கபிலர். (பி-ம்) 2. ‘தானவன்’ 3. ‘காஅல’ 5. ‘முண்டுதாம்’
(ப-ரை.) தோழி , தான் மணந்த ஞான்று - தலைவன் என்னைக் களவில் மணந்த காலத்தில், யாரும் இல்லை - சான்றாவார் வேறு ஒருவரும் இலர்; தானே கள்வன் - தலைவனாகிய கள்வன் ஒருவன்றான் இருந்தனன்; தான் அது பொய்ப்பின் - அங்ஙனம் இருந்த தலைவன் அப்பொழுது கூறிய சூளுறவினின்றும் தப்பினால், யான் எவன் செய்கு-நான் யாது செய்ய வல்லேன்! ஒழுகு நீர்ஆரல் பார்க்கும் - ஓடுகின்ற நீரில் ஆரல் மீனின் வரவை உண்ணும் பொருட்டுப் பார்த்து நிற்கும், தினைதாள் அன்ன- தினையின் அடியைப் போன்ற, சிறு பசு கால - சிறிய பசிய கால்களை உடைய, குருகும் உண்டு - நாரையும் இருந்தது.
(முடிபு) தலைவன் மணந்த ஞான்று யாரும் இல்லை; தானே; தான் அது பொய்ப்பின் எவன் செய்வேன்! குருகும் உண்டு.
(கருத்து) தலைவன் தான் கூறியபடி இன்னும் வரைந்து கொண்டானல்லன்.
(வி-ரை.) யாருமென்றது அறிவுடையோரை. தானே: ஏகாரம் பிரிநிலை. பிறர் அறியாவாறு வந்து தன் நலத்தைக் கவர்ந்து கொண்டு சென்றவ னாதலின் கள்வன் என்றாள். ‘அது’ என்றது, ‘நின்னைப் பிரியேன்; பிரியின் ஆற்றேன்’ என்றும், ‘நின்னை விரைவில் மணந்து கொள்வேன்’ என்றும் கூறிய சூளுறவை (குறிஞ்சிப். 208-10, உரை); அது : நெஞ்சறி சுட்டு. பார்க்கும் - உண்ணும் பொருட்டுக் கூர்ந்து பார்த்துக் கொண்டே நிற்கும். குருகும் உண்டும்: உம்மை இழிவு சிறப்பு; அஃது இருந்தும் சான்றாகும் தகுதி பெற்றதன்றென்னும் நினைவிற்று.
செய்கோ: ஓகாரம், அசை நிலை. ஞான்றே: ஏகாரம், அசை நிலை.
என் நலத்தைப் பிறர் அறியாவாறு கவர்ந்த கள்வன்தன் வாய் மொழியின்படி செய்திலன்; ‘நீ இங்ஙனம் கூறினையன்றே; அதனை நிறைவேற்றாதது என்?’ என்று தொடுத்து வினாவுதற்கு ஏற்ற சான்றும் இல்லை; அங்கே இருந்தது கரிபோதற்குத் தகாத நாரை ஒன்றே; அஃதும் ஆரன் மீனை நோக்கிய கருத்தினதாதலின் அவன் சூளுறவைக் கேட்டிராது. இதற்கு என் செய்வேன் என்பது தலைவியின் கருத்தாகக் கொள்க.
ஆரல் பார்க்கும் நாரை உண்டு என்றமையின் இக் களவுக் கூட்டம் நீர்த்துறைக்கண் நிகழ்ந்தது என்பது பெறப்படும்.
தோழியென்ற விளி முன்னத்தாற் போந்தது.
‘தாம் மணந்த ஞான்றே’ என்ற பாடத்திற்கு, அவன் மணந்த நிகழ்ச்சியை எண்ணிப் பெருமிதம் கொண்ட தலைவி தாமென்று பன்மையால் கூறி, கள்வனாதலைக் கூறுகையில் உண்டான செறல் பற்றித் தான் என்று ஒருமையால் கூறியதாகக் கொள்க; ‘‘எனைத்துணைய ராயினு மென்னாந் தினைத்துணையும், தேரான் பிறனில் புகல்” (குறள்,144) என்புழிப்போல.
(மேற்கோளாட்சி) 3-5. பன்மை ஒருமை வழுவமைதி (தொல். எச்ச. 66, இளம்); பன்மை ஒருமை மயக்கம் (திருச்சிற். 108, 123 பேர்); பன்மை ஒருமைப்பால் வழுவமைப்பாகக் கொள்ளுதற் கியலாது (நன். 338, மயிலை.); காலவென்பது பெயரெச்ச வினைக் குறிப்புச் சொல்; உண் டென்பது குறிப்புணர்த்தி நிற்றலின் ஒருமைச்சொல் (தொல். முதற் சூத்திரவிருத்தி).
‘இன்னும் இதனானே பன்மை சுட்டிய பெயர்ச் சொல், ஒருமையோடு இயைபின்றி இயைதலின் வழுவாயமைவதூஉங் கொள்க. குருகென்பது இயற் பெயராதலின் அதன்கட் பன்மையோடு காலவென்பது இயைந்து காலனவாகிய குருகுகள் என நிற்பின், அஃது உண்டென்னும் ஒருமைக்கு ஏலாமையின், குருகென்பது ஒருமையாயே நின்றதாதலின் வழுவேயாம்; கள்வன் தானொருவனுமே, வேறு சிலர் ஆண்டில்லை என்று கூறுகின்றாள், இரை தேரும் மனக் குறிப்புடைமையிற் கேளாது, சிறிது கேட்டதாயினும் கொலைசூழ் குருகாதலின் கூறுவதும் செய்யாது, இத் தன்மைத்தாய குருகும் உண்டென்று கூறுதலின் உண்டென்று ஒருமை வாசகத்தால் கூறினார்” (தொல். எச்ச.65, ந.)
மு. அவன் புணர்வு மறுத்தல் என்னும் மெய்ப்பாடு வந்தது (தொல். களவு.21, இளம்.); ‘இதனுள், யானெவன் செய்கோவெனத் தோழி வினவாக் காலத்து அவன் தவற்றை வரைவிடை வைத்தலின் ஆற்றாமைக்குத் தலைவி தானே அறிவித்தாள்’ (தொல். களவு.21, ந.); தலைமகன் இகந்தமை தலைமகள் பாங்கிக்கு இயம்பியது (நம்பி.176; இ.வி. 533); உண்டென்பது ஐம்பால் மூவிடத்திற்கும் வரும் (நன். 339, சங்.); உண் டென்பது யாண்டும் அஃறிணை ஒருமையையே உணர்த்தி நிற்குமெனக் கூற வேண்டுவதில்லை (இ.வி. 240).
ஒப்புமைப் பகுதி 1. தலைவனைக் கள்வனென்றல் (குறுந். 318:8); (நற். 28:4); “இவனென் னலங்கவர்ந்த கள்வ னிவனெனது, நெஞ்ச நிறையழித்த கள்வன்” (முத். 102); “காடுடைய சுடலைப் பொடி பூசி யென்னுள்ளங்கவர் கள்வன்” (தே.திருஞா.)
2. பொய்த்தல்: குறள். 293. தலைவன் பொய்த்தல்: “பொய்வ லாளன்” (குறுந். 30:2); “இவன், பொய்பொதி கொடுஞ் சொல்” (நற். 200: 10-11); “தானுற்ற சூள்பேணான் பொய்த்தான் மலை” (கலி. 41:19-20); “நும்மோ ரன்னோர் மாட்டு மின்ன, பொய்யொடு மிடைந்தவை தோன்றின், மெய்யாண் டுளதோவிவ் வுலகத் தானே” (அகநா. 286:15-7).
1-2. தலைவன் சூளுறவு செய்தலும் அதனைப் பொய்த்தலும்: “பணையெழின் மென்றோ ளணைஇய வந்நாட், பிழையா வஞ்சினஞ் செய்த, கள்வனுங் கடவனும் புணைவனுந் தானே” (குறுந். 318:6-8).
5. குருகுமுண்டு: குறுந். 26:8; அகநா. 320:13-4; திவ். பெரிய திரு. 9.3:4. 4-5 களவுக் காலத்துப் பயிலும் இடத்தில் நாரை இருத்தல்: “இரைதேர் வெண்குரு கல்லதி யாவதும், துன்னல் போ கின்றாற் பொழிலே” (குறுந்.113:3-4) ஆரல் பார்க்கும் குருகு: (குறுந்.103:3. 114:4-5); “இரைதேர் நாரை”, “இரை தேருந் தடந்தா ணாரை” (நற்.35:6, 91:4); “நாரைக ளாரல் வார” (தே.திருநா. திருநனிபள்ளி).
3-5. நாரையின் காலுக்குத் தினைத்தாள்: “தினைத்தா ளன்ன செங்கா னாரை சேருந் திருவாரூர்” (தே. சுந்தர.).
(25)