எயிற்றியனார். (பி-ம்.) 1. ‘உள்ளிற்’; 2. ‘றமிர்த’, ‘றமுத’; 3. ‘மழைபோற்’; 4. ‘மழைக்கண் மடந்தை’.
(ப-ரை.) முள் எயிறு _ முள்ளைப் போன்ற கூரிய பற்களையும், அமிழ்தம் ஊறும் அம் செ வாய் - அமிழ்தம்ஊறுகின்ற அழகிய செய்ய வாயையும், கமழ் அகில் - மணம் வீசுகின்ற அகிற் புகையும், ஆரம் - சந்தனப் புகையும், நாறும் - மணக்கின்ற, அறல் போல் கூந்தல் - கருமணலைப் போலக் கரிய கூந்தலையும், பேர் அமர் மழை கண் - பெரிய அமர்ந்த குளிர்ச்சியை உடைய கண்களையும் உடைய, கொடிச்சி - தலைவியின், மூரல் முறுவலொடு -புன்னகையோடு, மதைஇய நோக்கு - செருக்கின பார்வையை, உள்ளி காண்பென் போல்வல் - நினைத்துப் பார்ப்பேன் போல்வேன்.
(முடிபு) கொடிச்சியின் மூரன் முறுவலொடு நோக்கினை உள்ளிக்காண்பென் போல்வல்.
(கருத்து) யான் அளவளாவிய தலைவியை இனிக் காண்டல் அரிது போலும்.
(வி-ரை.) உள்ளிக் காண்பென் என்றது கண்ணால் காண்டல் அரிதென்றபடி. போல்வல் என்றது ஒப்பில் போலியாகி ஐயப் பொருளை உடையதாயிற்று. செவ்வாய் அமிழ்தும், கூந்தல் பாயலும் அவனுக்கு இன்பத்தை அளித்தனவாதலின் அவற்றைச் சிறப்பித்தான். அமர்க்கண் - ஒன்றை ஒன்று அமர்த்த கண்; தம்மைக் காண்பாரை அமர்த்த கண்கள் எனலும் பொருந்தும்; பிறருக்கு அமர்த்த கண்ணாயினும் எனக்கு மழைக்கண் ஆயின என்றான். மதை இய நோக்கு - செருக்கின பார்வை; ‘மதைஇய நோக்கு - செருக்கின நோக்கு; என்றது எக் காலத்தும் அவள் என்னளவில் அன்புடையவளாய் இருப்பாள்; அவளறிவது ஒன்றுண்டோ? உன்னுடைய கொடுமை அல்லவோ இந்த மாறுதல்? எனத் தோழியோடு புலந்து கூறினான்' (அகநா. 86:30, உரை) என்பது ஈண்டும் ற்புடைத்தாதல் காண்க.
அமிழ்தமூறும் செவ்வாயென்றும் அறல்போல் கூந்தலென்றும்கூறியவற்றால், முன்னுறு புணர்ச்சி முறையுற மொழிந்தான். ‘இங்ஙனம் முன்னரே ஒன்றுபட்ட எங்களை நீ நடுநின்று விலக்குவதால் பயனென்' என்பதுபடக் கூறி, தோழி மறாவகை செய்தான்.
தலைவியின்பால் வறிதுநகை தோற்றிய காலத்துக் கண்டு மகிழ்ந்து அவளது அருட் பார்வையால் உள்ளந் தளிர்த்தவனாதலின் அவ்விரண்டையும் உள்ளிக் காண்பெ னென்றான்.
இரண்டாவது கருத்து: தலைவியை மீட்டும் ஒருகால் பெறுவேனோ;என வருந்திக் கூறியது.
மேற்கோளாட்சி மு. ஒரு தலையுள்ளுத லென்னும் மெய்ப்பாடு வந்தது
(தொல். களவு,
9, இளம்;
இ. வி. 405); "தலைமகளைக் காணா வகையிற்பொழுது மிகவும் கடந்தபொழுது தலைவன் கூறியது (
தொல். களவு.
17, இளம்); இருவரும் உளவழி வந்த தலைவன் தலைவி தன்மை கூறவே, இவள் கண்ணது இவன் வேட்கை என்று தோழி குறிப்பான் உணர அவன் கூறியது (
தொல். களவு.
11, ந.); பின்னாள் நெடுந்தகை குறிவயின் நீடு சென்றிரங்கியது
(நம்பி. 156.) ஒப்புமைப் பகுதி 1. முள்ளெயிறு: குறுந். 262:4. ஒப்பு. 1-2. எயிற்றில் ஊறிய அமிழ்தம்: குறுந். 14:1-2, ஒப்பு. 3. ஆரம் நாறும் கூந்தல்: "சாந்துளர் நறுங்கதுப்பு"
(குறுந். 312:6) 4. பேரமர்க்கண்: குறுந். 131:2, ஒப்பு, பேரமர் மழைக்கண் நற். 29:9, 44:2, 391:10; ஐங். 214:4; அகநா. 326:2. 5. மதைஇய நோக்கு: கலி. 131:21; அகநா. 86:30, 130:14; சிலப். 8:76. 1-5. தலைவன் தலைவியின் நோக்கை நினைத்தல்: "உள்ளுபதில்ல தாமே ... ... ... திங்க ளன்னநின் றிருமுகத், தொண்சூட் டவிர்குழை மலைந்த நோக்கே"
(அகநா. 253:21-6); "மடங்கெழு நோக்க மரீஇய நெஞ்சே'
(தமிழ்நெறி. மேற். 164.)