(பொருள்வயிற் பிரிய எண்ணிய தலைவன் தன் கருத்தைத் தலைவிக்கு உணர்த்த, அவள் வெய்துற்று அழுதாளாக, அது கண்ட தலைவன் செலவு தவிர்ந்து கூறியது.)
 256.   
மணிவார்ந் தன்ன மாக்கொடி யறுகை 
    
பிணிகான் மென்கொம்பு பிணையொடு மார்ந்த 
    
மானே றுகளுங் கானம் பிற்பட 
    
வினைநலம் படீஇ வருது மவ்வரைத் 
5
தாங்க லொல்லுமோ பூங்குழை யோயெனச் 
    
சொல்லா முன்னர் நில்லா வாகி 
    
நீர்விலங் கழுத லானா 
    
தேர்விலங் கினவாற் றெரிவை கண்ணே. 

என்பது பொருள் விலக்கப்பட்ட கிழவன் செலவழுங்கியது.

    (பொருள் முயற்சியினின்றும் விலக்கப்பட்ட தலைவன் செல்லுதலினின்றும் நீங்கியது.)

ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

     (பி-ம்.) 2. ‘மமர்ந்த’, ‘மாந்த’; 3. ‘கான்பின்பட’; 7. ‘கழிதலானா’; 8. ‘றெரியிழை கண்ணே’.

    (ப-ரை.) பூ குழையோய் - பொலிவை உடைய குழையை அணிந்தோய், மணிவார்ந்தன்ன - நீல மணி ஒழுகினாற் போன்ற, மா கொடி அறுகை - கரிய கொடியாகிய அறுகினது, பிணி கால் மெல் கொம்பு - பிணிப்பு நீங்கிய மெல்லிய தண்டை, பிணையொடும் ஆர்ந்த - பெண் மானோடு வயிறு நிரம்ப உண்ட, மான் ஏறு உகளும் - ஆண் மான் துள்ளுகின்ற, கானம் பின்பட - காடு பின்னாகச் சென்று, வினை நலம் படீஇ வருதும் - தொழில் நன்மை உண்டாகப் பெற்று மீண்டு வருவேம்; அ வரை - அக்காலத்தளவும், தாங்கல் ஒல்லுமோ - நின்னாற் பொறுத்திருத்தல் இயலுமோ? என சொல்லா முன்னர் - என்று நாம் சொல்லாமைக்கு முன்னமே, தெரிவை கண் - தலைவியின் கண்கள், நில்லா ஆகி - பழைய நிலையில் நில்லாமல் கலங்கி, நீர் விலங்கு அழுதல் ஆனா - நீரால் மாறுபடுதலை உடைய அழுகை அமையாவாகி, தேர் விலங்கின - எம் தேரைத் தடை செய்தன.

    (முடிபு) ‘பூங்குழையோய், கானம் பிற்பட வினைநலம் படீஇ வருதும்; தாங்கல் ஒல்லுமோ? எனச் சொல்லா முன்னர், தெரிவை கண்அழுதல் ஆனாவாகித் தேரை விலங்கின.

    (கருத்து) தலைவி என் பொருட்பிரிவுக்கு உடம்படாமையின் யான் செல்லேன்.

    (வி-ரை.) மணி - நீலமணி. பிணி என்றது அறுகினது இலை இளைதாக இருக்குங்கால் அமைந்துள்ள முறுக்கு. மென் கொம்பாதலின் ஆர்ந்தது. கானம் பிற்பட என்றது கானத்தைக் கடந்தென்றபடி. ஆண்டுச்செல்வேனாயினும் பிணைமானும் மானேறும் ஒன்றுபட்டு உகளும் காட்சி கண்டு மேற் செல்லாது மீள்வேன் என்பது குறிப்பு.

    வினைநலம்படுதல் - பொருள் முயற்சி முற்றுப் பெறுதல். வரை என்றது அளவு; அஃது ஈண்டுக் கால அளவு குறித்தது. தாங்கல் - பிரிவினால் உண்டாகும் துன்பங்களைப் பொறுத்தல். பூங்குழை - பூத்தொழில் அமைந்த குழை எனினுமாம்.

    நீர் விலங்கு அழுதல் - நீர் கண்ணில் உள்ள பாவையை மறைக்கின்ற அழுகை என்பதும் ஆம்; "பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு" (அகநா. 5:21.)

    கண் தேர் விலங்கினவென்று கூறினும், அவள் அழுதல் கண்டு நான் செலவு தவிர்ந்தேன் என்பது கருத்து. தெரிவை: தலைவி என்னும் பொருட்டாய் நின்றது.

    ஒப்புமைப் பகுதி 1. அறுகின் கொடிக்கு நீலமணி: "பழங்கன்று கறிக்கும் பயம்பம லறுகைத், தழங்குகுரல் வானின் றலைப்பெயற் கீன்ற, மண்ணுமணி யன்ன மாயிதழ்ப் பாவை" (அகநா. 136:11-3.)

    2-3. பிணையும் மானும் உகளுதல்: குறுந். 65:1-3, ஒப்பு. பிணையும் மானேறும்: குறுந். 319:1. 1-3. அறுகம்புல்லை மான் பிணையோடு உண்ணல்: அகநா. 23:7-9; பு.வெ. 277.

    5. காமந் தாங்குதல்: குறுந். 241:1. தாங்கல் ஒல்லுமோ: அகநா. 333:5.

(256)