கழார்க் கீரன் எயிற்றி (பி-ம். கிழார்க் கீரனெயிற்றி.) (பி-ம்.) 1. ‘படுமழை’; 2. ‘விற்பெயற்’, ‘விற்பெயர்க்’; 5. ‘பொழுதினாணு’;8. ‘விழுமந்தானே’.
(ப-ரை.) தோழி-, காவலர் கணக்கு ஆய் வகையின் வருந்தி - நாழிகைக் கணக்கர் இரவில் காலக் கணக்கை ஆராயும் திறத்தைப் போல ஆராய்ந்து வருந்தி, நெஞ்சு புண் உற்ற விழுமத்தான் - நெஞ்சம் புண்பட்ட துன்பம் காரணமாக, பழமழை பொழிந்தென - பழைய மழை பொழிந்ததாக, பதன் அழிந்து உருகிய - செவ்வி அழிந்து ஒழுகிய, சிதடு காய் எண்ணின் - உள்ளீடு இல்லாத ஊமைக் காயை உடைய எட் பயிரை உடைய, சில் பெயல் கடைநாள் - சிறிய மழையை உடைய கார்ப் பருவத்தின் இறுதி நாட்களில், சேற்று நிலை முனைஇய - சேற்றின்கண் நிற்றலை வெறுத்த, செ கண் காரான் - சிவந்த கண்ணை உடைய எருமை, நள்ளென் யாமத்து - இருள் செறிந்த நடு இரவின் கண், ஐ என கரையும் - ஐயென்று ஒலிக்கும், அஞ்சு வரு பொழுதினானும் - அச்சம் உண்டாகின்ற காலத்திலும், என் கண் - என்னுடைய கண்கள், துஞ்சா - தூங்காவாயின.
(முடிபு) தோழி, வருந்தி உற்ற விழுமத்தான் பொழுதினானும் என்கண் துஞ்சா.
(கருத்து) தலைவனது வருகையை நோக்கி நான் இரவில் துயிலாதுஇருந்தேன்.
(வி-ரை.) பழமழை பொழிந்த காலத்தில் எள் பதன் அழிந்தது. பதன் அழிந்துருகுதல் உள்ளீடு அழுகி விடுதலால் ஒன்றும் இல்லையாதல்.
ஐயென: அநுகரணவொலி. தனிமைத் துன்பத்தை மிகுதிப் படுத்தலின் யாமத்தை அஞ்சுவரு பொழுதென்றாள். கரையும் பொழுதென இயைக்க.
காவலர் என்றது நாழிகைக் கணக்கரை. அவர் இரவில் துயிலாது நாழிகை வட்டிலைக் கூர்ந்து நோக்கி யாமக் கணக்கை அறிவிப்பர்; அவர்கள் துயிலாது இருத்தலைப் போல யானும் தலைவன் வரும் பொழுதை நினைந்து நினைந்து துயிலாது இருந்தேன் என்றாள். வருந்துதல் இன்னும் வந்திலரே என்றும், காவலர் ஆதியோர் கண்டனரோ என்றும் வருந்துதல்.
இதனால் தான் படும் துன்பத்தையும் அச்சத்தையும் கூறி, வரைதலே இதற்குப் பரிகாரம் என்று தலைவி புலப்படுத்தினாள்.
மேற்கோளாட்சி 3. முனைவென்னும் உரிச்சொல் முனிவென்னும் குறிப்பை உணர்த்தியது ( தொல். உரி. 89, இளம், 90, சே, தெய்வச். 88, ந,) ஆவென்னும் பெயர் எருமைக்கும் வந்தது ( தொல். மரபு. 60, பேர்.)
ஒப்புமைப் பகுதி1. பழமழை: குறுந். 251:5, ஒப்பு.
2. சில் பெயர் கடைநாள்: குறுந். 332:1. 3. காரான்: குறுந். 181:3, ஒப்பு.
செங்கட்காரான்: "செங்கணெருமை" (மலைபடு. 472), "செந்நோக்கெருமை" (ஐந். எழு. 46.) 3. மு. அகநா. 46:1.
4.நள்ளென் யாமம்: குறுந். 6:1, ஒப்பு. 160:4, ஒப்பு.
5-6. தலைவி துஞ்சாமை: குறுந். 6:4, ஒப்பு.
6-7. நாழிகைக் கணக்கர் கணக்காய்தல்: முல்லைப். 55-8; சிலப். 5:49, அடியார்; கம்ப. மாரீசன். 129.
(261)