ஆசிரியன் பெருங்கண்ணன். (பி-ம்.) 1. ‘தொடி நெகிழ்ந்தன’; 2. ‘விடுநாளுண்டோ’.
(ப-ரை.) தோழி-, விடர் முகை சிலம்புஉடன் கமழும் -பிளப்பையும் முழைகளையும் உடைய பக்கமலை முழுவதும் மணம் வீசும், அலங்கு குலை காந்தள் நறு தாது - அசைகின்ற கொத்துக்களில் உள்ள காந்தட் பூவின் நறிய தாதை, ஊதும் தும்பி - ஊதுகின்ற தும்பி என்னும் வண்டு, பாம்பு உமிழ்மணியின் தோன்றும் - பாம்பினால் உமிழப்படும் மணியைப் போலத் தோன்றுகின்ற, முந்தூழ் வேலிய - மூங்கிலை வேலியாக உடைய, மலை கிழவோற்கு - மலைகளை உடைய தலைவன் பொருட்டு, தொடி ஞெகிழ்ந்தன - என் வளைகள் நழுவின; தோள் சாயின - என் தோள்கள் மெலிந்தன; விடு நாண் உண்டோ - இனி விடுவதற்குரிய நாணம் உள்ளதோ? அது முன்னரே ஒழிந்தது.
(முடிபு) தோழி, மலைகிழவோற்குத் தொடி ஞெகிழ்ந்தன; தோள் சாயின; விடு நாண் உண்டோ?
(கருத்து) என் நிலை அறிந்து தலைவன் விரைவில் வரைந்துகொள்ள வேண்டும்.
(வி-ரை.) தொடி - தோள் வளை; கை வளையுமாம். விடு நாண்-இனி விடப்படும் நாண். ‘முன்பே நாணம் ஒழிந்ததாதலின் இனி விடுவதற்கு என்பால் நாணம் என்றொன்றில்லை' என்றபடி. உண்டோ: ஓகாரம் எதிர் மறை. நறுந்தாது இயல்பிலே கமழ்வதாயினும் தும்பி ஊதியதனால் பின்னும் கமழ்வதாயிற்று. பாம்பு காந்தளுக்கும், மணி வண்டுக்கும் உவமைகள்.
காந்தளின் தாதை ஊதி அதன் மணம் எங்கும் பரவும்படி செய்யும் தும்பியைப் போல, என் நலனுகர்ந்து அலர் எங்கும் பரவச் செய்தான் எனவும், காந்தளும் தும்பியும் பொருந்தியது பாம்பும் மணியும் போலும் வெருவரும் தோற்றத்தைத் தந்தது போல, எம் இருவர் நட்பும் அஞ்சுதற்குரியதாயிற்று எனவும் குறிப்புக்கள் தோன்றின.
இதனால் தன் மேனி மெலிவையும் நாண் அழிவையும் கூறி வரைவின் இன்றியமையாமையைத் தலைவி தலைவனுக்குப் புலப்படுத்தினாளாயிற்று.
மேற்கோளாட்சி 1. ‘மற்றுத் தொடி ஞெகிழ்ந்தனவே தோள் சாயினவேயெனப் பிரிவின்கண் வந்த வேறுபாட்டினை ஈண்டுக் கூறாரோ வெனின், அவை இன்னதன் பின்னர் இன்னது தோற்று மென்னும் முறைமைய அல்லவாகலின் ஈண்டுக் கூறார்; அவை, வினையுயிர் மெலிவிடத் தின்மையுமுரித்தே யென்புழிச் சொல்லப்படும் என்பது’ (தொல். மெய்ப்.14,பேர்.)
மு. ஆற்றாமை மிக்க விடத்து ஊழணி தைவரலென்னும் மெய்ப்பாடு வந்தது (தொல். மெய்ப். 20, பேர்.)
ஒப்புமைப் பகுதி 1. தொடி நெகிழ்தல்: குறுந். 50:4-5,185:2,252:1.
தோள் மெலிதல்: குறுந்.87:5, ஒப்பு; கலி. 26:10; அகநா. 147:12.
தொடி நெகிழ்ந்து தோள் சாய்தல்: குறுந். 185:2, ஒப்பு;ஐங்.28:3-4; அகநா.387:1.
2. விடர் முகை: குறுந்.218:1, ஒப்பு.
3. சிலம்புடன் கமழும் காந்தள்: "நறுந்தண் சிலம்பி னாறு குலைக் காந்தள்" (ஐங். 226:2); "அடுக்கநா றலர்காந்தள்" (கலி.59:3.)
குலைக் காந்தள்: குறுந்.1:4, ஒப்பு.
3-4. காந்தளை ஊதுந் தும்பி: கலி. 43:8-9; அகநா. 108:15-6,138; நற். 185: 8-10, 359:2; நாலடி. 283.
5. பாம்புமிழ் மணி: குறிஞ்சிப்.221, அகநா. 72:14-5.
3-5. காந்தளுக்குப் பாம்பு உவமை: குறுந். 185:5-7; கலி. 45:2-3; அகநா.108:12-5; கார். 11. திணைமாலை 107; திணைமொழி. 3,29; திருச்சிற். 233, 324.
வண்டுக்கு நீலமணி: "சில தும்பி ... ... ... நீலம் புரைவன பலகாணாய் (கம்ப.வனம்புகு.12.)
காந்தளுக்குப் பாம்பும் தும்பிக்கு மணியும்: "திருமணியுமிழ்ந்த நாகங் காந்தட், கொழுமடற் புதுப்பூ வூதுந் தும்பி, நன்னிற மருளு மருவிடர்" (அகநா. 138:17-19.) 6. முந்தூழ் வேலி: குறுந். 18:1, ஒப்பு.
(239)