(வரைவிடை வைத்துத் தலைவன் பிரிந்த காலத்தில் தலைவி ஆற்றாளெனக் கவன்ற தோழியை நோக்கி, "நான் அவர் மலையை நோக்கி ஆற்றினேன்; மாலைக் காலத்தில் அது மறைகின்றது; ஆதலின்ஆற்றேனாயினேன்" என்று தலைவி கூறியது.)
 240.   
பனிப்புத லிவர்ந்த பைங்கொடி யவரைக் 
    
கிளிவா யொப்பி னொளிவிடு பன்மலர் 
    
வெருக்குப்பல் லுருவின் முல்லையொடு கஞல 
    
வாடை வந்ததன் றலையு நோய்பொரக் 
5
கண்டிசின் வாழி தோழி தெண்டிரைக் 
    
கடலாழ் கலத்திற் றோன்றி 
    
மாலை மறையுமவர் மணிநெடுங் குன்றே.  

என்பது வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

கொல்லன் அழிசி (பி-ம். கொல்லனழுசி.)

    (பி-ம்.) 2. ‘பணைமலர்’; 3. ‘வெருகுப்பல்’, ‘கஞலி’; 4. ‘நோயோர்க்’; 6. ‘றோற்றி’.

    (ப-ரை.) தோழி-, பனி புதல் இவர்ந்த - குளிர்ச்சியை உடைய புதலின்கட் படர்ந்த, பசு கொடி அவரை - பசிய கொடியாகிய அவரையினது, கிளிவாய் ஒப்பின் ஒளி விடு பல்மலர் - கிளி மூக்கை ஒப்பாக உடைய ஒளியை வெளிப்படுத்தும் பல மலர்கள், வெருகு பல் உருவின் முல்லையொடு கஞல - காட்டுப் பூனையின் பல்லைப் போன்ற உருவத்தை உடைய முல்லை மலர்களோடு நெருங்கும்படி, வாடைவந்ததன் தலையும் - வாடை வீசுங்காலம் வந்ததற்கு மேலும், நோய் பொர - வருத்தம் என்னை அலைக்கும் வண்ணம், அவர் மணி நெடு குன்று - தலைவரது மணிகள் உண்டாகும்உயர்ந்த குன்று, கடல் ஆழ் கலத்தில் தோன்றி - கடலில் ஆழ்கின்ற கப்பலைப் போலத் தோன்றி, மாலை மறையும் - மாலைக் காலத்தில் மறையும்; கண்டிசின் - இதனைக் காண்பாயாக.

    (முடிபு) தோழி, கஞல வாடை வந்ததன்றலையும் பொரக் குன்று மறையும்; கண்டிசின்.

    (கருத்து) அவர் மலையை நோக்கி ஆற்றினேன்; அது மறைவதால்ஆற்றேனாயினேன்.

    (வி-ரை.) அவரை என்றது இங்கே மொச்சையை. அவரையின் பூவிற்குக் கிளி மூக்கு உவமை. "வாடையே துன்பத்தை உண்டாக்குகின்றது;அதற்கு மேலும் இம் மாலையால் நோய் உண்டாகும்" என்றாள். தலையும்: "கனலுநோய்த் தலையும்" (கலி.66:13.) வாழி: அசை நிலை.

    இருளில் மறையும் குன்றுக்குக் கடலில் ஆழும் கலம் உவமை. கதிரவன் மறைய மறைய, மலை அடியில் இருந்து மறைந்து வருமாதலின் ஆழுங்கலத்தை உவமை கூறினாள்.

    இருளுக்குக் கடல் நீரை உவமை கூறும் மரபு,

    "கங்குல் வெள்ளங் கடலினும் பெரிதே" (குறுந்.387) என்பதிலும் காணப்படும்.

    தலைவி, தலைவனது குன்றை நோக்கி ஆற்றி இருக்கும் வழக்கம் இந்நூல், 249- ஆம் செய்யுளாலும் உணரப்படும்.

    மணிநெடுங்குன்று - நீல மணியைப் போன்ற நெடிய குன்றெனலும் ஆம் (குறுந்.367:6-7.)

    மேற்கோளாட்சி மு. பருவங் கண்டு ஆற்றாது தலைவி தோழிக்குக் கூறியது (தொல்.களவு.21, ந.)

    ஒப்புமைப் பகுதி1. பனிப்புதல்: குறுந்.98:4, ஒப்பு.

    1-2. அவரையின் செம்மலர்: "பைந்நனை யவரை பவழங்கோப்பவும்" (சிறுபாண். 164.)

    3. முல்லை யரும்பிற்கு வெருகின்பல்: குறுந். 220:3-5, ஒப்பு.

    4. தலைவி வாடையால் வருந்துதல்: குறுந். 103:4. ஒப்பு.

    5. கண்டிசின் தோழி: குறுந்.112:5, ஒப்பு.

    7. மணி நெடுங்குன்று: சிறுபாண். 1; ஐங். 207:4, 209:5, 250:2; பரி. 13:1, பரி. திரட்டு, 2:3.

    மலையில் மணி உண்டாதல்: புறநா. 218:2; நான்மணிக். 5; சிலப்.2:77; சீவக.4.

     6-7. தலைவனது மலையைக் கண்டு தலைவி உவத்தல்: "சேணெடுங் குன்றங் காணிய நீயே" (நற்.222:10); "அன்னாய் வாழி வேண் டன்னைநம் படப்பைப், புலவுச்சேர் துறுக லேறி யவர்நாட்டுப், பூக்கெழு குன்ற நோக்கி நின்று, மணிபுரை வயங்கிழை நிலைபெறத், தணிதற்கு முரித்தவ ளுற்ற நோயே "(ஐங்.210); "உள்ளா ராயினு முளனே யவர்நாட்டு... கடுந்திற லணங்கி னெடும்பெருங் குன்றத்துப், பாடின் னருவி சூடி, வான்றோய் சிமையந் தோன்ற லானே" (அகநா.378:19-24); "தோழியென், நெஞ்சிற் பிரிந்ததூஉ மிலரேதம், குன்ற நோக்கங் கடிந்தது மிலரே" (தொல். களவு. 20, ந.மேற். "தொடிநிலை".)

    தலைவன் குன்று மறையத் தலைவி வருந்துதல்: "அவர் நாட்டு,மணிநிற மால்வரை மறைதொறிவள், அறைமலர் நெடுங்க ணார்ந்தன பனியே" (ஐங். 208:3-5.)

(240)