(தலைவன் வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிந்த காலத்தில்,ஊரினர் அலரை அஞ்சிய தலைவியை நோக்கி, "இவ்வூரினர் அறிவிலர்போலும்!" என்று தோழி கூறியது.)
 284.    
பொருத யானைப் புகர்முகங் கடுப்ப ் 
    
மன்றத் துறுகன் மீமிசைப் பலவுடன் 
    
ஒண்செங் காந்த ளவிழு நாடன் 
    
அறவ னாயினு மல்ல னாயினும் 
5
நம்மே சுவரோ தம்மிலர் கொல்லோ  
    
வரையிற் றாழ்ந்த வால்வெள் ளருவி 
    
கொன்னிலைக் குரம்பையி னிழிதரும் 
    
இன்னா திருந்தவிச் சிறுகுடி யோரே. 

என்பது வரைவிடைத் தோழி, கிழத்திக்கு உரைப்பாளாய் உரைத்தது.

மிளைவேள் தித்தன்.

    (பி-ம்.) 3. ‘காந்தள் வீழும்’; 4. ‘அவல னாயினு’; 6. ‘வாள் வெள்’.

    (ப-ரை.) பொருத யானை - போர் செய்த யானையினது, புகர் முகம் கடுப்ப - புள்ளியை உடைய முகத்தை ஒப்ப, மன்றம் துறுகல் மீமிசை - மன்றத்தின்கண் உள்ள பொற்றைக் கல்லின்மேல், ஒள் செ காந்தள் பல உடன் அவிழும் நாடன் - ஒள்ளிய செங்காந்தள் மலர் பல ஒருங்கே மலர்கின்ற நாட்டை உடைய தலைவன், அறவன் ஆயினும் - வாய்மையை உடையனாயினும், அல்லன் ஆயினும் - வாய்மையனல்லனாயினும், வரையில் தாழ்த்த - மலையினிடத்திலே தாழ்ந்து வீழ்கின்ற, வால்வெள் அருவி - தூய வெள்ளிய அருவி யானது, கொன் இலை குரம்பையின் இழி தரும் - அச்சத்தைத் தரும் இலையால் வேய்ந்த குடிலின் அருகில் இறங்கி ஓடும், இன்னாது இருந்த இ சிறு குடியோர் - நமக்கு இன்னாதாகி இருந்த இச்சிற்றூர் இடத்திலுள்ளார், நம் ஏசுவரோ - தலைவன் அங்ஙனம் இருத்தல் கருதி நம்மைப் பழிப்பார்களோ? தம் இலர் கொல் - அவர் தமக்கென்று ஓர் அறிவும் இல்லாதவர்களோ?

     (முடிபு) நாடன் அறவனாயினும், அல்லனாயினும், இச்சிறு குடியோர் நம் ஏசுவரோ? தம் இலர் கொல்லோ?

     (கருத்து) தலைவன் செயல் பற்றி நம்மை ஏசுவோர் அறிவில்லாதவர்.

     (வி-ரை.) தலைவன் வரைபொருட்குப் பிரிந்த காலத்தில் தலைவி,"தலைவன் கூறிய காலத்தில் வந்து மணப்பானோ? அல்லனோ? அங்ஙனம் மணவாவிடின் இவ்வூரினர் நம்மைப் பெரிதும் ஏசுவரே" என்று கவன்றனள்; அது கண்ட தோழி, " தலைவன் நல்லனாயினும் அல்லனாயினும் நம்மை ஏசுவதால் மட்டும் பயன் இல்லை; அறிவில்லாரே அங்ஙனம் செய்வர்" என்றாள்.

     தமக்கு என்று ஒரு பயனை யிலரோ வெனலும் ஆம்; தம்குடித் தலைமகளுக்கு வரும் நன்மையைக் கண்டு உவத்தலும் அவளுக்கு வரும் தீமையைக் கண்டு துன்புறுதலும் குடியோர் கடமையாதலின் அவருக்கும்தலைவன் தொடர்பினால் பயனுண்மையைக் கூறினாள்.

     பொருதமையினால் உண்டான புண்ணும், இயல்பாக உள்ளபுள்ளியும் காந்தள் மலரின் தோற்றத்தைத் தந்தன. துறு கல்லுக்கு யானை உவமை.

     அறவன் - நல்லன் எனலும் பொருந்தும். தம் இலர் கொல் - தம்மை ஏசுதல் இலரோ என்பதும் அமையும்.

     ‘அறவனாயினும் - தான் வரைவொடு வருதலை ஏற்றுக் கொண்டால் தலைவன் அறநெறி வழி வரைந்து கொள்ளினும், அல்லனாயினும் - அங்ஙனம் ஏற்றுக் கொள்ளாரேல் மன வலி மிக்கு நின்னை உடன்அழைத்துச் சென்றானேனும்' என்று உரைத்தலும் ஆம். இக் கருத்தை, தலைவனைச் சுற்றத்தார் ஏற்றுக் கொள்வாரோ எனக் கவன்ற தலைமகட்குத் தோழி உரைத்ததாகக் கொள்க.

    கொன்: இலைக்கு அடையாக்கி எலி, அணில் முதலியவற்றிற்கு அச்சத்தைத் தரும் ஈத்திலை என்று பொருள் உரைப்பினும் இயையும்;

  
"வரிப்புற வணிலொடு கருப்பை யாடா  
  
 தியாற்றறல் புரையும் வெரிநுடைக் கொழுமடல்  
  
 வேற்றலை யன்ன வைந்நுதி நெடுந்தகர்  
  
 ஈத்திலை வேய்ந்த வெய்ப்புறக் குரம்பை"     (பெரும்பாண். 85-8) 

என்பது காண்க.

     குரம்பை - சிறு குடில். இன்னாமை தலைவி திறத்தமைந்தது. இன்னாது: வினையெச்சம்: "இன்னா துறைவி", "இன்னா துயங்கும்"(அகநா. 164:10;270:14.)

     ஒப்புமைப் பகுதி 1-3. மலருக்கு யானையின் முகப்புண்: கலி. 48:1-6.

     காந்தள் மலருக்கு யானையின் முகத்துவரி: "நிரைத்த யானை முகத்துவரி கடுப்பப், போதுபொதி யுடைந்த வொண்செங் காந்தள்" (நற். 176:5-6.) துறுகல்லிற்கு யானை: குறுந். 13:1-2, ஒப்பு.

     4. அறவன், அல்லன்: புறநா. 44:11-3, 390:1-2.

     7. இலைக்குரம்பை: பெரும்பாண். 88; மதுரைக். 310.

     8. சிறுகுடி: குறுந். 184:2, ஒப்பு.

     (பி-ம்.) 6. வாள்வெள்ளருவி: ஐங். 314:3, கலி. 42:11.

(284)