ஒளவையார். (ப-ரை.) அகவல் மகளே - தெய்வங்களை அழைத்துப் பாடுதலைச் செய்யும் கட்டுவிச்சியே, அகவல் மகளே - மனவு கோப்பு அன்ன - சங்கு மணியினால் ஆகிய கோவையைப் போன்ற வெண்மையாகிய, நல்நெடு கூந்தல் - நல்ல நீண்ட கூந்தலை உடைய, அகவல் மகளே -, பாட்டுப் பாடுக - பாட்டுக்களைப் பாடுவாயாக; இன்னும் பாட்டுப் பாடுக -, அவர் நல் நெடு குன்றம் பாடிய பாட்டு - நீ பாடிய பாட்டுக்களுள் அவருடைய நல்ல நெடிய குன்றத்தைப் புகழ்ந்து பாடிய பாட்டை, இன்னும் பாடுக - மீண்டும் பாடுவாயாக.
(முடிபு) அகவன் மகளே, பாடுக: இன்னும் பாடுக; குன்றம் பாடிய பாட்டை இன்னும் பாடுக.
(கருத்து) இவள்பால் அன்பு பூண்ட தலைவருடைய குன்றத்தைப் பாடின் இவளது வேறுபாடு நீங்கும்.
(வி-ரை.) அகவல் மகள் - கட்டுவிச்சி; அகவல் - அழைத்தல்; ‘அதனை வழக்கினுள்ளார் அழைத்தல் என்றுஞ் சொல்லுப; அவை ... கட்டுங் கழங்குமிட்டுரைப்பார் கண்ணும் ... கேட்கப்படும்’ (தொல்.செய். 81 பேர்): ‘அகவிக் கூறலின் அகவலாயிற்று; ... அதனை வழக்கினுள் அழைத்தல் என்ப’ (தொல். செய்.81, ந.); தெய்வங்களை அழைத்துக் கூறும் இயல்புடையாளாதலின் இப் பெயர் பெற்றாள்; ‘அகவர் என்றார், குலத்தோர் எல்லாரையும் அழைத்துப் புகழ்வர் என்பது பற்றி’ (மதுரைக். 223,ந.)
தலைவியினுடைய காம நோயை அறிய மாட்டாத தாயர் அவள் வேறுபாட்டின் காரணத்தை ஆராயும் பொருட்டு அகவன் மகளாகிய கட்டுவிச்சியை அழைத்துக் கட்டுப் பார்ப்பது வழக்கம். கட்டுவிச்சி முறத்தில் நெல்லையிட்டு அதனை எண்ணி அதனாற்போந்த சில நிமித்தங்களை அறிந்து, “இவள் முருகனால் அணங்கப்பட்டாள்” என்று கூறுவாள். அதுகேட்ட தாயர் வேலனை அழைத்து வெறியாட்டெடுப்பர்.
இவ்வகவன் மகள் தெய்வமேறிக் குறிகூறுதலும் உண்டு. இவளைப் பிற்காலத்தார் குறத்தி என்று கூறுவர். “கட்டினுங் கழங்கினும்” வெறியென விருவரும் ஒட்டிய திறத்தாற் செய்திக்கண்ணும் (தொல். களவு.24) என்பதன் உரையில், ‘கட்டுவிச்சியும் வேலனும் தாம் பார்த்த கட்டினானும் கழங்கினானும் தெய்வத்திற்குச் சிறப்புச் செய்யாக்கால் இம்மையால் தீராது என்று கூறுதலின் அவ்விருவரும் தம்மின் ஒத்த திறம் பற்றியதனையே செய்யும் செய்தியிடத்தும்’ (ந.) என்றுள்ள பகுதி தாயர் கட்டுப் பார்ப்பதற்குரிய விதியைப் புலப்படுத்துகின்றது;
| “குன்ற நாடன் பிரிவிற் சென்று |
| நன்னுதற் பரந்த பசலைகண் டன்னை |
| செம்முது பெண்டிரொடு நென்முன்னிறீஇக் |
| கட்டிற் கட்குமாயின்” (நற். 88:4-7), |
| “பனிவரை நிவந்த பயங்கெழு கவாஅற் |
| றுனியில் கொள்கையொ டவர்நமக் குவந்த |
| இனிய வுள்ள மின்னா வாக |
| முனிதக நிறுத்த நல்க லெவ்வஞ் |
| சூருறை வெற்பன் மார்புறத் தணிதல் |
| அறிந்தன ளல்ல ளன்னை வார்கோற் |
| செறிந்திலங் கெல்வளை நெகிழ்ந்தமை நோக்கிக் |
| கையறு நெஞ்சினள் வினவலின் முதுவாய்ப் |
| பொய்வல் பெண்டிர் பிரப்புளர் பிரீஇ |
| முருக னாரணங் கென்றலி னதுசெத்து” (அகநா. 98:1-10) |
என்பன இவ் வழக்கத்தை விளக்கும். இதனை அன்றி, ‘அகலுளாங்க ணறியுநர் வினாய் - அகன்ற இடத்தை உடைய ஊரிடத்துக் கட்டினாலும் கழங்கினாலும் எண்ணியறிவாரை வினாவி அவர் தெய்வத்தான்வந்த வருத்தமென்றலின்’ (குறிஞ்சிப். 7, ந.), “சேரி யாயத்துச் செம்முதிர்பெண்டிரொடு, கட்டறி மகடூஉக் கடிமுறத் திட்ட, வட்ட நெல்லு மாண்பில பெரிதென” (பெருங்.1.37:235-7), “கட்டுவிச்சி கட்டேறிச், சீரார் சுளகிற் சிலநெல் பிடித்தெறியா, வேரா விதிர்விதிரா மெய்சிலிராக் கைமோவாப், பேரா யிரமுடை யானென்றாள்” (திவ்.சிறிய திருமடல், 20-22), “இது காண்மி னன்னைமீ ரிக்கட்டுவிச்சி சொற்கொண்டுநீர், எதுவானுஞ் செய்தங்கோர் கள்ளுமிறைச்சியுந் தூவேன்மின்” (திவ். திருவாய். 4.6:3) என்பவற்றாலும், திருக்கோவையாரிலுள்ள கட்டுவைப்பித்தல், கலக்கமுற்று நிற்றல், கட்டுவித்தி கூறல் (238-5) என்னும் துறைகளுக்குரிய செய்யுட்களாலும், அவற்றின் உரையாலும்.
| “முந்நாழி முச்சிறங்கை நெல்லளந்து கொடுவா |
| முறத்திலொரு படிநெல்லையென் முன்னேவை யம்மே |
| இந்நாழி நெல்லையுமுக் கூறுசெய்தோர் கூற்றை |
| இரட்டைபட வெண்ணினபோ தொற்றைபட்ட தம்மே |
| உன்னாமுன் வேள்விமலைப் பிள்ளையார்வந் துதித்தார் |
| உனக்கினியெண் ணினகரும மிமைப்பினிற்கை கூடும் |
| என்னாணை யெங்கள்குலக் கன்னிமா ரறிய |
| எக்குறிதப் பினுந்தப்பா திக்குறிகா ணம்மே” (மீனாட்சியம்மை குறம், 26) |
என்பதனாலும் இக்கட்டுவிச்சியைப் பற்றிய செய்திகள் சிலவற்றை உணரலாகும்; பிற்காலத்துக் கலம்பகத்துள்ள குறமென்னும் உறுப்பாலும் குறவஞ்சி என்னும் பிரபந்தம் முதலியவற்றாலும் சில செய்திகள் புலப்படும்.
மும்முறை அகவன்மகளை விளித்தது தான் கூறும் கூற்றின் உண்மையைக் கூர்ந்து அறியும் பொருட்டு, மனவுக்கோப்பன்ன என்றது அவள் அணிந்த அணியையே அவள் கூந்தலுக்கு உவமை கூறியவாறு. இவ்வுவமையால் கட்டுவிச்சி நரை மூதாட்டி என்பது பெறப்படும். நன்னெடுங் கூந்தலென்றது இகழ்ச்சிக் குறிப்பு, “பயனின் மூப்பிற் பல்சான் றீரே” (புறநா. 195:3) என்புழிப் பல்சான்றீர் என்பதையும், “எழில்செய் கூகை” (சீவக.102) என்பதையும் போல. அவர் நெஞ்சுறிசுட்டு. பாடுதற்குரிய சிறப்புடையது என்பாள், ‘நன்னெடுங் குன்றம்’ என்றாள். மலைவாழ் சாதியினளாகிய அகவன்மகள் தான்கண்ட மலைகளின் வளத்தைப் பாடுவது இயல்பாதலின் அவள் பல மலை வளங்களைப் பாடினாள்; அவற்றுள் தலைவனது மலை வளத்தைக் கேட்பதில் தலைவிக்குப் பெரு விருப்பம் உளதாமாதலின் தோழி அதனை மீண்டும் பாடென்றாள். ‘இன்னும் பாடுக’ என்றதனைப் பின்னுங் கூட்டுக.
‘அவர் நன்னெடுங் குன்றம்பாடிய பாட்டு’ என்று கூறின், ‘அவர் யார்?’ என்னும் ஆராய்ச்சி தாயரிடையே பிறந்து உண்மை அறிதற்கு ஏதுவாமாகலின் இஃது அறத்தொடு நிற்றலாயிற்று.
மேற்கோளாட்சி 1. முறைமை சுட்டா மகள் என்னும் ளகரவீற்று உயர்திணைப் பெயர் பிறிதுவந் தடைதலாகிய ஏகாரம் பெற்று விளியேற்றது (தொல். விளி. 12, ந; இ.வி. 207); உயர்திணைப் பெயர் ஏகாரம். பெற்று விளியாயிற்று (நன்.304, மயிலை.)
மு. 'கட்டுக்காணிய நின்ற இடத்துத் தோழி அறத்தொடு நின்றது; அதுவும் வெறியாட்டின்கண் அடங்கும்’ (தொல். பொருளியல், 12, ந.)
ஒப்புமைப்பகுதி 1. அகவன் மகள்: ‘‘வெண்கடைச் சிறுகோ லகவன் மகளிர்” (குறுந். 298:6.) 5.தலைவனது குன்றத்தைப் பாடுதல்: சிறுபாண் 128;நற்.156:4, 373:3; ஐங் 244:2-4; பரி 17:51; கலித்.40, 41, 43.அகநா.208:2; புறநா.131:3, 143:12, 151:12; சிலப். 24: 3-5. அகவன் மகள் மலை வளம் பாடுதலைக் குறவஞ்சி நூல்களில் பரக்கக் காணலாகும்.
(23)