(பரத்தையிற் பிரிந்த தலைவனை நோக்கி, "தலைவி அழகிழந்தாள்!ஆதலின் நினக்கு ஆகும் பயன் ஒன்றில்லை; ஈண்டு வாரற்க" என்று தோழி வாயில் மறுத்தது.)
   
 258.   
வாரலெஞ் சேரி தாரனின் றாரே 
    
அலரா கின்றாற் பெரும காவிரிப்  
    
பலராடு பெருந்துறை மருதொடு பிணித்த 
    
ஏந்துகோட் டியானைச் சேந்தன் றந்தை 
5
அரியலம் புகவி னந்தோட்டு வேட்டை 
    
நிரைய வொள்வா ளிளையர் பெருமகன்  
    
அழிசி யார்க்கா டன்னவிவள்  
    
பழிதீர் மாணலந் தொலைதல் கண்டே. 

என்பது (1) தோழி, தலைமகற்கு வாயில் மறுத்தது.

    (2) வாயில் நேர்ந்ததூஉமாம்.

பரணர்.

    (பி-ம்.) 1. ‘வாரலோ வாரலெஞ்சேரி’; 2. ‘பெருமா காவிரி’; 4. ‘சேந்தனுறந்தை’; 5. ‘அரியரி லம்புகவிளங்கோட்டு வேட்டை’; 7. ‘தொழுதன கண்ணே’.

    (ப-ரை.) பெரும-, காவிரி பலர் ஆடு பெருதுறை - காவிரி நதியினது பலர் நீராடுகின்ற பெரிய நீர்த்துறையின்கண் வளர்ந்த. மருதொடு பிணித்த - மருத மரத்தில் கட்டிய, ஏந்து கோடு யானை - மேல் உயர்ந்த கொம்பை உடைய யானைகளை உடைய, சேந்தன் தந்தை - சேந்தனுடைய தந்தையும், அரியலம்புகவின் - கள்ளாகிய உணவையும், அம் தோடு வேட்டை - அழகிய விலங்குத் தொகுதியை வேட்டையாடும் தொழிலையும், நிரையம் ஒள்வாள் - பகைவருக்கு நரக வாழ்வைப் போன்ற துன்பத்தைத் தரும் ஒள்ளிய வாளையும் உடைய, இளையர் பெருமகன் - இளைய வீரர்களுடைய தலைவனுமாகிய, அழிசி ஆர்க்காடு அன்ன - அழிசியினது ஆர்க்காடென்னும் நகரத்தைப் போன்ற, இவள் பழி நீர் மாண் நலம் - இவளது குற்றந் தீர்ந்த மாட்சி மைப்பட்ட அழகு, தொலைதல் கண்டு - அழிதலைக் கண்ட பின், எம் சேரி - எமது சேரிக்கண், வாரல் - வருதலை யொழிவாயாக; நின் தார் தாரல் - நின் மாலையைத் தருதலை யொழிக; அலர் ஆகின்று - பழிமொழி உண்டாகின்றது.

    (முடிபு) பெரும, இவள் நலம் தொலைதல் கண்டு வாரல்; தாரல்.

    (கருத்து) நீ ஈண்டு வாரற்க.

    (வி-ரை.) இவள் நலம் தொலைதல் கண்டாய்; இனி இவள்பால் நினக்கு இன்பம் பிறவாது; ஆதலின் வாரற்க என்று வாயில் மறுத்தாள்.

    அலர் - பரத்தையர் கூறும் பழிமொழி; ‘தலைவி தலைவனைத் தன்பாலே இருத்திக் கொண்டாள்' எனக் கூறுவது. ஆற்றங்கரைகளிலும் துறைகளிலும் மருத மரங்களை வளர்த்தல் வழக்கம்.

    அரியலம் புகவு: அம் சாரியை. புகவு - உணவு; புகா என்பதன் விகாரம். அரியலம் புகவின் இளையரென்க. இது வீர பானம்; "கள்ளி னிரும்பைக் கலஞ்செல வுண்டு" (மதுரைக். 228) என்பதையும் அதன் உரையையும் பார்க்க. தோடு - விலங்கின் தொகுதி. நிரைய வொள்வாள் -பகைவருக்கு நரக வேதனையை உண்டாக்கும் ஒள்ளிய வாள்;

   
"நிரைகளி றொழுகிய நிரைய வெள்ளம்"          (பதிற். 15:4.)  
   
"நிரயத் தானை"                          (சிலப். 26:37.)  

என்பவற்றின் உரையைப் பார்க்க.

    சேந்தன் என்பவனுடைய தந்தை அழிசி என்பதும் அவனுக்கு ஆர்க்காடு உரியது என்பதும்,

   
"நோவினி வாழிய நெஞ்சே மேவார் 
   
 ஆரரண் கடந்த மாரி வண்மகிழ்த் 
   
 திதலை யெஃகிற் சேந்தன் றந்தை 
   
 தேங்கமழ் விரிதா ரியறே ரழிசி 
   
 வண்டுமூசு நெய்த னெல்லிடை மலரும் 
   
 அரியலங் கழனி யார்க்கா டன்ன 
   
 காமர் பணைத்தோ ணலம்வீ றெய்திய 
   
 வலைமான் மழைக்கட் குறுமகள் 
   
 சின்மொழித் துவர்வாய் நகைக்குமகிழ்ந் தோயே"          (நற். 190)  

என்னும் பாட்டினாலும் அறியப்படுகின்றன.

    இரண்டாவது கருத்து: ‘வாரல் எம் சேரி; தாரல் நின்தார்; இவள் நலம் தொலைதல் கண்டு அலராகின்று' என்று கூட்டி, ‘எமக்கு நீ வருதலும் நின்தார் தருதலும் உடன்பாடல்லவேனும். ஊரினர் கூறும் பழிமொழியை அஞ்சினேம்; ஆதலின் நினக்கு உடம்பட்டேம்' எனக் கூற்றெச்சம் வருவித்துரைக்க.

    ஒப்புமைப் பகுதி 1. சேரி: குறுந். 231:1.

    தலைவி தலைவனது தாரை விரும்பாமை: "பல்லார்தோடோய்ந்து வருதலாற் பாய்புனல், நல்வய லூரநின் றார்புலால்" (தொல். கிளவி.56, ந. மேற்.); "ஒல்லேங் குவளைப் புலாஅன் மகன்மார்பிற், புல்லெருக்கங்கண்ணி நறிது" (தொல். கிளவி.55, சே. மேற்.)

    2. அலராகின்றது: ஐங். 132:3; அகநா. 96:18.

    ஆகின்று: குறுந். 15:4, ஒப்பு.

    3. பெருந்துறை மருது: "உளைப்பூ மருதத்துக் கிளைக்குரு கிருக்கும், தண்டுறை", "முடமுதிர் மருதத்துப் பெருந்துறை", "மருதுயர்ந் தோங்கியவிரிபூம் பெருந்துறை", "கரைசேர் மருதம்" (ஐங். 7:4-5, 31:3, 33:2, 74:3); "திருமருத முன்றுறை", "திருமருத நீர்ப்பூந் துறை", "தீம்புனல் வையைத் திருமருத முன்றுறையால்", "திருமருத முன்றுறை முற்றங் குறுகி" (பரி. 7:83, 11:30, 22:45, திரட்டு, 2:72); "திசை திசை தேனார்க்குந் திருமருத முன்றுறை" (கலி. 26:13); "வருபுனல் வையை வார்மண லகன்றுறைத், திருமரு தோங்கிய விரிமலர்க் காவின்", "துறையணி மருதமொடு" (அகநா. 36:9-10, 97:19); "உயர்சினை மருதத் துறை" (புறநா. 243:6); "வருபுனல் வையை மருதோங்கு முன்றுறை" (சிலப். 14:72.)

    5-6. "மட்டப் புகாவிற் குட்டுவ ரேறே" (பதிற். 90:26.)

    8. மாணலம்: குறுந். 74:5, ஒப்பு.

(258)