அழிசி நச்சாத்தனார். (பி-ம்.) 2-3. ‘தெரியுற்றுது’ 4. ‘மயக்கி’
(ப-ரை.) தோழி, அருவி அன்ன பரு உறை சிதறி - அருவியை ஒத்த பரிய துளிகளைச் சிதறி, யாறு நிறை பகரும் - ஆறு வெள்ளத்தைக் கொண்டு ஒலிக்கும், நாடனை தேறி - நாட்டை உடைய தலைவனைத் தெளிந்து, உற்றது - அவனோடு பொருந்திய காலம், ஒரு நாள் - ஒரு நாளே ஆகும; அது - அங்ஙனம் பொருந்தியது, தவ பல் நாள் - மிகப் பல நாட்கள், தோள் மயங்கி - தோளோடு கலந்து, வௌவும் பண்பின் - அழகைக் கொள்ளை கொள்ளும் தன்மையினை உடைய, நோய் ஆகின்று - நோயாக ஆகின்றது.
(முடிபு) நாடனை உற்றது ஒரு நாள்; அது மயங்கி நோயாகின்று.
(கருத்து) அறங்கருதித் தலைவனை ஏற்றுக் கொள்கின்றேன்.
(வி-ரை.) தலைவன் பரத்தையிற் பிரிந்து வந்து தோழியை வாயில்வேண்டிய இடத்து அவள் அவனுக்கு உடம்பட்டாள்; அதனைத் தலைவியிடம் தெரிவித்து, ‘நீ அவனை ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்று கூறிய பொழுது, தலைவி, "அவனைத் தெளிந்து மணந்தது ஒரு நாள். அங்ஙனம் ஒரு நாள் மேற்கொண்ட அச் செயல் பல நாள் அவன் கொடுமையை நினைந்து வருந்தி அழகு கெடுதற்கு ஏதுவாயிற்று" என்றாள். இதனால் தான் அவனுக்கு உரியளானமையின் அவனை ஏற்றுக் கோடல் அறனென்னும் குறிப்புத் தோற்றியது.
யாறு தன் துளிகளை அருவிபோலச் சிதறிப் புறத்தே உள்ள பொருள்களுக்குப் பயன்பட்டது போல, தலைவன் புறத்துள்ள பரத்தையர்க்குப் பயன்படுவான் என்பது குறிப்பு.
நிறை - வெள்ளம். "வேழம் வெண்பூப் பகரும்" (ஐங். 13:2) என்பதற்கு அதன் உரையாசிரியர், வேழம் வெண் பூவைக் கொடுக்கும் என்று பொருள் எழுதி இருத்தலின், ஈண்டுப் பகரும் என்பதற்குக் கொடுக்கும் என்று பொருள் உரைத்தலும் பொருந்தும்.
மன், உம்: அசை நிலைகள் (குறள், 1146, பரிமேல்.) மற்று: அசைநிலை.
ஒப்புமைப் பகுதி 3. "கண்டது மன்னு மொருநாள்" (குறள், 1146.)
5. ஆகின்று: குறுந். 15:4, ஒப்பு. மு, குறுந். 326, 393.
(271)