பரணர். (பி-ம்.) 6. ‘வாய்போலப்’; 8. ‘நின்னுயிர் நானே’.
(ப-ரை.) மழை சேர்ந்து எழு தரும் - மேகங்கள் சேர்ந்து எழுந்த, மாரி குன்றத்து - மழையை உடைய மலையின் இடத்துள்ள, அருவி ஆர்ந்த - அருவிக்கு அருகில் பொருந்திய,தண் நறு காந்தள் முகை அவிழ்ந்து - தண்ணிய நறிய காந்தளரும்புகள் விரிந்து, ஆனா நாறும் நறுநுதல் - அமையாதனவாய் மணம் வீசுகின்ற நறிய நெற்றியையும்,பல் இதழ் மழை கண் - பல இதழை உடைய தாமரைப் பூவைப் போன்ற குளிர்ச்சியை உடைய கண்ணையும் உடைய, மாஅயோயே - மாமை நிறம் பொருந்தியோய், ஒல்வை ஆயினும் - நீ என் பிழையைப் பொறுப்பாயாயினும், கொல்வை ஆயினும் - அன்றிச் சினந்து கொல்வாயாயினும், நின் புரைமை - நினது உயர்வை, நீ அளந்து அறிவை - நீயே அளவிட்டு அறியும் ஆற்றலை உடையை; வாய்போல் பொய் மொழி - மெய்யைப் போலப் பொய் வார்த்தைகளை, கூறல் அஃது எவன் - கூறுதலாகிய அஃது என்ன பயனைத் தரும்? நின் வயின் - நின் திறத்து, நெஞ்சம் நன்று - தலைவனது நெஞ்சு நலமுடையது.
(முடிபு) மாஅயோயே, நின் புரைமை நீ அறிவை; பொய்ம்மொழி கூறல் எவன்? நன் வயினான் நெஞ்சம் நன்று.
(கருத்து) நான் அறத்தொடு நின்றதனால் நன்மையே விளையும்.
(வி-ரை.) மழை சேர்ந்தமையின் மாரியும், மாரியுடைமையின் அருவியும், அருவி இருத்தலின் தண்ணறுங் காந்தளும் உண்டாயின. நறுநுதல் - நன்மையை உடைய நுதலுமாம். பல்லிதழ்: தாமரை மலருக்கு ஆகுபெயர் ( குறுந். 5:5, வி-ரை.)
‘யான் செய்தது நின் உயர்வுக்கு ஏற்றதோ, அன்றோ என்பதை யான் அறியேன்; நீயே நின் உயர்வை அறிவாய். நான் செய்ய வேண்டுவதைத் துணிந்து செய்தேன்' என்றாள் தோழி. வாய்போற் பொய்ம்மொழி கூறலாவது, தலைவியின் வேறுபாடு கண்டு தாயர் ஆராய்ந்த பொழுது உண்மை கூறாமல் அவ்வேறு பாட்டுக்குப் பொய்க் காரணங்களை உரைத்தல். ‘அங்ஙனம் கூறுதலாற் பயனில்லையாதலின் நான் உண்மை யையே கூறினேன்’ என்று தான் அறத்தொடு நின்றதைக் குறிப்பித்தாள். எவனோ: ஓகாரம் அசை நிலை.
தலைவன் நின் திறத்து நல்ல நெஞ்சுடையன் என்றது, வரைந்து கொள்ளும் கொள்கை உடையன் என்பதை உணர்த்தியவாறு; அக்கொள்கை உடையனாதலின் அறத்தொடு நிற்பின் நலம் விளையும் என்பது தோழியின் உட்கிடக்கை.
நெஞ்சம் நன்றே - எனது நெஞ்சம் நன்றே எனலும் பொருந்தும்;‘யான் நன்மை கருதியே செய்தேன்' என்றபடி.
நன்றே: ஏகாரம் தேற்றம்.
ஒப்புமைப் பகுதி 2. அருவியார்ந்த காந்தள்: "நீரயற் கலித்த நெரிமுகைக் காந்தள்" (பரி. 14:13); "உயர்முகை நறுங்காந்த ணாடோறும் புதிதீன, அயனந்தி யணிபெற வருவியார்த் திழிதரும், பயமழை தலைஇய பாடுசால் விறல்வெற்ப" (கலி. 53:5-7.)
3. நுதலுக்கு மணம் உண்மை: குறுந். 22:5, ஒப்பு.
2-3. நுதல் காந்தளின் மணம் வீசல்: "சினையொண் காந்தணாறு நறுநுதல்" (அகநா. 338:7.)
4. பல்லிதழ் மழைக் கண்: குறுந். 5:5, ஒப்பு.
5-6. "அடுநை யாயினும் விடுநை யாயினும், நீயளந் தறிதிநின் புரைமை" (புறநா. 36:1-2.) 6-7. வாய்போற் பொய்ம்மொழி; அகநா. 3:14.
7. தலைவனது நல்ல நெஞ்சம்: குறுந். 265:6.
(259)