(தலைவன் கூறிய பருவம் வந்தது கண்டு தலைவி வேறுபட்டாள்எனக் கவலையுற்ற தோழிக்கு, “நான் அவரை நினைந்து இரங்கினேன்அல்லேன்; என் பொருட்டுக் கவலை உடையார் போல் இவ்வூரினர்அவரைக் கொடியர் என்பதை அறிந்தே வருந்தினேன்” என்று தலைவி கூறியது.)
 289.    
வளர்பிறை போல வழிவழிப் பெருகி  
    
இறைவளை நெகிழ்த்த வெவ்வ நோயொடு 
    
குழைபிசைந் தனையே மாகிச் சாஅய் 
    
உழைய ரன்மையி னுழப்ப தன்றியும் 
5
மழையுந் தோழி மான்றுபட் டன்றே  
    
பட்ட மாரி படாஅக் கண்ணும் 
    
அவர்திறத் திரங்கு நம்மினும்  
    
நந்திறத் திரங்குமிவ் வழுங்க லூரே. 

என்பது காலங்கண்டு வேறுபட்டாள் எனக் கவன்ற தோழிக்கு, “காலத்துவந்திலரென்று வேறுபட்டேன் அல்லேன். அவரைப் புறத்தார் கொடியர்என்று கூறக் கேட்டு வேறுபட்டேன்” என்று தலைமகள் சொல்லியது.

பெருங்கண்ணன்.

     (பி-ம்) 1. ‘வழிவழிப் பெருகி;’ 6. ‘கண்ணம்’

     (ப-ரை.) தோழி--, வளர் பிறை போல - பூருவ பக்கத்துவளர்கின்ற பிறையைப் போல, வழி வழி பெருகி - மேலும்மேலும் பெருக்கத்தை அடைந்து, இறைவளை நெகிழ்த்த எவ்வம் நோயொடு - தோட்சந்தில் அணிந்த வளையை நெகிழச் செய்த துன்பத்தைத் தரும் காம நோயினால், குழைபிசைந்தனையேம் ஆகி - தளிரைக் கசக்கினாற் போன்ற நிலையை உடையேமாகி, சாஅய் - மெலிந்து, உழையர் அன்மையின் - அந் நோயைத் தீர்ப்பதற்குரிய தலைவர்பக்கத்தில் உள்ளார் அல்லாமையினால், உழப்பது அன்றியும் - நாம் துன்பப்படுவது அல்லாமலும், மழையும் - இம் மழையும், மான்று பட்டன்று - மயங்கிப் பெய்தது, பட்டமாரி படாஅ கண்ணும் - அங்ஙனம் பெய்த மழை பெய்வதற்கு முன்னரே, இ அழுங்கல் ஊர் - இந்தக் கலக்கத்தை உடைய ஊரில் உள்ளார், அவர் திறத்து இரங்கும் நம்மினும் - அவர் பொருட்டு வருந்துகின்ற நம்மைக் காட்டிலும் மிக, நம் திறத்து இரங்கும் - நம்மாட்டு இரங்குவர்.

     (முடிபு) தோழி, அனையேமாகிச் சாஅய் உழப்பதன்றியும் மழையும்மான்றுபட்டன்று; படாஅக் கண்ணும் ஊர் இரங்கும்.

     (கருத்து) பிறர் தலைவரைக் கொடியர் என்பது நினைந்து வேறுபட்டேன்.

     (வி-ரை.) தோள்வளை நெகிழ்தல் மெலிவின் மிகுதியைப் புலப்படுத்தலின் இறை, தோட்சந்தாயிற்று; முன் கையுமாம். நெகிழ்த்த நோய், எவ்வநோய் என்க. தலைவிக்குத் தளிரை உவமை கூறுதல் மரபு. சாஅய் - மேனி நலம் மெலிந்து. மான்றுபடல் - மயங்கி வீழ்தல் (அகநா. 39:13.) காலம் அல்லாத காலத்து மழை என்பது தலைவியின் நினைவு.

     கார்ப்பருவம் வந்த இடத்து, “மழை பெய்தது; தலைவர் வந்திலர்;இவள் வேறுபட்டாள்; இவளை இந் நிலையில் இருக்கச் செய்த அவர் கொடியர்” என்று தோழி கவன்றாளாக அதனை அறிந்த தலைவி இது கூறினாள்.

     “அவரைப் பிரிந்து நாம் துன்பப்படுகின்றோம்; இதன் மேலும்மழையானது மயங்கிப் பருவம் அல்லாத காலத்துப் பெய்தது; அதுபெய்வதற்கு முன்பே இவ்வூரினர் நமக்கு இரங்குவார் போல அவரைக் கொடியர் என்கின்றனர். நம்பால் இவர்கட்கு நம்மினும் உள்ள ஆதரவுதான் என்னே!” என்றாள் தலைவி.

     அழுங்கல் - ஆரவாரமுமாம். ஊரென்று கூறினளாயினும் கருதியதுதோழியை என்க (ஐங். 154, உரை.)

     இதனால் தோழி கவலுதல் வீண் என்பதை அறிவுறுத்தினாள்.

     இச் செய்யுள் பொருளோடு இந்நூல் 224-ஆம் செய்யுள் ஒருவாறுஒப்புமை உடையது.

     ஒப்புமைப் பகுதி 1. வளர்பிறை போலப் பெருகுதல்: “குடமுதற் றோன்றிய தொன்றுதொழு பிறையின், வழிவழிச் சிறக்கநின் வலம்படு கொற்றம்” (மதுரைக். 193-4); “ஆநா ணிறைமதி யலர்தரு பக்கம்போல், நாளி னாளி னளிவரைச் சிலம்புதொட்டு, நிலவுப்பரந் தாங்கு நீர்நிலம் பரப்பி” (பரி. 11:31-3); “பெரியவர் கேண்மை பிறைபோல நாளும், வரிசை வரிசையா நந்தும்” (நாலடி. 125); “நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்,பின்னீர பேதையார் நட்பு” (குறள், 782); “சுடர்ப்பிறை போலப், பெருக்கம் வேண்டி” (பெருங். 2. 6:35-6.)

     2. வளை நெகிழ்த்த நோய்: “தோள், இலங்குவளை நெகிழ்த்தகலங்கஞர்” (நற். 214:9-10.)

     வளை நெகிழ்தல்: குறுந். 11:1, ஒப்பு; நற். 236:7; ஐங். 20:5,165:4.

     3. தலைவியின் மேனிக்குத் தளிர் உவமை: குறுந். 62:4-5,ஒப்பு, 331:6-7, 383:5; ஐங். 216:5-6.

     4. உழையர்: நற். 312:6.

     6. பட்டமாரி: நற். 2:9; புறநா. 82:2.

     8. அழுங்கலூர்: குறுந். 12:6, ஒப்பு.

(289)