(பருவ வரவின்கண் தோழியை நோக்கி, ”மாலைக்காலம் என்றுதனியே ஒன்றை வரையறுத்துச் சிலர் கூறுவர். தமியராயினார்க்கு எல்லாப்பொழுதும் மாலைப் பொழுதே” என்று தலைவி கூறியது.)
 234.   
சுடர்செல் வானஞ் சேப்பப் படர்கூர்ந் 
    
தெல்லறு பொழுதின் முல்லை மலரும் 
    
மாலை யென்மனார் மயங்கி யோரே 
    
குடுமிக் கோழி நெடுநக ரியம்பும் 
5
பெரும்புலர் விடியலு மாலை 
    
பகலு மாலை துணையி லோர்க்கே. 

என்பது பருவ வரவின்கண் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

மிளைப் பெருங் கந்தன்.

    (பி-ம்.) 2. ‘தெல்லறு’, ‘தெல்லிறு’.

    (ப-ரை.) தோழி-, மயங்கியோர் - அறிவு மயங்கியோர்,சுடர் செல் வானம் சேப்ப - சூரியன் மறைந்து சென்றவானம் சிவப்பு நிறத்தை அடைய, படர் கூர்ந்து - துன்பம்மிக்கு, எல் அறு பொழுதில் - ஒளி மங்கிய பொழுதில்,முல்லை மலரும் - முல்லைப் பூ மலர்கின்ற, மாலை -மாலைக் காலம், என்மனார் - என்று அதனை வரையறுத்துக்கூறுவர்; துணையிலோர்க்கு - துணைவரைப் பிரிந்தவர்களுக்கு, நெடுநகர் - நீண்ட நகரத்தில், குடுமி கோழி இயம்பும் -உச்சிக் கொண்டையை உடைய கோழி கூவுகின்ற, பெருபுலர் விடியலும் - பெரிய இராப் பொழுது புலர்கின்றவிடியற் காலமும், மாலை - மாலைக் காலமாகும்; பகலும்மாலை - பகற் காலமும் மாலைக் காலமாகும்.

    (முடிபு) மயங்கியோர் முல்லை மலரும் மாலையென்மனார்;துணையிலோர்க்கு விடியலும் மாலை; பகலும் மாலை.

    (கருத்து) தலைவரைப் பிரிந்தமையால் நான் எப்பொழுதும்துன்பத்தை உடையவளானேன்.

    (வி-ரை.) படர்- தமியரானார் படும் துன்பம்.

    “மாலைக் காலம் என்பது சூரியன் மறைந்து முல்லை மலரும்பொழுது என்று வரையறுத்து மயங்கியோர் கூறுவர். அது சிலருக்குப்பொருந்தும். தலைவரைப் பிரிந்த மகளிருக்கு எக் காலத்தும் காம நோய்மிகுதியாகவே இருத்தலின் எப்பொழுதும் மாலையே ஆகும்” என்றுதலைவி கூறினாள்.

    தோழி, ‘மாலைப் பொழுது வந்து விட்டதே; இனித் தலைவிஆற்றாளாவள்’ என்று எண்ணிய பொழுது, “ஆற்றாமை எனக்குப் புதிதன்று; அதனை எப்பொழுதும் உடையேன். எல்லாப் பொழுதும்எனக்கு மாலைக் காலம் தரும் துன்பத்தையே தருதலின் எல்லாம் மாலையே” என்று தலைவி கூறினாள்.

    பகல் என்றது விடியல், மாலை, யாமம் ஒழிந்த சிறு பொழுதுகளை.

    ஏகாரங்கள் இரண்டும் அசை நிலைகள்.

    மேற்கோளாட்சி 3. என்மனார்: மன் அசை நிலைப் பொருளில் வந்தது (நன். 431, மயிலை.)

    ஒப்புமைப் பகுதி 3. மு. கலி. 119:16.

    2-3. மாலையில் முல்லை மலர்தல்: குறுந். 108:4-5, ஒப்பு; ஐங். 489:2.

    4. குடுமிக் கோழி: குறுந். 107:1-2.

    5. பெரும்புலர் விடியல்: அகநா. 304:5.

    மு. ஐங். 183.

(234)