(தலைவன் அன்பிலன் என்று தோழி கூறிக் கொண்டிருப்ப, அவனது வரவு உணர்ந்த தலைவி அவன் செய்வன யாவும் இனியன என்று கூறியது.)
 288.    
கறிவள ரடுக்கத் தாங்கண் முறியருந்து  
    
குரங்கொருங் கிருக்கும் பெருங்க னாடன் 
    
இனிய னாகலி னினத்தி னியன்ற 
    
இன்னா மையினு மினிதோ 
5.
இனிதெனப் படூஉம் புத்தே ணாடே. 
    

என்பது தலைமகனது வரவு உணர்ந்து, நம்பெருமான் நமக்கு அன்பிலன் என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

     (கிழத்தி உணர்ந்து தோழிக்கு உரைத்ததென்க.)

கபிலர்.

     (பி-ம்.) 2. ‘கிகுக்கும்;’ 3. ‘னினத்தியன்ற.’

     (ப-ரை.) தோழி - கறி வளர் அடுக்கத்து ஆங்கண் - மிளகு கொடி வளர்கின்ற மலைப் பக்கமாகிய அவ்விடத்தே, முறி அருந்து குரங்கு ஒருங்கு இருக்கும் - தளிரை உண்ணுகின்ற குரங்குகள் ஒன்றாகத் திரண்டு இருக்கின்ற, பெரு கல் நாடன்-பெரிய மலைகளை உடைய நாட்டினனாகிய தலைவன்,இனியன் - பிரிந்தனனாயினும் நம் மாட்டு இனிமையை உடையான்; ஆகலின்--, இனத்தின் இயன்ற இன்னாமையினும் - உறவுடையாரால் செய்யப்படும் இன்னாமையைக் காட்டி லும், இனிது என படும் புத்தேள் நாடு - இனியதென்றுசிறப்பிக்கப்படும் தேவர் உலகம், இனிதோ - இனிமையை உடையதோ?

     (முடிபு) நாடன் இனியனாகலின், இனத்தின் இயன்ற இன்னாமையினும் புத்தேணாடு இனிதோ?

     (கருத்து) அன்புடைய தலைவன் செய்வன யாவும் இனியனவே.

     (வி-ரை.) தலைவனது வரவு நீட்டித்ததாகத் தோழி, “தலைவன்நம்பால் அன்பிலன்” என இயற்பழித்தாள்; அப்பொழுது தலைவன் வந்தான்; அவன் வரவை அறிந்த தலைவி, “அன்புடைய உறவினர்செய்யும் இன்னாமை தேவர் உலக இன்பத்தினும் சிறந்தது” என்று கூறிஇயற்பட மொழிந்தாள்.

     இனத்தின் மேல் வைத்துக் கூறினும் கருதியது தலைவனையேஎன்க. அவன் இனியனாகலின், அவன் செய்வனவற்றுள் சில இன்னாதனவாகத் தோன்றினும், முடிவில் இனியனவாகவே முடியும் என்பதுதலைவியின் கருத்து. இனிதோ: ஓகாரம் எதிர்மறைப் பொருளது.

     புத்தேணாடு ஒரு படித்தாக இன்பம் பயத்தலின் அதனை நுகர்வார்இன்பத்தின் அருமையை அறியார்; தலைவன் செய்யும் இன்னாமை பின்வரும் இன்பம் மிகுதிப்படுவதற்குக் காரணமாகி அவ்வின்பத்தின்அருமையை அறியச் செய்தலின் அவ்வின்னாமை புத்தேணாட்டினும்இனிதாயிற்று;

  
“இனியவ ரென்சொலினு மின்சொல்லே”         (நீதிநெறி.) 
  
“மாசற்ற நெஞ்சுடையார் வன்சொ லினிது”         (நன்னெறி)  

என்பவற்றில் சொல்லுக்குக் கூறிய கருத்து ஈண்டு நினைதற்குரியது.

  
“.. ... ..... ... .... ... நரகம் பெறினும்  
  
 எள்ளேன் றிருவரு ளாலே யிருக்கப் பெறினிறைவா”          (திருவாசகம்)  

என்பதும் இக் கருத்தோடு ஒப்புமை உடையது.

     ஒப்புமைப் பகுதி 1. கறிவள ரடுக்கம்: குறுந். 90:2; புறநா. 168:2. மலையின் மிளகு கொடி வளர்தல்: ஐங். 243:1; அகநா. 2:6, 112:14; சிலப். 28:114.

     1-2. முறியருந்து குரங்கு: “முறிமே யாக்கைக் கிளை” (மலைபடு.313); “முறிமேய் கடுவன்” (ஐங். 276:1.)

     குரங்கு கறிமுறி யுண்ணுதல்: அகநா. 182:14; திருச்சிற். 196.

     3-4. தலைவன் செய்யும் இன்னாமை இனிதாதல்: “நாடனயமுடைய னென்பதனா னீப்பினும், வாடன் மறந்தன தோள்” (ஐந். எழு.2.)

     4-5. ஒருவாறு ஒப்பு: குறள், 1323

(288)