண்ணே வீழ்ந்த குராற்பசு படும் துன்பத்தை, இராவில்கண்ட - இராக்காலத்தில் கண்ட, உயர்திணை ஊமன் போல - ஊமையாக இருப்பவன் அத்துயரத்தை வெளியிட முடியாமல்துன்புற்றது போல, தோழி நோய்க்கு - என் பொருட்டுத்தோழி படும் வருத்தத்தினால், துயர் பொறுக்கல்லேன் - துயரைப் பொறுக்கும் ஆற்றல் இல்லேனாயினேன்; அத்துயரம், கவலை யாத்த - கவர்த்த வழிகளில் யாமரங்களைஉடைய, அவலம் நீள் இடை - துன்பத்தை உடைய நீண்டவழிகளில், சென்றோர் கொடுமை எற்றி - எம்மைப் பிரிந்துசென்ற தலைவரது கொடுமையை நினைந்து, துஞ்சாநோயினும் - துயிலாமல் இருக்கும் துன்பத்தைக் காட்டிலும்,நோய் ஆகின்று - மிக்க துன்பமாகின்றது.
(முடிபு) தோழி நோய்க்குத் துயர் பொறுக்கல்லேன்; துஞ்சா நோயினும் நோயாகின்று.
(கருத்து) தோழி வருந்துதல் பயனற்றது.
(வி-ரை.) இது முன்னிலைப் புறமொழியாகத் தோழிக்கு அறிவுறுத்தியது.
கவர்த்த வழிகளும் ஆங்கு நேரும் அவலங்களும் நீண்ட வழிகளும் துன்பத்தை மிகுவிப்பன. எற்றல் - நினைத்தல் (குறுந். 145:2; தொல்.உரி. 39) துஞ்சா நோய் - யான் துஞ்சாமைக்குக் காரணமாகிய நோய்.
குராலான் - குரால் நிறம் உள்ள பசு; “ஏந்திமிற் குராலும்” (கலி.105:14) என்பதன் உரையைப் பார்க்க; இந்நிறத்தைக் கபில நிறம் என்பர்.
ஊமன் என்பது அஃறிணையாகிய கோட்டானுக்கும் வருதலின்அதனை விலக்க, ‘உயர்திணை யூமன்’ என்றாள்; இது வெளிப்படைஎன்னும் இலக்கணத்தின் பாற்படும்.
பசு இராக் காலத்தில் கிணற்றில் விழுந்து விட்டதைக் கண்ட ஊமன்அதனை விளங்கப் பிறருக்குச் சொல்லும் வன்மை இல்லாமையால் மிகவருந்துவதைப் போல யானும் இத் துயரைப் பிறருக்குச் சொல்லும்வலியின்றி வருந்தினேன் என்றாள். துயர் பொறுக்கல்லேன் என்றது,அதனைப் பொறாது வாய்விட்டு இங்ஙனம் புலப்படுத்தத் துணிந்ததன்காரணம் கூறியவாறு.
“என் துயரத்தை நான் ஆற்றுவேனோ! தோழியின் துயரத்தைஆற்றுவேனோ! ஏதும் அறிகிலேன்!” என்பதனால் தோழியின் வருத்தம்பயனற்றது என்று உணர்த்தினாள். ‘எனக்கு இத்துயர் வாராதவாறுகாப்பதையேனும், யான் இத்துயர் படாவாறு ஆற்றுவதையேனும்செய்யாது பின்னும் இதனை மிகுவித்தாள்’ என்னும் கருத்தினால் இதுகூறினாள்.
துயர் கூறவியலா நிலையில் உள்ள தலைவிக்குக் குராற்பசு கூவலில்விழக்கண்ட ஊமனை உவமை கூறிய சிற்ப்பினால் கூவல் என்ற அடைஇதனை இயற்றிய ஆசிரியர் பெயருக்கு அமைந்தது போலும்.
மேற்கோளாட்சி 3-6. உயர்திணைப்பால், உவமத்தில் மயங்கி வந்தது (தொல்.உவம.6, பேர்.)
ஒப்புமைப் பகுதி 1. கவலை : குறுந். 233:1, 263:2; புறநா. 219:1. பாலையில் யாமரம் இருத்தல்: குறுந். 232:5.
2. பிரிந்து சென்ற தலைவனது கொடுமையை எற்றித் துஞ்சாமை : குறுந். 145:2-4.
தலைவனது கொடுமை: குறுந். 9:7, ஒப்பு, 145:2, ஒப்பு.
தலைவி துஞ்சாமை: குறுந். 6:4, ஒப்பு.
5-6. துயர்பொறாத தலைவிக்கு ஊமன்: | “நோமுறு நோய்நிலை நுவல கிற்றிலள் |
| ஊமரின் மனத்திடை யுன்னி விம்முவாள்” (கம்ப. மிதிலைக்.42.) |
(224)