(வரைவிடை வைத்துத் தலைவன் பிரிந்த காலத்தில் தலைவி ஆற்றாள் எனக் கவன்ற தோழியை நோக்கி, "தலைவனது கொடுமையைப் பிறர் அறியின் அது மிக இன்னாது; ஆதலின் யான் ஆற்றியிருப்பேன்"என்று தலைவி கூறியது.)
 245.   
கடலங் கான லாய மாய்ந்தவென் 
    
நலமிழந் ததனினு நனியின் னாதே 
    
வாள்போல் வாய கொழுமடற் றாழை 
    
மாலை வேனாட்டு வேலி யாகும் 
5
மெல்லம் புலம்பன் கொடுமை 
    
பல்லோ ரறியப் பரந்துவெளிப் படினே. 

என்பது வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

மாலை மாறன்.

    (பி-ம்.) 4. ‘மாலை நாட்டு’, ‘மானில வெனாட்டு’, ‘மரலை வெனனாட்டு’.

    (ப-ரை.) தோழி-. வாள்போல் வாய - வாளரம் போன்றவிளிம்பை உடைய, கொழு மடல் தாழை - கொழுவிய மடலை உடைய தாழையானது, மாலை வேல் நாட்டு வேலி ஆகும் - வரிசையாக உள்ள வேல்களை நாட்டிய வேலியைப் போலப் பயன் தரும், மெல்லம் புலம்பன் கொடுமை -மெல்லிய கடற்கரையை உடைய தலைவன் என் மாட்டுச் செய்த கொடுமை, பல்லோர் அறிய பரந்து வெளிப்படின் - பலர் அறியும் வண்ணம் பரவி வெளிப்பட்டால், அங்ஙனம் வெளிப்படுதல், கடல் அம் கானல் ஆயம் - அழகிய கடற்கரைச் சோலையிலே விளையாடும் மகளிர் கூட்டத்தினர், ஆய்ந்த என் நலம் இழந்ததனினும் - பாராட்டிய எனது பெண்மை நலத்தை நான் இழந்ததைக் காட்டிலும், நனி இன்னாது - மிக இன்னாமையைத் தருவதாகும்.

     (முடிபு) புலம்பன் கொடுமை வெளிப்படின் நலம் இழந்ததனினும் இன்னாது.

    (கருத்து) என் துயரப் பிறர் அறியாதவாறு ஆற்றுவேன்.

    (வி-ரை.) கடலங்கானல்: அம் சாரியையுமாம். ஆயம் ஆய்ந்த நலனாவது, எல்லாருடைய நலனிலும் சிறப்பாகத் தெரிந்தெடுத்துப் பாராட்டும் நலன். கானலில் நலம் இழந்ததனினுமெனக் கூட்டிப் பொருள் கொள்ளுதலும் பொருந்தும். வாள் - கருக்கமைந்த வாயை உடைய கருவி. இயல்பாகவே வளர்ந்த தாழை செயற்கை வேலியைப் போலத்தோற்றியது. மெல்லம் புலம்பன்: அம் சாரியை, புலம்பு - கடற்கரை,ஆயம் - மக்கள் தொகுதி; குறுந். 294:2; அகநா. 11:7. வெளிப்படுதல்இன்னாதெனச் சொற் கூட்டி உரைக்க. கொடுமை என்றது பிரிந்து சென்றதை.

    செயற்கையானன்றி இயல்பாகவே உள்ள தாழை வேலியாவது போல, நீ கூற வேண்டாமே இயல்பாகவே தலைவன் கொடுமையை நான் மறைத்து ஆற்றுவேன் என்பது குறிப்பு.

    ஒப்புமைப் பகுதி 2. நனியின்னாதே: அகநா. 392:10

    2. ஒப்பு: "நாடிழந் ததனினு நனியின் னாதென" (புறநா. 165:11.)

    1- 2. ஆயம் ஆய்ந்த நலம்: "வல்லோ ராய்ந்த தொல்கவின்றொலைய" (நற். 283:4); "பலராய் மாண்கவின்" (அகநா. 98:12.)

    3. தாழையின் மடலுக்கு வாள்: "அரவுவாள் வாய முள்ளிலைத்தாழை" (நற். 235:2.)

    4. வேல் நாட்டு வேலி: "எஃகூன்றி" (பட். 78); "வாண் மதிலாக வேன்மிளை யுயர்த்து" (பதிற். 33:7); "வேன்மி டைந்த வேலியும்"(சீவக.279); "சுற்றிலும் வேலியிட்ட தவர்களிட்ட வில்லும் வாளும் வேலுமே" (திருவரங்கக் .53.)

    3-4. தாழைவேலி: "கண்டல் வேலி" (நற். 191:5, 207:1.)

    5. மெல்லம் புலம்பன்: குறுந். 5:4, ஒப்பு.

    தலைவனது கொடுமை: குறுந். 9:7, ஒப்பு; கலி. 77:14.

(245)