இடைக்காடன். (பி-ம்.) 1. ‘மடவரல்வாழி’, ‘யாயினம்’; 2. ‘காலைமாரி’; 3. ‘ஆலுமாலின’;7. ‘நொதுமலர்’.
(ப-ரை.) இகுளை - தோழி, கழிந்த மாரிக்கு ஒழிந்த பழநீர் - சென்ற கார்காலத்தில் பெய்யாது எஞ்சி இருந்த பழைய நீரை, புது நீர் கொளீஇய - புதிய நீரைக் கொள்ளும் பொருட்டு, உகுத்தரும் - சொரிகின்ற, நொதுமல் வானத்து -அயன்மையை உடைய மேகத்தினது, முழங்கு குரல் கேட்டு - ஒலிக்கின்ற ஓசையைக் கேட்டு, மஞ்ஞை மா இனம் - மயில்களாகிய கரிய கூட்டங்கள், காலம் மாரி பெய்தென -பருவத்துக்குரிய மழை பெய்தது என்று தவறாக எண்ணி, அதன் எதிர் - அம் மழைக்கு எதிரே, ஆலலும் ஆலின - ஆடுதலைச் செய்தன; பிடவும் பூத்தன - பிடாவும் மலர்ந்தன;மடவ - அவை அறியாமையை உடையன; கார் அன்று -இது கார்காலம் அன்று; ஆதலின்; நின் படர் தீர்க - நின் துன்பத்தை விடுவாயாக.
(முடிபு) இகுளை, கேட்டு மஞ்ஞையினம் ஆலின; பிடவும் பூத்தன;மடவ; காரன்று; நின் படர் தீர்க.
(கருத்து) இது கார்காலம் அன்று.
(வி-ரை.) தலைவன் கார் காலத்தில் மீள்வதாகக் கூறிச் சென்றான். அக் காலம் வந்தும் அவன் வாராமையின் தலைவி துயர் கூர்ந்தாள். அது கண்ட தோழி, "இஃது அவர் கூறிச் சென்ற கார்ப்பருவம் அன்று"என்றாள். "மழை பெய்கின்றது; மயில் ஆடுகின்றது; பிடா மலர்கின்றது.இவை கார்ப் பருவத்திற்கு உரியன அல்லவோ?" என்று வினாவிய தலைவிக்குத் தோழி கூறியது இது.
மடவ: இந்நூல், 66, வி-ரை பார்க்க. வாழி: அசை நிலை.
மாயினம் - கரிய திரள்; "மாயிருஞ் சோலை" (குறுந். 232:6) என்புழிப் போல யகரம் பெற்றது. காலமாரி என்றது கார்காலத்து மழையை.பிடா கார்காலத்தில் மலர்வது.
ஒழிந்த - பெய்யாது எஞ்சிய. நொதுமல்வானம் என்றாள், தலைவிதுன்புறுவாள் என்பதை அறியாது முழங்குதலின்;
| "என்னெனப் படுங்கொ றோழி மின்னுபு |
| வானேர் பிரங்கு மொன்றோ வதனெதிர் |
| கான மஞ்ஞை கடிய வேங்கும் |
| ஏதில கலந்த விரண்டற்கென் |
| பேதை நெஞ்சம் பெருமலக் குறுமே" (குறுந். 164) |
என முன் வந்துள்ளது காண்க.
| "பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த |
| நன்மை பயக்கு மெனின்" (குறள். 292) |
என்பது பற்றித் தோழி கார்காலம் வரவும் அன்றென்று கூறினாள்.
மேற்கோளாட்சி மு. இகுளை வம்பென்றது (நம்பி. 170.)
ஒப்புமைப் பகுதி 1. மடவ: நற். 316:1. மஞ்ஞையினம் மடவ:குறுந். 391.
2. காலமாரி: குறுந். 200:5, 3. ஆலலும் ஆலின: குறுந். 37:1; "மோக்கலு மோந்தனன்", "மருட்டலு மருட்டினன்", "தொழலுந்தொழுதான் றொடலுந் தொட்டான்" (கலி. 54:8-14, 55:19.) பிடவு கார்காலத்தில் மலர்தல்: "சேணாறு பிடவமொடு" (முல்லைப், 25); "பூவலர் குரவோடும் புடைதவழ் பிடவீனும், மாவலர் சொரிசூழல்" (கம்ப. வனம்புகு.7.)
1-3. மயில் வம்பமழையைக் கண்டு ஆலுதல்: "பொய்யிடி யதிர்குரல் வாய்செத் தாலும், இனமயின் மடக்கணம் போல, நினைமருள் வேனோ வாழியர் மழையே" (நற். 248:7-9.) மஞ்ஞையும் பிடவும் மடவ:" பிடவங் குருந்தொடு பிண்டி மலர, மடவ மயில்கூவ" (கைந்நிலை, 36.)
5. பழநீர்:குறுந். 220:1, 261:1. மு.குறுந். 66; நற். 99.
(251)