(தலைவன் கூறிச் சென்ற பருவம் கண்டு வேறுபட்ட தலைவியைநோக்கித் தோழி வற்புறுத்தினாளாக, அவளுக்கு, "தலைவர் கூறிய பருவம் இதுவே. யான் ஒவ்வொரு நாளும் அவர் வரவை நோக்கி நிற்கின்றேன்; அவர் வந்திலர்" என்று தலைவி வருந்திக் கூறியது.)
  285.    
வைகல் வைகல் வைகவும் வாரார்  
    
எல்லா வெல்லை யெல்லையுந் தோன்றார் 
    
யாண்டுளர் கொல்லோ தோழி யீண்டிவர் 
    
சொல்லிய பருவமோ விதுவே பல்லூழ் 
5
புன்புறப் பெடையொடு பயிரி யின்புற 
    
விமைக்க ணேதா கின்றோ ஞெமைத்தலை 
    
ஊனசைஇ யொருபருந் திருக்கும் 
    
வானுயர் பிறங்கன் மலையிறந் தோரே. 
    

என்பது பருவம் கண்டு வேறுபட்ட இடத்து வற்புறுத்தும் தோழிக்குவன்புறை (பி-ம். வன்பொறை) எதிர் அழிந்து தலைமகள் சொல்லியது.

     (வன்புறை எதிர் அழிந்து - வற்புறுத்திய கூற்றுக்கு மாறாக வருந்தி.)

பூதத் தேவன்.

     (பி-ம்.) 1. ‘வைகா வைகல்’; 2. ‘யெல்லவுந் தோன்றார்’; 5. ‘பேடையொடு’; 6. ‘வமைத்தலை’, ‘மைத்தலை’; 7. ‘திறுக்கும்’, ‘பருந்திருந் துயக்கும்’.

     (ப-ரை.) தோழி -, இன் புறவு - இனிய ஆண் புறா, பல் ஊழ் - பல முறை, புல் புறம் பெடையொடு பயிரி - புல்லிய புறத்தை உடைய பெண் புறாவை அழைத்து, இமைக்கண் ஏது ஆகின்று - இமைப்பொழுதில் எத்தகைய இன்பத்தை உடையதாக ஆகின்றது! இங்ஙனம் அவைஇருப்பவும், ஞெமை தலை - ஞெமை மரத்தின் உச்சியில், ஊன் நசைஇ - இறந்தோரது தசையை விரும்பி, ஒரு பருந்து இருக்கும் - ஒற்றைப் பருந்து இருக்கின்ற, வான் உயர் பிறங்கல் மலை இறந்தோர் - வானளவும் உயர்ந்த விளக்கத்தை உடைய மலையைக் கடந்து சென்ற தலைவர், வைகல் வைகல் வைகவும் வாரார் - நாள் தோறும் விடியற் காலம் நீங்கிப் பகல் வரவும் அப்பகல் காலத்தில் வந்திலர்; எல்லா எல்லை எல்லையும் தோன்றார் - எல்லாப் பகலின் எல்லையாகிய இரவிலும் மீண்டு வந்து தோன்றார்; யாண்டுஉளர்கொல் - எங்கே இருக்கின்றாரோ? ஈண்டு இவர் சொல்லிய பருவம் இதுவே; இங்கே இவர் மீண்டு வருவேன் என்று சொல்லிய பருவம் இதுவே. பிறிதன்று.

     (முடிபு) தோழி, மலையிறந்தோர் வைகவும் வாரார்; எல்லைஎல்லையும் தோன்றார்; யாண்டுளர் கொல்? இவர் சொல்லிய பருவமோ இதுவே.

     (கருத்து) தாம் கூறிச் சென்ற பருவம் வந்த பின்பும் தலைவர் வந்திலர்.

     (வி-ரை.) தலைவன் கூறிச் சென்ற பருவம் வந்து விட்டதை அறிந்து தலைவி கவன்று வேறுபட்டாள். அப்பொழுது தோழி, "தலைவர் விரைவில் வருவர்; நீ ஆற்றியிரு" என்று வற்புறுத்தினாள். அது கேட்ட தலைவி "ஒவ்வொரு நாளும் பகலிலும் இரவிலும் அவர் வரவை எதிர்பார்த்து நிற்கின்றேன். இரவில், விடிந்தால் வருவர் என்று எண்ணுவேன்; ஆயினும் விடிந்த பின் அவர் வந்திலர்; அது கண்டு பகல் கழிந்தால் தோன்றுவர் என எண்ணுவேன்; அப்பொழுதும் வந்திலர். அவர் கூறிய பருவம் இஃது என்பதிலோ ஐயமில்லை" என்று கூறினாள்.

     நெஞ்சிற்கு அணியராதலின் இவர் என்றாள். ஆண் புறா, பெண் புறாவின் அருகிருந்து அழைத்து இன்புறுதலைத் தலைவரும் கண்டிருத்தல் கூடும் என்பதும் அக் காலத்தும் தன்னை நினைந்து மீண்டிலரே என்பதும் தலைவியின் எண்ணம்.

     ஒப்புமைப் பகுதி 1. வைகல் வைகல் வைகுதல்: "வைகலும் வைகல் வரக் கண்டு மஃதுணரார், வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்" (நாலடி. 39.)

     3. யாண்டுளர் கொல்லோ: குறுந். 176:5, ஒப்பு.

     5. ஆண் புறா பெண் புறாவைப் பயிர்தல்: குறுந். 79:4.

     8. வானுயர் பிறங்கல் மலை: குறுந். 144:7, 253:8.

(285)