ஒளவையார். (பி-ம்.) 1. ‘மூட்டுவேன்கொல்’ 2. ‘ஓரே யானும்’
(ப-ரை.) அலமரல - சுழலுதலை உடைய, அசை வளி - அசைந்து வருகின்ற தென்றல் காற்று, அலைப்ப - வருத்தா நிற்க, என் உயவு நோய் அறியாது - எனது வருந்துதலை உடைய காம நோயை உணர்ந்து கொள்ளாமல், துஞ்சும் ஊர்க்கு - கவலையின்றித் தூங்கும் ஊரில் உள்ளாரை, யான், முட்டுவேன் கொல் - முட்டுவேனோ? தாக்குவேன் கொல் - தாக்குவேனோ? ஓர் பெற்றி மேலிட்டு - ஒரு தலைக்கீட்டை மேற்கொண்டு, ஆஅ ஒல்லென - ஆவென்றும் ஒல்லென்றும் ஒலி உண்டாக, கூவுவேன் கொல் - கூப்பிடுவேனோ? ஓரேன் - இன்னது செய்வது என்பதை அறியேன்.
(முடிபு) ஊரை முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்? கூவுவேன் கொல்? ஓரேன்.
(கருத்து) என்னுடைய நோயைத் தாயர் முதலியோர் அறியாமையின் யான் ஆற்றேன் ஆயினேன்.
(வி-ரை.) முட்டுதல் உடம்பாற்றீண்டுதல் என்றும், தாக்குதல் கோல் முதலிய கருவிகளால் தீண்டுதல் என்றும் கொள்க; முட்டுதல் - எதிர்த்தலுமாம் (தொல். களவு.21.) ஓர் பெற்றி மேலிட்டுக் கூவுதலாவது, ‘பாம்பு, பாம்பு’ என்றேனும், ‘திருடன் திருடன்’ என்றேனும் பிரிவாறேனும் கூவுதல். இங்ஙனம் கூவுதலால் ஊரார் எழுந்து அலர் தூற்றுவர்; அவ்வலர் தலைவன் தன்னை வரைந்து கொள்வதை விரைவில் கூட்டும் உபாயமாதலின் தலைவிக்கு இன்பம் பயக்கும்; “அலரெழ வாருயிர் நிற்கும்” (குறள், 1141.) உயவு: உயாவென்பதன் திரிபு; “உயாவே யுயங்கல்” (தொல்.உரி.71) உயவு நோய்: வருத்தத்தை உடைய காம நோய் (கலி. 35:22, ந.) நோய் அறியாது துஞ்சும் என்றமையால் தலைவி துஞ்சாமை பெறப்படும். ஊர்க்கு - ஊரை; உருபு மயக்கம்; “உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும்” (சிலப். பதி. 56).
ஊர்க்கு - ஊரினர்பொருட்டு, முட்டுவேன்கொல் - சுவர் முதலியவற்றில் முட்டிக் கொள்வேனோ? தாக்குவேன்கொல் - தாக்கிக் கொள்வேனோ என்று பொருள் கூறலும் ஆம்.
ஒப்புமைப் பகுதி 3. ஆஅ: “ஆஅ வளிய வலவன்றன் பார்ப்பினொடு” (பழம் பாடல்): “ஆவம்மா வம்மாவென் னம்மா வகன்றனையே” (சீவக. 1804.)
அசைவளி: குறுந். 273:2; கலி . 126:12.
4. அசைவளி அலைத்தல்: “தைவர லசைவளி மெய்பாய்ந் துறுதரச், செய்வுறு பாவை யன்னவென், மெய்பிறி தாகுதல்” (குறுந். 195:5-7.)
5. உயவு நோய்: கலி.35:22, 58:7, 113:3. துஞ்சும் ஊர்: குறுந். 302:7. தலைவி துஞ்சாமை: குறுந். 6:4, ஒப்பு.
(28)