ஒருசிறைப் பெரியன். (பி-ம்.) 2. ‘வில்லுடையிளையர்’; 4. ‘நேர்படநசைஇச்’; 7. ‘மாறுகண் டன்ன’; 8. ‘நாறிரு .... நுதற்கொடிச்சி’.
(ப-ரை.) மாண்ட - மாட்சிமைப்பட்ட, வில்லுடை வீளையர் - வில்லை உடைய வீளை ஒலியை உடையோராய், கல் இடுபு எடுத்த - கற்களை வீசி எழுப்பிய, நன தலை கானத்து இனம் தலைப் பிரிந்த - அகன்ற இடத்தை உடைய காட்டிடத்துத் தன் இனத்தினின்றும் பிரிந்த, புன் கண் மடம் மான் - துன்பத்தையும் மடப்பத்தையும் உடைய பெண்மான், நேர்பட - நேரே இருப்ப, தன்னையர் - தன் தமையன்மார், சிலை மாண் கடுவிசை - சிலைத்தல் மாட்சிமைப்பட்ட மிக்க வேகத்தை உடைய, கலை நிறத்து அழுத்தி - ஆண் மானினது மருமத்திலே அழுந்தச் செய்து, குருதியொடு பறித்த - இரத்தத்தோடு பிடுங்கிய, செகோல் வாளி - சிவந்த திரட்சியை உடைய அம்பு, மாறு கொண்டன்ன உண்கண் - ஒன்றை ஒன்று மாறுபட்டாற் போன்ற மையுண்ட கண்களையும், நாறு இரு கூந்தல் - மணம் வீசுகின்ற கரிய கூந்தலையும் உடைய, கொடிச்சிதோள் - தலைவியினுடைய தோள்களை, தீண்டலும் இயைவது கொல் - மீட்டும் ஒரு கால் தழுவுதலும் என்பாற் பொருந்துவதோ!
(முடிபு) உண் கண்ணையும் கூந்தலையும் உடைய கொடிச்சி தோள் தீண்டலும் இயைவது கொல்!
(கருத்து) தலைவி பெறுதற்கரியவள்.
(வி-ரை.) தீண்டலும்: உம் சிறப்பு. கொல்லோ: ஓ அசை நிலை; இரங்கல் குறிப்புமாம. மாண்ட வில் - பல விலங்குகளைக் கொல்வதற்குக் கருவியாகி மாட்சிமைப்பட்ட வில்.
வீளை - சீழ்க்கை; உதட்டை மடித்துச் செய்யும் ஒலி; இதனை இக் காலத்தில் 'சீட்டி' என்பர். கல்லிடுபெடுத்தலால் இனத்தினின்றும் மடமான் பிரிந்தது. மடமான் நேர்பட என்றது அது வருந்தவும் அதனை ஓராராய்க் கலையைக் கொல்லுவர் என அவரது வன்கண்மையைப் புலப்படுத்தியபடி. சிலை - கலையின் முழக்கம்; "இன்சிலை, ஏறுடையினத்த நாறுயிர் நவ்வி" (அகநா. 7:9-10,) நிறம் - உயிர்நிலை. விலங்குகளின் உயிர்நிலையை அறிந்து அதன்கண் அம்பெய்து கொல்லுதல் வேடர் இயல்பு;
| "இரும்புவடித் தன்ன கருங்கைக் கானவன் |
| விரிமலர் மராஅம் பொருந்திக் கோறெரிந்து |
| வரிநுதல் யானை யருநிறத் தழுத்தி" (அகநா. 172;6-8.). |
குருதியோடு பறித்தமையால் அது செவ்வாளி ஆயிற்று. தலைவியின் கண்களுக்கு உவமை கூறுமுகத்தால் அவள் தன்னையரின் வன்கண்மையைப் புலப்படுத்தி, ‘இத்தகைய கொடியர் பாலுள்ள தலைவியைப் பெறுதல் அரிதன்றே' என்பதை உய்த்துணர வைத்தான்.
வாளியன்ன கண்ணென்றான், அது தன்னை வருத்தியதை நினைந்து. நாறிருங் கூந்தற் கொடிச்சி யென்றான், முன் அவளுடன் அளவளாவிய வனாதலால்.
கொடிச்சி - குறிஞ்சி நில மகள். தோள் தீண்டல் - இடக்கரடக்கு.
மேற்கோளாட்சி 2. வீளை - சீழ்க்கை (சீவக. 447, ந.)
மு. கழறிய பாங்கற்குக் கூறும் தலைவன், ‘இவனான் இக்குறை முடியாது; நெருநல் இடந்தலைப்பாட்டிற் கூடியாங்குக் கூடுவல்; அது கூடுங்கொல்!' என்று கூறுவான், அற்றைஞான்று மெய்தொட்டுப் பயின்றதே கூறியது (தொல். களவு. 11, இளம், ந.) தலைவன் நீடு நினைந்திரங்கியது (நம்பி. 127.)
ஒப்புமைப் பகுதி 2. வீளை; குறிஞ்சிப். 161; நற். 265:3; அகநா. 33:5, 182:4, 274:1; கைந்நிலை. 13; சீவக. 120.3. நனந்தலைக் கானம்: குறுந். 297:5.
4-5. வேடர் மானை எய்தல்: "எய்யத் தொடுத்தோன் குறத்திநோக் கேற்றதெனக், கையிற் கணைகளைந்து கன்னிமான் - பையப்போ, என்கின்ற பாவனைசெ யீங்கோயே தூங்கெயில்கள், சென்றன்று வென்றான் சிலம்பு" (திருவீங்கோய். 12); "கானமர் குன்றர் செவியுற வாங்கு கணை துணையாம், மானமர் நோக்கியர் நோக்கென மானற்றொடைமடக்கும்" (திருச்சிற். 274.)
வேடர் கலையை எய்தல்: "அள்ள லாடிய புள்ளி வரிக்கலை, வீளை யம்பின் வில்லோர் பெருமகன்"
(நற். 265:2-3.) 6. செங்கோல் வாளி: குறுந். 1:2, ஒப்பு.
6-7. தலைவியின் கண்ணுக்குக் குருதியொடு பறித்த அம்பு: "ஏனல் காவலர் மாவீழ்த்துப் பறித்த, பகழி யன்ன சேயரி மழைக்கண்", "கொடுவிற் கானவன் கோட்டுமா தொலைச்சிப், பச்சூன் பெய்த பகழி போலச், சேயரி பரந்த வாயிழை மழைக்கண்", (நற். 13:3-4, 75:6-8); "நிறத்தெறிந்து பறித்த நிணங்கொள்வேற், றிறத்தை வௌவிய சேயரிக் கண்ணினாள்" (சீவக. 993.)
8. கூந்தலின் மணம்: குறுந். 2:4-5, ஒப்பு.
நாறிருங் கூந்தல்: புறநா. 113:9.
கொடிச்சி: குறுந். 214:3, 291:2, 335:7, 360:6.
1-8. தோள் தீண்டல்: குறுந். 50:5, ஒப்பு. 193: 5, ஒப்பு.
தோள் தீண்டற் கரிது: குறுந். 100:7.
(272)