(தாய் வெறியாட்டெடுக்கக் கருதி இருப்பதைத் தோழி தலைவிக்குக்கூறுவாளாகிச் சிறைப்புறத்தானாகிய தலைவனுக்கு உணர்த்தியது.)
 263.   
மறிக்குர லறுத்துத் தினைப்பிரப் பிரீஇச் 
    
செல்லாற்றுக் கவலைப் பல்லியங் கறங்கத் 
    
தோற்ற மல்லது நோய்க்குமருந் தாகா 
    
வேற்றுப்பெருந் தெய்வம் பலவுடன் வாழ்த்திப் 
5
பேஎய்க் கொளீஇய ளிவளெனப் படுதல்  
    
நோதக் கன்றே தோழி மால்வரை 
    
மழைவிளை யாடு நாடனைப்  
    
பிழையே மாகிய நாமிதற் படவே. 

என்பது "அன்னை (பி-ம். இப்பாட்டன்னை) வெறியாட்டெடுக்கக் கருதா நின்றாள்; இனி, யாம் இதற்கு என்கொலோ செயற்பாலது?" எனத் தோழி, தலைமகட்குத் தலைமகன் சிறைப்புறமாகக் கூறியது.

பெருஞ்சாத்தன்.

    (பி-ம்.) 8. ‘நாமிகற்’.

    (ப-ரை.) தோழி-. மால்வரை - பெரிய மலையினிடத்து, மழை விளையாடும் நாடனை - மேகம் விளையாடுகின்ற நாட்டிற்குத் தலைவன் மாட்டு, பிழையேம் ஆகிய நாம் - தவறிலேமாகிய நாம், இதன்பட - இக் களவொழுக்கத்திலே நிகழா நிற்ப, மறி குரல் அறுத்து - ஆட்டின் கழுத்தை அறுத்து, தினை பிரப்பு இரீஇ - தினையை உடைய பிரப்பை வைத்து, செல் ஆறு கவலை - ஓடுகின்ற ஆற்றுத் துருத்தியிலே, பல் இயம் கறங்க - பலவகையான இசைக் கருவிகள் ஒலிப்ப, தோற்றம் அல்லது - தாம் வெளிப்படுதலை அன்றி, நோய்க்கு மருந்து ஆகா - நம்முடைய காம நோய்க்குப் பரிகாரம் ஆகாத, வேறு பெரு தெய்வம் பல உடன் வாழ்த்தி- வேறாகிய பெரிய தெய்வங்கள் பலவற்றை ஒருங்கு வாழ்த்தி,இவள் பேஎய் கொளீஇயள் - இவள் பேயால் கொள்ளப் பட்டாள், என படுதல் - என்று கூறப்படுவ, நோதக்கன்று - வருந்துதற்கு உரியதாகும்.

    (முடிபு) தோழி, நாம் இதற்பட, அறுத்து இரீஇ வாழ்த்தி எனப்படுதல் நோதக்கன்று.

    (கருத்து) தாய் வெறியாடக் கருதினாள்; அதனை நாம் தடுக்க வேண்டும்.

    (வி-ரை.) தலைவியின் வேறுபாடு கண்ட தாய் வெறியாட்டெடுத்து உண்மை அறிய எண்ணினாள். அதனை உணர்ந்த தோழி அச் செய்தியைத் தலைவிக்குக் கூறும் வாயிலாகத் தலைவனுக்குப் புலப்படுத்தியது இது. பிரப்பு - தானியங்களைப் பலியாக வைத்தல். ஆற்றுக் கவலை - ஆற்றிடைக் குறையாகிய துருத்தி; "உள்ளாற்றுக் கவலை" (புறநா. 219;1) என்பதன் உரையைப் பார்க்க. துருத்தியில் தெய்வம் உறைதலை,

   
"கவின்பெறு துருத்தியும்"              (முருகு. 223),  
   
"நல்யாற்று நடுவும்"                  (பரி. 4:67)  

என்பவற்றால் அறியலாகும்.

    வழிப்போவார் செல்லும் வழியில் உள்ள கவர்த்த இடம் என்றலும் ஒன்று.

    மறியறுத்துத் தினைப்பிரப்பை வைத்து முருகன் முதலியோரை வழிபடுதலை, "சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்து" (முருகு. 218) என்பதனால் உணரலாகும்.

    தலைவனையே தெய்வமாகக் கொள்ளும் கற்புடையாராதலின், தாய் வெறியாட்டெடுக்குங்கால் வணங்கும் தெய்வங்களை ‘வேற்றுப் பெருந்தெய்வம்' என்றாள். அவற்றை, ‘நோய்க்கு மருந்தாகாத் தெய்வம்'எனவே நோய்க்கு மருந்தாகும் தெய்வம் ஒன்று உண்டென்பது பெறப்படும்; அத் தெய்வமே தலைவன்;

   
"நோய்க்குமருந் தாகிய கொண்கன்"          (ஐங். 101:5)  

என வருதல் காண்க.

    நாடனைப் பிழையேமென்றது நாடன் திறத்துள்ள அன்பினில் மாறுபடேமென்றவாறு.

    இதற்பட - இத்துன்பத்திலே பட வென்பதும் பொருந்தும்.

    இதனால், தலைவன் வரைந்து கொள்ள வேண்டியதன் இன்றி அமையாமையைத் தோழி புலப்படுத்தினாள்.

    ஒப்புமைப் பகுதி 3. நோய்க்கு மருந்து: குறள். 1102; கம்ப. மிதிலைக். 80.

    1-3. தெய்வம், வழிபடத் தோன்றுதல்: முருகு.239-44; பரி.5:14-5.

    4. வேற்றுப் பெருந்தெய்வம்: குறிஞ்சிப். 6.

    6. நோதக்கன்று: குறுந். 78:4.

    6-7. வரையில் மழை விளையாடுதல்: குறுந். 108:1, ஒப்பு.

    மு. குறிஞ்சிப். 1-8; அகநா. 98,242.

(263)