(தலைவன் பிரிவினை இவள் ஆற்றாளாயினாள் என்று கவலையுற்ற தோழியை நோக்கித் தலைவி, “நான் ஆற்றியிருப்பவும் என் மாமை யழகு வீணாகும்படி அதனைப் பசலை உண்டது” என்று கூறியது).
 27.    
கன்று முண்ணாது கலத்தினும் படாது 
    
நல்லான் றீம்பா னிலத்துக் காஅங் 
    
கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது 
    
பசலை யுணீஇயர் வேண்டும் 
5
திதலை யல்குலென் மாமைக் கவினே. 

என்பது பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

கொல்லன் அழிசி.

    (பி-ம்.) 4.’யுண்ணிய’, ‘யுண்ணியர்’, ‘யுணீஇய’ 5.’யல்குலெம்’.

    (ப-ரை.) நல் ஆன் தீ பால் - நல்ல பசுவின் இனிய பாலானது, கன்றும் உண்ணாது - அப்பசுவின் கன்றினாலும் உண்ணப்படாமல், கலத்தினும் படாது - கறக்கும் பாத்திரத்திலும் விழாமல், நிலத்து உக்காங்கு - தரையில் சிந்தி வீணானது போல, திதலை அல்குல் - என் மாமை கவின் - எனது மாமையாகிய பேரழகை, எனக்கும் ஆகாது - எனக்கு அழகு பயந்து நிற்பதாகாமலும், என்னைக்கும் உதவாது - என் தலைவனுக்கு இன்பம் பயவாமலும், பசலை உணீஇயர் வேண்டும் - பசலையானது தான் உண்ண விரும்பா நிற்கும்.

    (முடிபு) பால் நிலத்து உக்காங்குப் பசலை மாமைக்கவினை உணீஇயர் வேண்டும்.

    (கருத்து) தலைவனது பிரிவினால் மாமைக்கவின் அழியப் பசலை பரந்தது.

    (வி-ரை.) கலம் - பால் கறக்கும் பாத்திரம்; “கறவைகன் றார்த்திக் கலநிறை பொழியும்” (மணி. 12:93) மாமை தலைவிக்கு அழகு பயந்து சிறப்புத் தருதலின், ‘எனக்கு மாகாது’என்றாள்; “தனக்கமைந் தன்றிவண் மாமைக் கவினே” (ஐங். 103:3-4). என்னை: குறுந். 24:2, வி-ரை. மாமை தலைவனுக்குப் பயன்படுதலாவது, அம் மாமைக் கவினை நோக்கி நோக்கி அவன் மகிழ்ச்சி பெறுதல்; “துறைவற், கினிய மன்றவென் மாமைக் கவினே” (ஐங். 146:2-3); “நுண்ணெழின் மாமைச் சுணங்கணியாகந்தம், கண்ணொடு தொடுத்தென நோக்கியும்” (கலித்.4:17-8) பசலை - பிரிவாற் றாமையால் உண்டாகும் வேறு பாடான பொன் நிறம். ‘பசலை உணீஇயர்’ என்றது, “உண்டற்குரிய வல்லாப் பொருளை, உண்டன போலக் கூறலுமரபே” (தொல். பொருளியல், 19) என்னும் மரபு வழவமைதியின் பாற்படும். திதலை - தேமல். மாமைக் கவின்: இது மகளிருக்குப் பேரழகு பயப்பது; இதன் நிறம் மாந்தளிர் (குறுந். 331), ஆம்பலின் நாருரித்த மெல்லிய தண்டு (நற். 6:1-2, ஐங். 35), ஈங்கை என்னும் கொடியின் தளிர் (அகநா. 75:17-8), அசோகந்தளிர் (கலி.15:12) என்பவற்றின் நிறத்தைப் போன்ற தென்று கூறுவர். பசலை படர்ந்தால் இந்நிறம் அழிந்துவிடும்.

    கன்று உண்டபின் கலத்திலும் நிறையும் பாலைப்போல மாமைக் கவின் தலைவிக்குப் பயன்பட்டுத் தலைவனுக்கும் நிறைந்த இன்பத்தைத் தருவதற்கு உரியதென்பது உவமையால் பெறப்படும்.

    எனக்கும், என்னைக்கும்: உம்மை இரண்டனுள் முன்னது எதிரது தழீஇயது; பின்னது இறந்தது தழீஇயது.

    இது பசலை பாய்தல் என்னும் மெய்ப்பாடு.

    மேற்கோளாட்சி 3. தலைவி தலைவனை என்னை என்றது (தொல். பொருளியல், 52, ந.).

    4. செய்யியரென்னும் வாய்பாட்டு வினையெச்சம் வினைமுதல் வினையைக் கொண்டு முடிந்தது (நன்.343, மயிலை, 344 சங்.).

    மு. பசலை பாய்தல் என்னும் மெய்ப்பாடு (தொல்.மெய்ப். 22, பேர்; இ.வி.580);காதல் கைம்மிகல் என்னும் மெய்ப்பாடு (தொல். களவு. 21, இளம்.); ‘1. இது வெள்ளி வீதியார் பாட்டு; இது தம் பெயர் கூறின், புறமாமென்று அஞ்சி வாளாது கூறினார்’ (தொல். அகத்.54, ந.).

    ஒப்புமைப் பகுதி3. என்னை: குறுந். 14:2, ஒப்பு. 5. திதலையல்குல்: குறுந். 294:5; நற்.133:3-4; ஐங். 29:4, 72:2; அகநா.54:21, 183:2; 189:9. 4-5. தலைவன் பிரிவினால் மாமை அழிதல்: (குறுந். 368:2); “நீயே, குவளை யுண்கணிவளீண் டொழிய, ஆள்வினைக் ககறி யாயி னின்றொடு, போயின்று கொல்லோ தானே படப்பைக், கொடுமு ளீங்கை நெடுமா வந்தளிர், நீர்மலி கதழ்பெய றலைஇய, ஆய்நிறம் புரையுமிவண் மாமைக் கவினே” (நற். 205:5-11); “கான நாடன் பிரிந்தெனத், தானும் பிரிந்தன்றென் மாமைக் கவினே” (தொல்.களவு. 21, ந.மேற்: ‘அம்மவாழி’); “களியானைத் தென்ன னிளங்கோவென் றெள்ளிப், பணியாரே தம்பாரிழக்க - அணியாகம், கைதொழு தேனு மிழக்கோ நறுமாவின்,கொய்தளி ரன்ன நிறம்” (முத். 83): “மற்கொண்ட திண்டோண் மறவே னெடுந்தகை, தற்கண்டு மாமைத் தகையிழந்த - எற்காண” (பு.வெ.307). பசலையினால் மாமை அழிதல்: (குறுந். 331:7): “வண்ணம் பசந்து புலம்புறு காலை” (தொல். பொருளியல், 8); “நன்மலை நாடன் ... பிரியின் மணிமிடை பொன்னின் மாமை சாயவென், அணிநலஞ் சிதைக்குமார் பசலை” (நற். 304:4-7); “இனிப்பசந்தன்றென் மாமைக் கவினே”, “நன்மா மேனி பசப்ப” (ஐங். 35:4, 144:3, 221:3): “செயலையந் தளிரேய்க்கு மெழினல மந்நலம், பயலையா லுணப்பட்டு”, “பன்னாளும் படரடப் பசலையா லுணப்பட்டாள், பொன்னுரை மணியன்ன மாமைக்கட் பழியுண்டோ” (கலி. 15:12-3, 48:16-7); “வாமான்றேர்க் கோதையை மான்றேர்மேற் கண்டவர், மாமையே யன்றோ விழப்பது - மாமையிற், பன்னூறு கோடி பழுதோவென் மேனியிற், பொன்னூறி யன்ன பசப்பு” (முத்.53); “பேர்கின் றதுமணிமாமை பிறங்கியள் ளற்பயலை, ஊர்கின்றது” (திவ். திருவிருத்தம், 12); “மாமை பொன்னிறம் பசப்ப” (பு.வெ.199).
(27)

  
 1.  
குறுந்தொகை, 26ஆம் செய்யுளை இயற்றிய ஆசிரியர் பெயர் வெள்ளி வீதியார் என்றும், இப்பாட்டின் ஆசிரியர் பெயர் கொல்லனழிசி என்றும் பிரதிகளில் உள்ளன; நச்சினார்க்கினியர் கூற்றால் இவ்விரண்டும் மாறி எழுதப்பட்டதாகக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகின்றது.