(வினைமேற் சென்ற தலைவன் தன் மாட்டுள்ள குறித்த இடத்தின்கட் செல்லாமல் இடையே மீள்வன் என்று கவன்ற தலைவியை நோக்கி, "அவர் தாம் செல்லும் பாலை நிலத்தில் யானை தன் சுற்றத்தைப் பாதுகாக்கும் காட்சியைக் கண்டு, நாமும் நம் இல்லறக் கடன் இறுப்பதற்கு நம் முயற்சி முற்றல் வேண்டும் என்று செல்வார்" என்று தோழி கூறியது.)
 255.    
பொத்தில் காழ வத்த யாஅத்துப்  
    
பொரியரை முழுமுத லுருவக் குத்தி 
    
மறங்கெழு தடக்கையின் வாங்கி யுயங்குநடைச் 
    
சிறுகட் பெருநிரை யுறுபசி தீர்க்கும் 
5
தடமருப் பியானை கண்டனர் தோழி 
    
தங்கட னிறீஇய ரெண்ணி யிடந்தொறும்  
    
காமர் பொருட்பிணிப் போகிய 
    
நாம்வெங் காதலர் சென்ற வாறே. 

என்பது இடை நின்று மீள்வர் எனக் கவன்ற கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது.

கடுகு பெருந்தேவன்.

    (பி-ம்) 3. ‘யியங்குநடை’; 5. ‘கண்டன’; 6. ‘கடன்கடனிறீஇய’; 7. ‘போதிய’.

    (ப-ரை.) தோழி--, தம் கடன் இறீஇயர் - தம்முடைய கடமையை நிறைவேற்றும் பொருட்டு, எண்ணி - கருதி, இடந்தொறும் - இடங்கள் தோறும், காமர் பொருள் பிணி போகிய -விருப்பத்தை உடைய பொருண் முயற்சிக்கண்உள்ள உள்ளப் பிணிப்பினால் சென்ற, நாம் வெம் காதலர் - நாம் விரும்பும் தலைவர், சென்ற ஆறு - நம்மைப் பிரிந்து சென்றவழியில், பொத்து இல் காழ - புரையற்ற வயிரத்தைஉடையனவாகிய, அத்தம் யாத்து - அருவழியில் நின்ற யாமரங்களின், பொரி அரை முழுமுதல் - பொரிந்த திரண்ட அடியை, உருவ - உருவும்படி, குத்தி - தன் கொம்பால் குத்தி, மறம் கெழு - வன்மை பொருந்திய, தட கையின் வாங்கி - வளைந்த கையினால் கொண்டு தந்து, உயங்கு நடை - வருந்திய நடையையும், சிறுகண் - சிறிய கண்களையும் உடைய, பெருநிரை - பெரியயானை வரிசையின், உறுபசி தீர்க்கும் - மிக்க பசியைத் தீர்க்கின்ற, தட மருப்பு யானை - வளைந்த கொம்பை உடைய ஆண் யானையை, கண்டனர் - கண்டார்.

    (முடிபு) தோழி, இறீஇயர் எண்ணிப் போகிய காதலர் சென்றவாற்றில், யானை கண்டனர்.

    (கருத்து) தலைவர் வினைமுற்றியே மீள்வர்.

    (வி-ரை.) பொத்து - பொந்து, உட்புரை. காழ் - வயிரம், அத்த யா - சிவந்த யாமரமுமாம்; "செந்நிலையா" (அகநா. 33:3.) பாலை நிலமாதலின் நீரின்றி யாவின் அரை பொரிந்தது. தடமருப்பு யானையாதலின் குத்தியது கோட்டாலென்று கொள்க. நிரை என்றது பிடியும் கன்றுகளுமாகிய யானை வரிசையை.

     "குழூஉப்புறந் தருதல் குஞ்சரத் தியல்பே" என யானையின் இயல்பை விதந்தோதுவர். இங்ஙனம் யானைக் கூட்டத்தைப் பாதுகாக்கும் களிற்றை ஏந்தல் எனவும், யூதநாதன் எனவும் வழங்குவர்; இந்நூல் 180-ஆம்செய்யுளைப் பார்க்க.

     காண்பாரென்னாது கண்டனர் என்றது துணிவு பற்றி. தம் கடன் என்றது, தம் சுற்றத்தாரைப் பாதுகாத்தலும் தம்பால் இரப்பார்க்கு ஈதலுமாகிய செயல்களை. அவை செய்யப் பொருள் வேண்டுமாதலின் காதலர் சென்றார்;

   
"அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும்  
   
 பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும் 
   
 புரிவமர் காதலிற் புணர்ச்சியுந் தருமெனப் 
   
 பிரிவெண்ணிப் பொருள்வயிற் சென்றநங் காதலர்"         (கலி. 11:1-4),  
   
"கேள்கே டூன்றவுங் கிளைஞ ராரவும் 
   
 கேளல் கேளிர் கெழீஇயின ரொழுகவும் 
   
 ஆள்வினைக் கெதிரிய வூக்கமொடு"          (அகநா. 93:1-3)  

என்பவற்றைக் காண்க.

    காமர் - காமம் மருவிய என்பதன் விகாரமாக்கி, விருப்பம் பொருந்திய எனப் பொருள் உரைத்தலும் பொருந்தும். பொருட் பிணி - பொருளிடத்துநெஞ்சு பிணித்தல் (கலி. 4:25, ந.)

    தன் கடனை அறிந்து அதனை முற்ற ஆற்றும் யானையைக் காண்பாராதலின், இல்லறத்திற்கு உரியன ஆற்றும் பொருட்டுப் பொருள் தேடச் சென்ற அவர் தம் வினைமுற்றிய பின்னரே மீள்வர் என்பது குறிப்பு.

    அறம் புரிவதில் தலைவியும் மனம் ஒத்த தன்மையினளாகித் தலைவனுக்குத் துணை செய்பவளாதலின், "அவர் இடை நின்று மீண்டால், அறம் செய்தலிற் குறை நேருமன்றே" எனக் கவன்றாள்.

    தாம் சென்ற இடத்துக் காட்சிகள் அவருடைய கடனை நினைவுறுத்து மாதலின் சோர்வின்றி எண்ணிய எண்ணியாங்கெய்தி வருவரெனத் தோழி துணிவுறுத்தினாள்.

    ஒப்புமைப் பகுதி 1. முழுமுதல்: குறுந். 214:5, 361:4.

    4. யானையின் நிரை: குறுந். 180:2, ஒப்பு.

    1-5. யானையும் யாமரமும்: குறுந். 37:2-4, ஒப்பு.

    7. பொருட்பிணி: குறுந். 344:7, 350:8; நற். 46:11, 71:1, 113:5; ஐங். 355:2; கலி.4:25; அகநா.43:14, 51:8.

    8. நாம் வெங் காதலர்: கலி. 27:26. மு.நற். 186:9-10.

(255)