குன்றியன். (பி-ம்.) 2. ‘வாம்பணைத்’.
(ப-ரை.) மகிழ்ந-, பசு அவல் இடித்த - பச்சை அவலை இடித்த, கரு காழ் உலக்கை-கரிய வயிரம் பொருந்திய உலக்கையை, ஆய் கதிர் நெல்லின் - அழகிய கதிரை உடைய நெற் பயிரை உடைய வயலினது, வரம்பு அணை துயிற்றி - வரப்பாகிய அணையிலே படுக்க வைத்து, ஒள் தொடி மகளிர் - ஒள்ளிய வளையை உடைய பெண்கள,் வண்டல் அயரும் - விளையாட்டைச் செய்யும், தொண்டி அன்ன - தொண்டி என்னும் பட்டினத்தைப் போன்ற, என் நலம் தந்து - எனது பெண்மை நலத்தைத் தந்து விட்டு, நின் சூள் கொண்டனை சென்மோ - நினது சூளைப் பெற்றுக் கொண்டு செல்வாயாக.
(முடிபு) மகிழ்ந, என் நலம் தந்து நின் சூள் கொண்டனை சென்மோ.
(கருத்து) நீ சூள் கூறுவதனால் யாம் மயங்கேம்.
(வி-ரை.) தலைவன் பரத்தையினிடத்தில் இருந்து மீண்டு வந்துதலைவியின் உடம்பாட்டைப் பெறும் பொருட்டுத் தோழியை அணுகிஅவளைத் தூது விடக் கருதி அவள் பால் சூளுற்றுத் தான் பரத்தைமை உடையன் அல்லனெனக் கூறிய வழி, தோழி, ‘‘நின் சூளின் இயல்பை நன்கறிவேம்; அதனை நீயே கொண்டு செல்; யாம் வேண்டேம். எம்பால் நீ நுகர்ந்த நலத்தைத் தந்து செல்க’ என்று கூறி வாயில் மறுத்தாள்.
பாசவல் - நெல்லை வறாமல் இடித்துச் செய்த அவல். என் நலந்தந்து சென்மோ: 236-ஆம் செய்யுள் வி-ரை பார்க்க. தொண்டி: குறுந்.210.
நெல்: வயலுக்கு ஆகுபெயர். துயிற்றி: துயிலாததனை இங்ஙனம் கூறியது இலக்கணை. மகிழ்நன் - மருத நிலத் தலைவன்.
ஒப்புமைப் பகுதி 1. பாசவல்: அகநா. 141:16-8; புறநா.63:13; சீவக.68,1562.
3. வண்டலயர்தல்: அகநா.180:3, 330:2.
மு. குறுந். 243:3, 1-3. பதிற்.29:1-2.
4. தொண்டியன்ன நலம்: ‘‘வளங்கெழு தொண்டி யன்னவிவணலனே’’, ‘‘திண்டேர்ப் பொறையன் றொண்டி யன்னவெம்’’ (அகநா.10;13, 60:7.) நலத்தைத்தா வென்றல்: குறுந்.236:2-6, ஒப்பு.
5. தலைவனது சூள்; குறுந்.384:4; தொல். கற்பு.6,9; ஐங்.56:4; பரி.8:65, 12:64; கலி.75:21, 81:33.
(238)