(பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனை ஏற்றுக் கொண்ட தலைவியை நோக்கி, "நீ சிறிதும் மாறுபாடின்றித் தலைவனை ஏற்றது என்?" என்ற தோழிக்கு,"அவன் பழியஞ்சுபவன்; ஆதலின் அவன் பழியை எடுத்துரையாது உடம்பட்டேன்" என்று தலைவி கூறியது.)
 252.   
நெடிய திரண்ட தோள்வளை ஞெகிழ்த்த  
    
கொடிய னாகிய குன்றுகெழு நாடன் 
    
வருவதோர் காலை யின்முகந் திரியாது 
    
கடவுட் கற்பி னவனெதிர் பேணி 
5
மடவை மன்ற நீயெனக் கடவுபு  
    
துனியல் வாழி தோழி சான்றோர் 
    
புகழு முன்னர் நாணுப 
    
பழியாங் கொல்பவோ காணுங் காலே. 

என்பது தலைமகன் வரவு அறிந்த தோழி, அவர் நம்மை வலிந்து போயினார்க்கு எம் பெருமாட்டி தீயன கடிந்து (பி-ம். கடந்து) ‘‘நன்காற்றினாய்" என்றாட்குக் கிழத்தி உரைத்தது.

    (வலிந்து - மாறுபட்டு (தக்க. 317), தீயன - வாயில் மறுத்தலும், பழி கூறலும் போல்வன. நன்கு - நன்மை; என்றது இன் முகம் கொண்டு எதிரேற்றதை.)

கிடங்கிற் குலபதி நக்கண்ணன் (பி-ம். கிடங்கிற் குலபதினைக் கண்ணன்.)

    (பி-ம்.) 1. ‘நெகிழக்’; 4. ‘னவனே பேணி’; 7. ‘முன்னர் நானும்’.

    (ப-ரை.) தோழி--, நெடிய திரண்ட தோள்வளை ஞெகிழ்த்த - நெடுமையையும் திரட்சியையும் உடைய தோள்களில் உள்ள வளைகளை நெகிழச் செய்த, கொடியனாகிய குன்றுகெழு நாடன் - கொடுமையை உடையவனாகிய குன்றுகள் பொருந்திய நாட்டை உடைய தலைவன், வருவதோர் காலை - பரத்தையர் வீட்டினின்று வருங்காலத்தில், இன்முகம் திரியாது - இனிய முகம் வேறுபடாமல், கடவுள் கற்பின் - தெய்வத் தன்மையை உடைய கற்பினால், அவன் எதிர் பேணி - அவனை எதிர்முகமாகச் சென்று உபசரித்து,நீ- மன்ற மடவை - நிச்சயமாக அறிவில்லாயாயினை, என கடவுபு - என்று வினாவி, துனியல் - வருத்தமுறாதே;சான்றோர் - அறிவானமைந்த பெரியோர், புகழும் முன்னர் -தம்மைப் புகழ்வதற்கு முன்னரும், நாணுப - நாணுவர்; அத்தகையோர், காணுங்கால் - ஆராயு மிடத்து, பழி யாங்கு ஒல்ப - பழிச் சொல்லை யாம் கூற எங்ஙனம் பொறுப்பர்?

    (முடிபு) தோழி, மடவை நீயெனக் கடவுபு துனியல்; சான்றோர் புகழு முன்னர் நாணுப; பழி யாங்கு ஒல்ப?

    (கருத்து) தலைவன் பழிக்கு அஞ்சும் இயல்பினனாதலின் நான் அவனை ஏற்றுக் கொண்டேன்.

    (வி-ரை.) ‘நெடிய' என்றது முதல் ‘நீ' என்றது வரையிலுள்ளன தோழி கூற்றைத் தலைவி கொண்டு கூறியவை.

    நெடுமையும் திரட்சியும் தோளுக்கு அடை. கொடியன் - தன்னால்தலைவிக்கு உண்டாகும் நோயறியாத கொடுமையை உடையவன். இன்முகந்திரியாதென்றது முகனமர்ந்து எதிர் கொண்டதை உணர்த்தியது. கடவுட் கற்பு - மழை தருதல் முதலிய தெய்வத் தன்மையை உடைய கற்பு; அருந்ததி போன்ற கற்பெனலும் ஆம் (அகநா. 16:18.)

    திரியாது பேணி மடவையென வினை முடிவு செய்க. வாழி: அசை நிலை. சான்றோரின் இயல்பு இதுவென உலகின்மேல் வைத்துக் கூறினும் தலைவி கருதியது தலைவனையே என்க. இதனால் தலைவன் சான்றோன் என்பதையும், பழிக்கு நாணுபவன் என்பதையும் புலப்படுத்தினாள். ஓகாரமும் ஏகாரமும் அசை நிலைகள்.

    ஒப்புமைப் பகுதி 1. தோள்வளை நெகிழ்தல்: குறுந். 50:4-5, ஒப்பு.

    2. தலைவனைக் கொடிய னென்றல்: குறுந். 26:8, ஒப்பு.

    1-2. தோள்வளை நெகிழ்த்த நாடன்: "பணைத்தோ ளெல்வளைஞெகிழ்த்தவெங் காதலர்" (நற். 193:6)

    4. கடவுட் கற்பு: அகநா. 184:1.

    5. மடவை மன்ற: நற். 34:11, 183:6; அகநா. 27:6; பெருங். 1. 47:251.

    6-7. சான்றோர் தம்புகழ் கேட்பின் நாணுதல்: "தம்புகழ் கேட்டார்போற் றலைசாய்த்து மரந்துஞ்ச" (கலி. 119:6); "தன்பெயரா கலினாணி", "பரந்தோ ரெல்லாம் புகழத் தலைபணிந், திறைஞ்சி யோனே குருசில்" (புறநா. 152:22, 285:13-4); "பிறர்தன்னைப் பேணுங்கானாணலும்" (திரிகடு. 6.)

    8. பழிக்குத் தலைவன் அஞ்சுதல்: குறுந். 143:2.

(252)