(பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழியை நோக்கி, "யான்ஆற்றுவதற்கு எண்ணியும் என் கண்கள் தாமே அழுதன; என் அவசநிலைக்கு யாது செய்வேன்!" என்று தலைவி கூறியது.)
 241.   
யாமே காமந் தாங்கவுந் தாந்தம் 
    
கெழுதகை மையி னழுதன தோழி 
    
கன்றாற்றுப் படுத்த புன்றலைச் சிறாஅர் 
    
மன்ற வேங்கை மலர்பத நோக்கி 
5
ஏறா திட்ட வேமப் பூசல் 
    
விண்டோய் விடரகத் தியம்பும் 
    
குன்ற நாடற் கண்டவெங் கண்ணே. 

என்பது பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

கபிலர்.

    (பி-ம்.) 1. ‘யாமெங்’, ‘தாங்கலம்’; 2. ‘கெழுதகைமையினாள்’;4. ‘மலர்ப்பதம்’; 7. ‘கண்டவென்’.

    (ப-ரை.) தோழி-, யாமே காமம் தாங்கவும் - நாம் காம நோயைப் பொறுத்து ஆற்றி இருப்பவும், கன்று ஆற்றுப்படுத்த புன் தலை சிறாஅர் - கன்றுகளை வழியிலே செலுத்திய புல்லியதலையை உடைய சிறுவர்கள், மன்றம் வேங்கை மலர் பதம் நோக்கி - மன்றத்தின்கண் உள்ள வேங்கை மரம் மலரும் செவ்வியைப் பார்த்து, ஏறாது இட்டஏமம் பூசல் - அம் மரத்தின் மேல் ஏறாமல் செய்த இன்பத்தைத் தரும் ஆரவாரம், விண்தோய் விடர் அகத்து இயம்பும் - வானத்தை அளாவிய மலை முழையின்கண் எதிரொலி உண்டாக்கும், குன்றம் நாடன் - குன்றங்களை உடைய நாட்டிற்குத் தலைவனை, கண்ட எம் கண் தாம் - கண்ட எம் கண்களாகிய தாம், தம் கெழுதகைமையின் - தமக்கு எம்பாலுள்ள உரிமையினால், அழுதன - தலைவர் பிரிந்தமைகருதி அழுதன.

    (முடிபு) தோழி, யாமே காமம் தாங்கவும் கண்தாம் கெழுதகைமையின்அழுதன.

    (கருத்து) யான் ஆற்ற எண்ணியும் ஆற்றாமை மீதூர்கின்றது.

    (வி-ரை.) யாமே:ஏகாரம் பிரிநிலை. தாங்குதல் - தடுத்தல்; வெளிப்படாது அடக்குதல். தாம்; அசை நிலையுமாம். கெழுதகைமை - உரிமை; குறள், 802. கண்ட உரிமை என்பதும் பொருந்தும். கன்று - யானைக் கன்று; பசுக் கன்றுமாம். ஆற்றுப் படுத்த - போக்கிய (கலி.85:16,ந.) புன்றலை - சிவந்த தலையுமாம். மன்றம் - பொதுவிடம். தெய்வம்உறைதலின் வேங்கை மரத்தின் மேல் ஏறாராயினர்.

    வேங்கை மலரைப் பறிக்கக் கருதுவார் "புலி, புலி" என்று ஆரவாரித்தல் வழக்கம்;

   
"ஒலிசினை வேங்கை கொய்குவஞ் சென்றுழிப் 
   
 புலிபுலி யென்னும் பூச றோன்ற"              (அகநா. 48:6-7.)  

    கண்ணே: ஏகாரம் அசை நிலை.

    ‘தலைவி ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குத் தான் ஆற்றுவல்என்பது படவும், ஆற்றாமையைக் கண்களின்மேல் ஏற்றியும் கூறினாள்.

    மேற்கோளாட்சி 3. கருமச் சிதைவு இல்வழிப் பல பொருளொரு சொல்லைக் கிளந்து கூற வேண்டா (தொல். கிளவி. 55, கல்,ந) மு. கையறு தோழி கண்ணீர் துடைத்த காலத்துத் தலைவி கூறியது (தொல். களவு.21, இளம், 20, ந.); தலைமகள் கலுழ்தற் காரணம் கூறியது (நம்பி.176.)

    ஒப்புமைப் பகுதி 1. காமந் தாங்குதல்; குறுந். 290:1.2

    3. ஆற்றுப் படுத்த: முல்லை. 81.புன்றலைச் சிறார்: மலைபடு.217, 253.

    4.மன்ற வேங்கை: ஐங். 259:2; அகநா.232:7.

    5.ஏமப் பூசல்: மலைபடு.306.

    4-5.வேங்கை மலரின் பொருட்டு இடும் ஆரவாரம்: "கருங்கால் வேங்கை யிருஞ்சினைப் பொங்கர், நறும்பூக் கொய்யும் பூசல்" (மதுரைக். 296-7); "தலைநாட் பூத்த பொன்னிணர் வேங்கை, மலை மாரிடூஉ மேமப் பூசல்" (மலைபடு. 305-6); "கிளர்ந்த வேங்கைச்சேணெடும் பொங்கர்ப், பொன்னேர் புதுமலர் வேண்டிய குறமகள்,இன்னா விசைய பூசல் பயிற்றலின்" (அகநா. 52:2-4.)

    6.விடரகத்தியம்பும்: குறுந். 42:3.மு. அகநா. 8:12.

    2-7.கண்கள் தாமே அழுதல்:"தன்வரைத் தன்றியுங் கலுழ்ந்தனகண்ணே", "கண்ணே காமங் கரப்பரி யவ்வே", "கரப்பவுங் கரப்பவுங்கைம்மிக், குரைத்த தோழி யுண்க ணீரே" (நற். 12:10, 23:9, 263:9-10.)

(241)