மதுரை மருதன் இளநாகனார். (பி-ம்.) 5. ‘மழைகெழு’, ‘மறைந்த’; 7. ‘அரும்பல் குன்றம்’, ‘போக்கித்’.
(ப-ரை.) தோழி , மழை கழூஉ மறந்த மாஇரு துறுகல் -மழை கழுவுதலை மறந்த கரிய பெரிய பொற்றைக் கல், துகள் சூழ் யானையின் - புழுதி படிந்த யானையைப் போல, பொலிய தோன்றும் - விளங்கத் தோன்றுகின்ற, இரு பல்குன்றம் போகி - பெரிய பல மலைகளைக் கடந்து சென்று, திருந்து இறை பணைதோள் உள்ளாதோர் - இலக்கணத்தால் திருந்திய சந்துகளை உடைய மூங்கிலைப் போன்ற என் தோள்களை நினையாதோர், திரி மருப்பு எருமை இருள் நிறம் மை ஆன் - முறுக்கிய கொம்பையும் இருள் நிறத்தையும் உடைய எருமையினது, வரு மிடறு யாத்த - வளர்கின்ற கழுத்தின்கண் கட்டப்பட்ட, பகு வாய் தெள் மணி - பிளந்த வாயை உடைய தெளிந்த ஓசையை உடைய மணியானது, புலம்பு கொள் யாமத்து - தனிமையைக் கொண்ட நடு இரவில், இயங்கு தொறு - அவ்வெருமை நடக்கும் தோறும், இசைக்கும் - ஒலிக்கின்ற, இது பொழுது ஆகவும் - இக் காலம் தாம் வருதற்குரிய செவ்வியாக இருப்பவும், வாரார் - அவர் வாராராயினர்.
(முடிபு) போகி உள்ளாதோர், வாரார்.
(கருத்து) தலைவர் வருதற்குரிய செவ்வி இஃதாக இருந்தும் அவர் வந்திலரென ஆற்றேனாயினேன்.
(வி-ரை.) எருமையின் மணி ஓசையைத் தலைவி துயிலாது கேட்டவளாதலின் இங்ஙனம் கூறினாள். இரவில் தனிமையை மிகுதிப் படுத்திக் காட்டும் அம்மணி ஓசையினால் தலைவி துன்புறுவாள். இதனை இந்நூல் 86-ஆம் செய்யுளாலும் உணரலாகும்.
புலம்பு கொள் யாமம் என்றது தனது தனிமையை நினைந்து. மழைகழூஉ மறந்த துறுகல் என்றது மழையின்றி வெம்பிய பாலை நிலத்தின்இயல்பைக் குறிப்பித்தபடி துகள் - புழுதி; யானை தன் மீது புழுதியைத் தானே வாரி வீசிக் கொண்டதனால் துகள் சூழ்ந்ததாகும்.
பணைத் தோள்களை உள்ளுவாராயின் அவற்றோடு பொருந்திஅளவளாவும் ஆர்வத்தால் மீள்வர் என்பது தலைவியின் கருத்து.
கொல், ஓ, ஏ: அசை நிலைகள்.
ஒப்புமைப் பகுதி எருமை ஆன்: பெரும்பாண்.165; அகநா. 165:5. திரிமருப் பெருமை: அகநா. 206:3.
2. பகுவாய்த் தெண்மணி: குறுந். 155:4.
1-4. குறுந். 86:4-6, ஒப்பு.
6. துகள் சூழ் யானை: ‘நீறாடிய களிறு’ (பட். 48.)
5-6. துறுகல்லிற்கு யானை: குறுந். 13:1-2, ஒப்பு.
8. இறைப்பணைத்தோள்: குறுந். 168:5; கலி.38:26; புறநா. 354:9.
(279)