கபிலர். (பி-ம்.) 3. ‘சாரலலர்’.
(ப-ரை.) தோழி-, இனம் மயில் அகவும் - திரளாக உள்ள மயில்கள் ஆரவாரிக்கும், மரம் பயில் கானத்து - மரங்கள் செறிந்த காட்டிடத்தில், நரை முகம் ஊகம் -வெள்ளை முகத்தை உடைய கருங்குரங்கு, பார்ப்பொடு பனிப்ப - குட்டிகளோடு குளிரால் நடுங்கும்படி, படுமழை பொழிந்த சாரல் - ஒலிக்கின்ற மழை பொழிந்த மலைச் சாரலை உடைய, அவர் நாடு குன்றம் - அத் தலைவரது நாட்டில் உள்ள குன்றத்தை, நோக்கினேன் - பார்த்தேன்; அதனால், நுதல் - ஒளி இழந்து பசப்பூர்ந்த என் நெற்றி, பண்டை அற்றோ - பசப்பூராத பழைய தன்மை உடைய தாயிற்றோ? கண்டிசின் - பார்ப்பாயாக.
(முடிபு) தோழி, அவர் நாட்டுக் குன்றம் தோக்கினென்; நுதல் பண்டையற்றோ? கண்டிசின்.
(கருத்து) தலைவருடைய குன்றத்தை நோக்கி ஆற்றி இருப்பேன்.
(வி-ரை.) தலைவன் பிரியுங் காலத்தில் தலைவி வேறுபட்டாள். அவள் நுதல் பசப்பூர்ந்தது. அது கண்ட தோழி, "இப்பொழுதே நின் வண்ணம் வேறுபடுகின்றது. தலைவன் பிரிந்திருக்கும் காலம் முழுதும் ஆற்றும் ஆற்றல் நின்பால் உளதோ?" என்று வினவத் தலைவனது குன்றத்தை நோக்கி ஊக்கம் பெற்ற தலைவி, "இப்பொழுது என் நுதலைப் பார்; பழைய விளக்கம் அதன்பால் உண்டாயிற்றன்றே. இங்ஙனமே தலைவர் குன்றத்தைப் பார்த்துப் பார்த்து ஆற்றுவேன்" என்று கூறினாள்.
மழை பொழிந்த கார்காலம் ஆதலின் மயிலினம் அகவின. மழைக்குக் குரங்குகள் நடுங்கும்; அங்ஙனம் நடுங்கி ஒடுங்கி இருக்கும் இருப்பைக் கூரலிருக்கை (நற். 181:7) என்றும் குன்னாக்கல் ( நெடுநல். 9.ந.) என்றும் கூறுவர்;
| "மாமேயன் மறப்ப மந்தி கூர" (நெடுநல். 9); |
| "மடவ மயில்கூவ மந்திமா கூர" (கைந்நிலை. 36.) |
படுமழை - தாழ்ந்த மழை எனலும் பொருந்தும்.
ஒப்புமைப் பகுதி 2-3. மழைக்குக் குரங்கு அஞ்சுதல்: "மழையென்றஞ்சிச், சிலமந்தி யலமந்து மரமேறி முகில்பார்க்குந் திருவையாறே" ( தே. திருஞா.)"மந்திதுயி லுற்றமுழை வன்கடுவ னங்கத், திந்திய மவித்ததனி யோகியினிருந்த" (கம்ப. கார்காலப். 76.) 5. கண்டிசின்: குறுந்.240:5.4-5.தலைவனது குன்றத்தை நோக்கித் தலைவி உவத்தல்: குறுந். 240:6-7, ஒப்பு.
(249)