ஒளவையார். (பி-ம்) 1. ‘புல்லுரைத்தாஅய்’ 2. ‘பெயனீர்க்கேற்றன’ 4. ‘அரிதயர் வுற்றனை’, ‘என்றும்’.
(ப-ரை.) நெஞ்சே -, நல் உரை இகந்து - நல்ல உரைகள் நீங்கி, புல் உரை தாஅய் - பயனற்ற உரைகள் பரவப் பெற்று, பெயல் நீர்க்கு ஏற்ற - பெய்தலை உடைய மழையின் நீரை ஏற்றுக் கொண்ட, பசு கலம்போல - சுடப் படாத பசு மண்ணாலாகிய பாண்டத்தைப் போல, உள்ளம் தாங்கா - உள்ளத்தினால் பொறுக்க முடியாத, வெள்ளம் நீந்தி - ஆசை வெள்ளத்தில் நீந்தா நின்று, அரிது - பெறுதற் கரியதை, அவாவுற்றனை - பெற விரும்பினை; உயர் கோடு - உயர்ந்த மரக் கொம்பில் உள்ள, மக உடை மந்தி போல - குட்டியை உடைய பெண் குரங்கு தன் குட்டியால் தழுவப் பெற்று அமைவது போல, அகன் உற - மனம் பொருந்த, தழீஇ - நின் கருத்தைத் தழுவிக் கொண்டு, கேட்குநர் - நின் குறையைக் கேட்டு நிறைவேற்றுவாரை, பெறின் - பெறுவாயாயின், நின் பூசல் - உனது போராட்டம், நன்றும் பெரிது - மிகவும் பெருமை உடையது.
(முடிபு) நெஞ்சே, நின் பூசல் கேட்குநர்ப் பெறின் பெரிது.
(கருத்து) இனித் தலைவியை இரவில் காண்டல் அரிது.
(வி-ரை.) நல்லுரை என்றது தன் விருப்பத்திற்கு இணங்கி இரவுக் குறி நேரும் உரையை. புல்லுரை என்றது இரவுக் குறி மறுத்து வரைவு கடாயதை. பசுங்கலம் நீரைத் தாங்காமை - உள்ளம் ஆசை வெள்ளத்தைத் தாங்காமைக்கு உவமை. நீர்க்கேற்ற - நீரையேற்ற; உருபு மயக்கம் (குறுந். 28:5) நீந்துதல் - உட்டுளைதல்; ஆசை வெள்ளத்தில் நிலையின்றித் தடுமாறுதல். அரிது - இரவுக்குறி; தோழி அதனை மறுத்தமை அரிது என்பதனால் பெறப்பட்டது. நெஞ்சிற்கு உள்ளம் கூறுதல் மரபு. நெஞ்சை இங்கே விளித்துக் கூறியது, “நோயு மின்பமு மிருவகை நிலையிற், காமங் கண்ணிய மரபிடை தெரிய, எட்டன் பகுதியும் விளங்க வொட்டிய, உறுப்புடையது போலுணர்வுடை யதுபோல், மறுத்துரைப் பதுபோ னெஞ்சொடு புணர்த்தும்” (தொல். பொருளியல், 2) என்னும் இலக்கணம் பற்றி. நன்றும் என்பது மிகுதியைப் புலப்படுத்தி நின்றது; “நன்றும், சேய வம்ம விருவர்தம் மிடையே” (குறுந். 237:3-4). கேட்குநர் என்றது கேட்டுக் குறை தீர்ப்பவர்களை; “வழிபடு வோரை வல்லறி தீயே” (புறநா. 10:1) என்பதையும், ‘வழிபடுவோரை வல்லறிதி யென்றது, அறிந்து அவர்களுக்கு அருள் செய்வை என்பதாம்’ என்னும் அதன் விசேட உரையையும் காண்க. கேட்குநர்ப் பெறினே என்றது கேட்பார் அறியராயினமையை உணர்த்தியது (குறள்.334, பரிமேல்.)
(மேற்கோளாட்சி) 5-6. மகவென்பது குரங்கின் இளமைப் பெயர் (தொல். மரபு.14, பேர்.) மு. தோழியால் வரைவு கடாவப்பட்ட பின்னரும் தலைவன் களவொழுக்கம் வேண்டிக் கூறியது (தொல்.களவு. 17, இளம்.) தோழி இவ்விடத்துக் காவலர் கடியரெனக் கூறிச் சேட்பட நிறுத்தலில் தனக்கு உண்டாகிய வருத்தத்தால் தலைவனுக்குக் கூற்று நிகழும் (தொல். களவு.11, ந.)
ஒப்புமைப் பகுதி 2. நீரையேற்ற பசுங்கலம்: “ஈர்மட் செய்கை நீர்படு பசுங்கலம், பெருமழைப் பெயற்கேற் றாங்கு” (நற்.308:9-10): “பசுமட், கலத்துணீர் பெய்திரீஇ யற்று” (குறள்.660); “எழிலையாழ் செய்கைப் பசுங்கலன் விசும்பி னின்றுளி படநனைந் துருகி” (திருவிசைப்பா, கருவூர்த் திருவிடைமருதூர், 7)
3. ஆசை வெள்ளம்: “இருவே நீந்தும் பருவரல் வெள்ளம்” (நற்.339:4).
4. அரிது: குறுந்.298:2. நன்றும் பெரிது: குறுந்.237:3. 3-4 நெஞ்சுக்கு உள்ளம் கூறும் மரபு: “வருந்தினை வாழியென்னெஞ்சே ... செல்லினிச் சிறக்கநின் னுள்ளம்” (அகநா.19:2-8)
6. மகவுடை மந்தி: “பார்ப்புடை மந்திய மலை”, “பைங்கண் மந்தி பார்ப்பொடு கவரும்” (குறுந்.278:7, 335:4): “மலையார் சாரன் மகவுடன் வந்த மடமந்தி” (தே.திருஞா.திருக்குற்றாலம்). 6-7.மந்தி மகவைத் தழுவுதல்: “குந்தி வாழையின் கொழுங்கனி நுகர்ந்துதன் குருளையைத் தழுவிப்போய், மந்தி மாம்பணை மேல்வைகு நாங்கூர் வண்புருடோத் தமமே” (திவ்.பெரியதிரு.4.2:9).
மு. | “பின்னிலை வேட்டல் பெரிதினி தேபின்னர் மாறிநின்று |
| தன்னிலை தேய்ந்து தணியா ருயிரைத் தழீஇக்கொடொன்றா |
| முன்னிலை யீச னருள்போற் றழுவி முனிதுயர்கூர் |
| என்னிலை நோக்கி யிரங்கவல் லார்ப்பெறி னேழைநெஞ்சே” |
| (தணிகைப்.களவுப்.259) |
(29)