நம்பி குட்டுவன். (பி-ம்.) 2. ‘வெண்பூக்’; 4. ‘புள்ளுமிழ்’; 5. ‘படிகியரென்’;
(ப-ரை.) தோழி-, மான் அடி அன்ன கவடு இலை அடும்பின் - மானின் குளம்பைப் போன்ற பிளவை உடைய இலைகளை உடைய அடும்பினது, தார் மணி அன்ன ஒள் பூ கொழுதி - குதிரைக் கழுத்தில் இடும் மாலையின்கண் உள்ள மணியைப் போன்ற ஒள்ளிய பூவை வலிய அலர்த்தி, ஒள் தொடி மகளிர் - ஒள்ளிய வளையை உடைய பெண்கள், வண்டல் அயரும் - விளையாட்டைச் செய்யும், புள் இமிழ் பெருகடல் சேர்ப்பனை - பறவைகள் ஒலிக்கும் பெரிய கடற்கரைக்குத் தலைவனை, உள்ளேன் - இனி நினையேன்; ஆதலின், என் கண் படீஇயர் - என் கண்கள் துயில்க.
(முடிபு) தோழி, சேர்ப்பனை உள்ளேன்; என்கண் படீஇயர்.
(கருத்து) தலைவனை நினையாது இருத்தல் அரிதாதலின் ஆற்றாமையும் நீங்கல் அரிது.
(வி-ரை.) தலைவனது பிரிவினால் தலைவி துயில் ஒழிந்தனள். அது கண்ட தோழி, "நீ துஞ்சாதது ஏன்? நீ ஆற்றியிருத்தல் வேண்டும்" என்று வற்புறுத்திக் கூறினாள். அது கேட்ட தலைவி, தன் இயல்பறியாது தோழி கூறுவதற்கு நெஞ்சழிந்து, "நான் தலைவனை நினைந்தேன்; அதனால்என் கண்கள் துயில் ஒழிந்தன. இனி நீ வற்புறுத்தியமையின் நினையேன்; என் கண்கள் துயிலுக" என்றாள். தலைவனை நினையாமையும் கண் துயிலுதலும் கூடாது என்பதே தலைவியின் கருத்து. அடும்பு - நெய்தல் நிலத்தில் வளரும் ஒரு வகைக் கொடி. மகளிர் நெய்தல் நிலத்தில் அடும்பின்மலரைக் கொய்து வண்டலயரும் வழக்கம்,
| "வண்ட றைஇயும் வருதிரை யுதைத்தும் |
| குன்றோங்கு வெண்மணற் கொடியடும்பு கொய்தும்" (நற். 254:1-2) |
என்பதனாலும் அறியப்படுகின்றது.
தம் விளையாட்டு ஒன்றையே கருதி, மகளிர் பூவை அலைக்கும்சேர்ப்பனென்றது, தன் வினையொன்றையே கருதிப் பிரிந்து என்னைவருந்தச் செய்வான் என்னும் குறிப்பினது.
மேற்கோளாட்சி மு. பெரிதாகிய இடையீட்டினுள் அரிதாகத் தலைவன் வந்த ஞான்றும் பெறாத ஞான்றைத் துன்ப மிகுதியாற் பெற்றதனையும் கனவு போன்று கொண்டு இகழ்ந்திருப்பின் தலைவிக்குக் கூற்று நிகழும். ( தொல். களவு. 20, ந.)
ஒப்புமைப் பகுதி 1. கவட்டிலை யடும்பு: "ஒண்பன் மலர கவட்டிலையடும்பு" (அகநா. 80:8.) அடும்பின் இலைக்கு மானின் அடி: "கானலடும்பின் கவட்டிலைகள் - மானின், குளம்பேய்க்கு நன்னாடன்" (நள. கலிதொடர். 89.)
2. பூக் கொழுதுதல்: குறுந். 85:5.
3. மு. குறுந். 238:3.
4. புள்ளிமிழ் சேர்ப்பு: "புள்ளிமிழ் கானல்" (குறுந். 299:2.)
5. தலைவி துஞ்சாமை: குறுந்.64: ஒப்பு.,மு. ஐங். 142:3.5,
(243)