(‘முன்னோரைப் பின்பற்றி நாமும் பொருள் தேடச் செல்வேம்' என்று எண்ணிய தலைவன் பிறகு வாழ்நாளது சிறுமையையும், இளமையினது அருமையையும் கருதிச் செலவு தவிர்ந்தது.)
 267.   
இருங்கண் ஞாலத் தீண்டுபயப் பெருவளம்  
    
ஒருங்குட னியைவ தாயினுங் கரும்பின் 
    
காலெறி கடிகைக் கண்ணயின் றன்ன 
    
வாலெயி றூறிய வசையி றீநீர்க் 
5
கோலமை குறுந்தொடிக் குறுமக ளொழிய 
    
ஆள்வினை மருங்கிற் பிரியார் நாளும்  
    
உறன்முறை மரபிற் கூற்றத் 
    
தறனில் கோணற் கறிந்திசி னோரே. 

என்பது ‘மேனின்றும் ஆடவர் பொருட்குப் பிரிந்தாராகலின் நாமும் பொருட்குப் பிரிதும்' (பி-ம். பொருடருதும்) என்னும் நெஞ்சிற்கு, நாளது சின்மையும் இளமையது அருமையும் கூறிச் செலவழுங்கியது.

    [மேல் நின்றும் - முற்காலந் தொடங்கி நாளது சின்மை - வாழ்நாளின் சிறுமை. இளமையது அருமை - இளமை பெறுதற்கரிதாதல்; இவ்விரண்டும் பொருள் தேடற்குரிய முயற்சியைத் தகைவன (தொல். அகத்.44, இளம்.]

காலெறி கடிகையார் (பி-ம். காலறி கடிகையார், காலரிகடிகையார்.)

    (பி-ம்.) 3. ‘காலறி’, ‘காலரி.’

    (ப-ரை.) நெஞ்சே, நாளும் - நாள்தோறும், உறல் முறை மரபின் - முறையாக அடைதலாகிய மரபை உடைய, கூற்றத்து - கூற்றுவனது, அறன் இல் கோள் - கண்ணோட்டம் இல்லாத கொலைத் தொழிலை, நற்கு அறிந்திசினோர் - நன்றாக அறிந்தோர், இரு கண் ஞாலத்து - பெரிய இடத்தை உடைய பூமியின்கண், ஈண்டு பயம் பெரு வளம் - தொக்க பயனை உடைய பெரிய செல்வம், ஒருங்கு உடன் இயைவது ஆயினும் - ஒருங்கே பொருந்துவதாயினும், கரும்பின் கால் எறி கடிகைக் கண் - கரும்பின் அடிப்பகுதியில் வெட்டிய துண்டத்தை, அயின்றன்ன - உண்டாற் போன்ற சுவையை உடைய, வால் எயிறு ஊறிய - வெள்ளிய பல்லினிடத்தே ஊறிய, வசை இல் தீ நீர் - குற்றம் இல்லாத இனிய நீரையும், கோல் அமை குறு தொடி - திரட்சி அமைந்த குறிய வளையையும் உடைய, குறுமகள் ஒழிய - இளைய தலைவி நீங்கி இருப்ப. ஆள்வினை மருங்கின் - முயற்சியின் பொருட்டு, பிரியார் - தாம் மட்டும் தனித்துப் பிரிந்து செல்லார்.

    (முடிபு) அறிந்திசினோர் வளம் இயைவதாயினும் குறுமகள் ஒழியப் பிரியார்.

    (கருத்து) நான் தலைவியைப் பிரியேன்.

    (வி-ரை.) கரும்பின் அடிப் பகுதி மிகச் சுவையுடையதாய் இருக்கும;

   
"கனைகடற் றண்சேர்ப்ப கற்றறிந்தார் கேண்மை 
   
 நுனியிற் கரும்புதின் றற்றே"                   (நாலடி. 138)  

என்பதில், கரும்பின் நுனிப் பகுதியினும் அடிப் பகுதி இனிமையை உடையதென்ற கருத்துக் காணப்படும். கடிகைக்கண்: உருபு மயக்கம்.

    நாளும் உறன் முறைமரபிற் கூற்றம் - நாள்தோறும், வாழ் நாள் முடிவு வரையறுக்கப்பட்ட உயிர்கள்பால் முறையே செல்லும் மரபை உடைய கூற்றுவன்;

   
"ஞாலத் தின்னுயிர் வாழ்வோர் நாப்பட் 
   
 காலம் பார்க்குங் காலன்"              (பெருங். 1.37:204-5.)  

    அறனில் கோள்:ஈண்டு அறனென்றது கண்ணோட்டத்தை;

   
"தவத்துறை மாக்கண் மிகப்பெருஞ் செல்வர் 
   
 ஈற்றிளம் பெண்டி ராற்றாப் பாலகர் 
   
 முதியோ ரென்னா னிளையோ ரென்னான் 
   
 கொடுந்தொழி லாளன் கொன்றனன் குவிப்ப"          (மணி. 9:97-100)  

என்று கூற்றுவனது அறனில் கோள் கூறப்பட்டிருத்தல் காண்க.

    கூற்றுவனது கோளை அறிந்திசினோர், நாம் பிரியின் இருவருள்ஒருவர் உயிர் விட நேரின் மீட்டும் கூடுதல் அரிதென்று அஞ்சிப் பொருள் வயிற் பிரியார்; இது நாளது சின்மைபற்றிச் செலவு தவிர்ந்தது. தலைவியின் வாய் நீரூறலைப் புனைந்து அவளைக் குறுமகளெனச் சுட்டினமையின் அவள் இளமைப் பருவம் உடையாளென்பது பெறப்படும். இங்ஙனம் கூறியது, ‘இவ்விளமைப் பருவத்தே நுகரும் இன்பத்தை இடையீடின்றி நுகரேமேல் இது பின் பெறற்கரிய தாகும்' என்னும் குறிப்பை உட்கொண்டது; இஃது இளமையதருமையை நினைந்தது.

    அறிந்திசினோரெனப் பொதுவில் கூறினும் தான் அறிந்தமையையே கருதினான். அறிந்திசினோர் குறுமகள் ஒழிய என்ற ஒருமை பன்மை மயக்கத்தை, "ஏவலிளையர் தாய் வயிறு கரிப்ப" (தமிழ்நெறி. மேற்.) என்பது போலக் கொள்க.

    தலைவியின் எயிற்றில் ஊறிய நீரின் சுவைக்குக் கரும்பின் காலெறி கடிகையின் சுவையை உவமித்தமையின் இச் செய்யுளை இயற்றிய ஆசிரியர் காலெறி கடிகையார் என்னும் சிறப்புப் பெயர் பெற்றார்.

    ஒப்புமைப் பகுதி 2-3. கரும்பின் அடிப்பகுதி சுவையாக இருத்தல்: "கருப்புக் கான்மட்டுந் தின்றா லெனநின்ற கண்ணப்பன்" (காளத்தி நாதர் கட்டளைக் கலிப்பா.)

    4. வாலெயிறூறிய நீர்: அகநா. 237:17; குறள், 1121.

    வாலெயிறு:ஐங். 48:1.

    3-4. "சுரும்பிவர் நறவயிற் சூழ்ந்தெழு கரும்பிற், றீநீ ரன்ன வாய் நீர்" (திருவலஞ்சுழி மும்மணிக் கோவை, 13.)

    5. கோலமை குறுந்தொடி: குறுந். 233:7, ஒப்பு. குறுந்தொடி: குறுந். 356:8, 384:2. குறுமகள்: குறுந். 89:7, ஒப்பு.

    6. ஆள்வினை மருங்கிற் பிரிதல்: அகநா. 93:3, 255:7, 353:1, 379:4.

    1-6. பெரும்பொருள் பெறினும் தலைவியைப் பிரியாமை: குறுந். 300:7-8; பட். 218-20; நற். 16.

    7-8. கூற்றத்து அறனில் கோள்: "அறனில் கூற்றந் திறனின்று துணிய", "நயனில் கூற்றம்" (புறநா. 210:8, 237:9, 227:1); "ஆட்பார்த்துழலு மருளில் கூற்று" (நாலடி. 20.)

    8. இசின் படர்க்கைக்கண் வருதல்: ஐங். 73:4, 175.

    மு. அகநா. 379.

(267)