(தலைவியின் வேறுபாட்டுக்குக் காரணம் பிறிதோர் தெய்வமென்று கட்டுவிச்சியால் அறிந்த தாயர் முதலியோருக்குத் தோழி, “இவள் ஒரு தலைவனொடு நட்புப் பூண்டாள்; அவனை ஓர் ஆண் குரங்கும் அறியும்” என்று உண்மையைக் கூறியது.)
 26.    
அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை  
    
மேக்கெழு பெருஞ்சினை யிருந்த தோகை  
    
பூக்கொய் மகளிரிற் றோன்று நாடன்  
    
தகாஅன் போலத் தான்றீது மொழியினும் 
5
தன்கண் கண்டது பொய்க்குவ தன்றே 
    
தேக்கொக் கருந்து முள்ளெயிற்றுத் துவர்வாய் 
    
வரையாடு வன்பறழ்த் தந்தைக் 
    
கடுவனு மறியுமக் கொடியோ னையே. 

என்பது நற்றாயுஞ் செவிலித் தாயும் தலைமகளது வேறுபாடு கண்டு, இஃது எற்றினானாயிற்றென்று (பி-ம். வேறுபாடு கண்டார் எதனானாயிற்று என்று) கட்டுவிச்சியை வினவிக்கட்டுக் காண்கின்ற காலத்துத் தலைமகளது வேறுபாட்டிற்குக் காரணம் பிறிதோர் தெய்வம் என்று கூறக் கேட்டுத் தோழி அறத்தொடு நின்றது.

     (எற்றினான் - என்ன காரணத்தால், கட்டுவிச்சி - கட்டுப் பார்ப்பவள்; இந்நூல் 23-ஆம் பாட்டின் கருத்தையும் உரையையும் பார்க்க).

வெள்ளி வீதியார்.

    (பி-ம்.) 2. ‘மேக்கெழும் பெருஞ்சினை’ 6. ‘முத்துநிறை யொத்த முள்ளெயிற்று’, ‘முள்ளெயிற்றுவர்வாய்’ 7-8. ‘தந்தை கடுவனும்’.

    (ப-ரை.) அரும்பு அற மலர்ந்த -அரும்புத் தன்மை இல்லாமல் மலர்ந்த, கரு கால் வேங்கை - கரிய அடியை உடைய வேங்கை மரத்தின், மேக்கு எழு பெரு சினை - மேலே வளர்ந்த பெரிய கிளையில், இருந்த தோகை - இருந்த மயிலானது, பூ கொய் மகளிரின் - அதன் மலரைக் கொய்யும் மகளிரைப் போல, தோன்றும் நாடன் - தோன்றுதற்கு இடமாகிய நாட்டை உடைய தலைவன், தகாஅன் போல - இவளுக்கு உரியனாகும் தகுதி இல்லான் என்பது போல, தான் - கட்டுவிச்சி, தீது மொழியினும் - தெய்வத்தால் வந்ததென்று தீங்கானதைக் கூறினும், தேன் கொக்கு - தேமாவின் கனியை, அருந்தும் - உண்ணுகின்ற, முள் எயிறு துவர் வாய் - முள்ளைப் போன்ற கூரிய பற்களையும் செவ்விய வாயையும் உடைய, வரை ஆடு - மலைகளில் விளையாடும், வன் பறழ் தந்தை - வலிய குட்டியின் தந்தையாகிய, கடுவனும் - ஆண் குரங்கும், அ கொடியோனை - அந்தக் கொடியவனாகிய தலைவனை, அறியும்- ஆதலின் அது, தன்கண் கண்டது - தன் கண்ணாற் கண்ட நிகழ்ச்சியை, பொய்க்குவது அன்று - காணேன் என்று பொய் சொல்லாதது.

    (முடிபு) நாடன் தாகன்போலத் தான் தீதுமொழியினும் அக் கொடி யோனைக் கடுவனும் அறியும்; ஆதலின் கண்டது பொய்க்குவ தன்று.

    (கருத்து) இத் தலைவியின் நோய்க்குக் காரணம் ஒரு தலைவனோடு செய்த நட்பே ஆகும்.

    (வி-ரை.) அரும்பு முழுவதும் மலர்ந்த வென்றலுமாம்; அற - முழுவதும்; “நின்னையறப் பெறு கிற்கிலேன்” (அறநெறிச்.191) கருங்கால் - பெரிய அடியுமாம், மகளிர் வேங்கை மலரைக் கொய்து அணிந்து கொள்ளல் இயல்பு. நாடன் - குறிஞ்சி நிலத் தலைவன் (குறுந்.3:4, வி-ரை.) தகாஅன் போலவென்றது தகுதி உடையனாக இருக்கவும் தகானென்று சொல்லிப் புறக்கணித்தலைப் போல வென்றபடி. தலைவியின் கற்புக்கு இழுக்காதலின் ‘பிறிதோர் தெய்வத்தாலாயிற்று’ என்ற கட்டுவிச்சி கூற்றைத் தீது மொழிதல் என்றாள். அதுகாறும் தலைவன் வரையாமல் நீட்டித்ததை நினைந்தவளாதலின் கொடியோன் என்றாள்.

    கடுவனும்: உம்மை இழிவு சிறப்பு; இத்தகைய கடுவனும் அவனை அறிந்திருப்பக் கட்டுவிச்சியால் அழைக்கப்பட்ட தெய்வம் அறியாதது என்ன மடமை என்பது தோழியின் குறிப்பு.

    தேமா மரங்கள் செறிந்த சோலையின்கண் குட்டியும் ஆண் குரங்கும் அம்மரங்களில் உள்ள பழங்களைத் தின்று விளையாடும் பொழுதில் தலைவன் ஒருவன் தலைவிக்கு நண்பனானான் என்ற செய்தியைத் தோழி இதனால் தெரிவித்தாளாயிற்று.

    வேங்கை மேல் இருந்த தோகை பூக்கொய் மகளிரில் தோன்றும் நாடனென்றது, வேங்கையின் பூவைக் கொய்து அதன் அழகைக் கெடுக்கும் மகளிரைப் போல மயில் தோற்றினும் உண்மையில் அம் மரத்திற்கு மேலும் அழகைத் தந்து அமைவது போல, தலைவன் இப்பொழுது இவளது நலமழியச் செய்தவனாகத் தோற்றினும் வரைந்து கொள்வானேல் இவள் நலம் வளரச் செய்வான் என்னும் குறிப்பினது.

    (மேற்கோளாட்சி)2. சினை மரத்தோடு அடுத்து வந்தது (தொல்.மரபு.87 பேர்.).

    7. பறழென்பது குரங்கின் இளமைப் பெயர் (தொல்.மரபு.14, பேர்.); நிரைநேர்பு ஒன்றாமையின் இயற்சீர் வெண்டளையானது (தொல்.செய்.56, ந.).

    8. ஆண் குரங்கினைக் கடுவன் என்றல் தொன்றுதொட்ட வழக்கு (தொல்.மரபு. 68, பேர்.).

    மு. தலைவனைத் துறந்தான் போலவும் மறந்தான் போலவும் கருதித் தான் தீது மொழியினுமென, தோழி வினவாக் காலத்து அவன் தவற்றைத் தலைவி வரைவிடை வைத்தலின் ஆற்றாமையை அறிவித்தது (தொல். களவு. 21, ந.).

    (கு-பு.) இக் கருத்திற்கு, ‘தகான்போலத் தான்தீது மொழியினும் - தகுதியற்றான் கரிபொய்த்தலைப் போல என்னைப் புறக்கணிக்கும் சொற்களைத் தலைவன் சொல்லினும்’ என்று பொருள் கொள்ள வேண்டும் என்று தோன்றுகின்றது.

    ஒப்புமைப் பகுதி1. மு.நற்.112:2; புறநா.202:18.

    அரும்பற மலர்தல்: “ அரும்பற மலர்ந்த வாய்பூ மராஅத்து” (அகநா.257:6); “அரும்பற, வள்ளித ழவிழ்ந்த தாமரை” (புறநா.246:13-4).

    கருங்கால் வேங்கை : குறுந். 47:1, 343:5, நற்.151:8-9, 168:1, 257:5; ஐங். 219:1; திணைமா.26.

    1-2. வேங்கை மரத்தின் மேல் தோகை இருத்தல்: “பூத்த வேங்கை வியன்சினை யேறி, மயிலின மகவு நாடன்” (தமிழ்நெறி.மேற்.).

    1-3. வேங்கை மரத்தின் மேலுள்ள மயிலுக்குப் பூக்கொய்யும் மகளிர்: “விரிந்த வேங்கைப் பெருஞ்சினைத் தோகை, பூக்கொய் மகளிரிற்றோன்று நாடன்” (ஐங். 297:1-2) 5. கண்கண்டது பொய்க்குவதன்று: குறுந்.184:1. 6.தேக்கொக்கு: குறுந்.164:2, 201:2, அகநா.341:3, 348:2. மாம்பழம் இனியது: குறுந்.8:1, ஒப்பு. 8. கடுவனும் அறியும்: குறுந்.25:5.

     தலைவனைக் கொடியனென்றல்: குறுந்.252:2, 278:4, 367:1; நற்.28:4; அகநா.163:12, 369:10; தஞ்சை.212.

(26)