(தலைவனும் தலைவியும் இல்லறம் நடத்தும் மனைக்குச் சென்று மீண்டு வந்த செவிலித் தாய், "தலைவனும் தலைவியும் பிரிவின்றி ஒன்றிவாழ்கின்றனர். அவன் எங்கே சென்றாலும் விரைவில் வந்து விடுகின்றான்"என்று நற்றாய்க்குக் கூறியது.)
 242.   
கானங் கோழிக் கவர்குரற் சேவல் 
    
ஒண்பொறி யெருத்திற் றண்சித ருறைப்பப்  
    
புதனீர் வாரும் பூநாறு புறவிற் 
    
சீறூ ரோளே மடந்தை வேறூர் 
5
வேந்துவிடு தொழிலொடு செலினும் 
    
சேந்துவர லறியாது செம்ம றேரே. 

என்பது கற்புக் காலத்துக் கடிநகர் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்குச் சொல்லியது.

    (கடிநகர் - தலைவன் தலைவியுடன் இல்லறம் புரியும் மனை.)

குழற்றத்தன்.

    (பி-ம்.) 1. ‘கானக்’; 2. ‘ஒண்பொரி’, ‘நுண்பொறி’; 5. ‘செல்லினும்’; 6. ‘சேர்ந்துவர’, ‘செம்மற்றேரே’.

    (ப-ரை.) மடந்தை - தலைவி, கானங் கோழி கவர் குரல்சேவல் - காட்டுக் கோழியினது கவர்த்த குரலை உடைய சேவலினது, ஒள் பொறி எருத்தில் - ஒள்ளிய புள்ளிகளை உடைய கழுத்தில், தண் சிதர் உறைப்ப - தண்ணிய நீர்த்துளி துளிக்கும்படி, புதல் நீர் வாரும் - புதலின்கண் நீர் ஒழுகும்,பூ நாறு புறவில் - மலர் மணம் வீசுகின்ற முல்லை நிலத்தின் கண் அமைந்த, சிறு ஊரோள் - சிறிய ஊரில் உள்ளாள்;செம்மல் தேர் - தலைவனது தேர், வேந்து விடு தொழிலொடு - வேந்தனால் ஏவப்பட்ட தொழிலை மேற்கொண்டு, வேறு ஊர் செலினும் - வேற்றூருக்குச் சென்றாலும், சேந்துவரல் அறியாது - சென்ற ஊரின் கண்ணே தங்கிப் பின் வருதலை அறியாது; உடனே வந்து விடும்.

    (முடிபு) மடந்தை சீறூரோள்; செம்மல் தேர் செலினும் அறியாது.

    (கருத்து) தலைவனும் தலைவியும் பிரிவின்றி ஒன்றி வாழ்கின்றனர்.

    (வி-ரை.)கானங் கோழி: அம் சாரியை. மடந்தை: பருவம் குறியாது தலைவியென்னும் துணையாய் நின்றது. செலினுமென்றது செல்லுதலின்அருமையைப் புலப்படுத்தியது. வேற்றூர் செலினுமென்று வாளாகூறாது,வேந்துவிடு தொழிலொடு செலினுமென்றது, பிறவற்றிற்காகச் செல்லுதலின்மையையும், அரசனது ஆணைக்கு அடங்குதல் இன்றியமையாதாதலின்அதன் பொருட்டே செல்லுதலையும் குறித்தது.

    "தலைவன் தலைவியைப் பிரியாது உறைகின்றான். எச் செயல் குறித்தும் பிரிந்து செல்வதில்லை. அரசனது ஏவல் கடத்தற் கரிதாதலின் அதன் பொருட்டு மாத்திரம் அரிதிற் சிலகால் வேற்றூர் போவான். போயினும் உடனே மீள்வன்" என்ற கருத்துக்களை இவ்வடிகள் கொண்டுள்ளன.

    மேற்கோளாட்சி 1. சேவல் என்பது காட்டுக் கோழிக்கு வந்தது ( தொல். மரபு. 48, பேர்.); னகர வீறு வேற்றுமைக்கண் அம்முச்சாரியை பெற்று வந்தது (தொல். புள்ளி மயங்கு. 110, ந.)

    மு. செவிலி தலைமகனது நிலைமையும் தலைமகளது நிலைமையும் பார்த்து வந்து நற்றாய்க்குச் சொல்லியது (இறை. 53); தலைவியின் மாண்புகளை அகம்புகல் மரபின் வாயில்கள் தம்முட் கூறியது (தொல். கற்பு. 11, இளம்.); செவிலி நற்றாய்க்கு உவந்துரைத்தல் (தொல். கற்பு. 12, ந.);செவிலி நற்றாய்க்கு இருவர் காதலும் அறிவித்தது (நம்பி. 203.)

    ஒப்புமைப் பகுதி 1.மு. மலைபடு. 510

    2. தண் சிதருறைப்ப: குறுந். 104:2.

    3. புதல் நீர் வாரும் புறவு: குறுந். 98:4, ஒப்பு.

    5. வேந்து விடு தொழில்: தொல். மரபு. 81.

    மு. "தெவ்வர் மேற்செலினும், பெருநெடுந் தோளண்ணல் பேர்ந்தன்றித் தங்கான்", "தேர்மன்ன னேவச்சென் றாலு முனைமிசைச் சேந்தறியா, போர்மன்னு வேலண்ணல் பொன்னெடுந் தேர்பூண் புரவிகளே", "வாரார் கழன்மன்னன் றானே பணிப்பினும் வல்லத்துத் தன்,நேரார் முனையென்றுந் தங்கி யறியா னெடுந்தகையே" (பாண்டிக்.); "நனையகத் தல்கிய நாண்மல ரோதி நயந்துறையும், மனையகத் தல்லிடை வைகுத லாற்றஞ்சை வாணனொன்னார், வினையகத் தல்குதல் செல்லுவ ரேனுமவ் வேந்தர்பொற்றேர், முனையகத் தல்கல்செல் லாதொரு நாளு முகிழ்நகையே" (தஞ்சை. 376.)

(242)