(தலைவன் சிறைப்புறத்தானாக, தலைவி, "எந்தையும் யாயும் ஈண்டு இப்போது இலராதலின் தலைவன் என்னைக் காண்டற்கு இஃது எளியசெவ்வியென யாரேனும் அவன்பாற் சென்று சொல்லின் நன்றாம்" என்று தோழிக்குக் கூறியது.)
 269.   
சேயாறு சென்று துனைபரி யசாவா 
    
துசாவுநர்ப் பெறினே நன்றுமற் றில்ல 
    
வயச்சுறா வெறிந்த புண்டணிந் தெந்தையும் 
    
நீனிறப் பெருங்கடல் புக்கனன் யாயும் 
5
உப்பை மாறி வெண்ணெற் றரீஇய 
    
உப்புவிளை கழனிச் சென்றன ளதனாற் 
    
பனியிரும் பரப்பிற் சேர்ப்பற்  
    
கினிவரி னெளிய ளென்னுந் தூதே. 

என்பது தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச்சொல்லுவாளாய்ச் சொல்லியது.

கல்லாடனார்.

    (பி-ம்.) 1. ‘துணைபரி’, ‘புனையரி’, ‘துணைவரசாவாது’; 6. ‘கழனி சென்றன’.

    (ப-ரை.) தோழி எந்தையும் வய சுறா எறிந்த புண் தணிந்து - என் தந்தையும் வலியை உடைய சுறாமீன் வீசியதனால் உண்டான புண் ஆறி, நீல் நிறம் பெருகடல் புக்கனன் - மீண்டும் மீன் வேட்டை ஆடும் பொருட்டு, நீல நிறத்தை உடைய பெரிய கடலினிடத்துப் புகுந்தனன்;யாயும் - என் தாயும், உப்பை மாறி - உப்பை விற்று, வெள்நெல் தரீஇய - வெண்ணெல்லை வாங்கி வரும் பொருட்டு, உப்பு விளை கழனி சென்றனள்- அவ்வுப்பு உண்டாகின்ற அளத்திற்குச் சென்றாள்; அதனால்--, பனி இரு பரப்பின் சேர்ப்பற்கு - குளிர்ச்சியை உடைய பெரிய பரப்பாகிய கடற்கரையை உடைய தலைவனுக்கு, இனிவரின் எளியள் என்னும் தூது - இப்பொழுது இங்கேவந்தால் தலைவி எளிதில் கண்டு பெறுதற்குரியள் என்னும் தூது மொழியை, சேய் ஆறு சென்று - நெடுந்தூரமாகிய வழியைக் கடந்துபோய், துனை பரி அசாவாது - விரையும் நடையினால் வருந்தாமல், உசாவுநர் பெறின் - கூறி உசாத் துணையாவாரைப் பெற்றால், நன்றுமன் - மிக நல்லதாகும்; தில்ல - இஃது என் விருப்பம்.

    (முடிபு) ‘எந்தையும் கடல் புக்கனன்; யாயும் சென்றனள்; அதனால் இனி வரின் எளியள்' என்னும் தூதினைச் சேர்ப்பற்குக் கூறி உசாவுநர்ப் பெறின் நன்றுமன்.

    (கருத்து) தலைவன் என்னோடு அளவளாவுதற்கேற்ற செவ்வி இது.

    (வி-ரை.) தலைவி நெய்தல் நில மகள். அவள் தந்தை சுறா எறிந்த புண்ணால் பல நாள் வீட்டில் தங்கினான்; அவனுக்கு உரியன ஆற்றும் கடப்பாட்டினால் தாயும் வீட்டில் இருந்தாள். ஆதலின் தலைவனும் தலைவியும் பல நாள் கண்டு அளவளாவல் இயலாதாயிற்று. இந்நிலையில் தலைவன் ஒரு நாள் வந்து மறைவில் நின்றானாக, அவன் முன்னாட்களைப் போல் தன்னைக் காணாமல் போய் விடின் என் செய்வதெனக் கவன்ற தலைவி, அதுகாறும் தம் கூட்டத்திற்குத் தடையாக நின்ற தந்தை தாயர் இன்மையை உரைத்து ‘இது நற்செவ்வி’ எனப் புலப்படுத்தினாள்.

    தூது செலின் நலமென்றது, தோழியைப் புறம் போக்குதற்குக்கூறியதொரு குறிப்பு.

    சேயாறாதலின் விரைந்த நடை கூறினாள். உசாவுநர் - தலைவிக்கு உசாத்துணையாவார். நீல: நீலம் என்பதன் விகாரம். இருமை, கருமையுமாம்.

    தூதால் உசாவுநர் என்று பொருள் கூறுதலும் பொருந்தும். தூது - தூது மொழி (சீவக. 1022, ந.)

    ஒப்புமைப் பகுதி 1. சேயாறு குறுந். 400:1.

    3. வயச்சுறா: குறுந். 230: 5; அகநா. 190:12.

    4. நீல்நிறப் பெருங்கடல்: நற். 45:2.

    5. உப்பை விற்று நெல்லைப் பெறுதல்: "உப்பு நொடை நெல்லின் மூரல் வெண்சோறு", "நெல்லி னேரே வெண்க லுப்பெனச், சேரி விலைமாறு கூறலின்", "நெல்லு முப்பு நேரே யூரீர், கொள்ளீ ரோவெனச் சேரிதொறு நுவலும்" (அகநா. 60:4, 140:7-8, 390:8-9.)

    6. உப்பு விளை கழனி: "இருங்கழிச் செறுவின் வெள்ளுப்பு" (மதுரைக். 117); "இருங்கழிச் செறுவி னுழாஅது செய்த, வெண்கலுப்பின் கொள்ளை" (அகநா. 140:2-3.)

(269)