(தலைவன் இரவுக்குறிக்கண் வந்து சிறைப்புறத்தானாக, அதனைஅறிந்த தோழி தலைவிக்குக் கூறுவாளாய், “நம் தாய், ஒரு நாள் தலைவன் வந்ததை அறிந்தாள்; அறிந்த அன்று முதல் முன்னையினும் மிகப் பாதுகாத்து வருகின்றாள்” என்று கூறி விரைவில் வரைந்து கோடலே நன்று என்பதைப் புலப்படுத்தியது.)
 292.    
மண்ணிய சென்ற வொண்ணுத லரிவை 
    
புனறரு பசுங்காய் தின்றதன் றப்பற் 
    
கொன்பதிற் றொன்பது களிற்றொ டவணிறை 
    
பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான் 
5
பெண்கொலை புரிந்த நன்னன் போல 
    
வரையா நிரையத்துச் செலீஇயரோ வன்னை 
    
ஒருநாள், நகைமுக விருந்தினன் வந்தெனப் 
    
பகைமுக வூரிற் றுஞ்சலோ விலளே. 

என்பது தோழி இரவுக் குறிக்கட் சிறைப்புறமாகக் காப்பு மிகுதிசொல்லியது.

பரணர்.

    (பி-ம்.) 1. ‘பொன்னுத லரிவை’; 2. ‘றப்பிற்’; 4. ‘கொடுப்பினுங்’;6. ‘செலீஇயளோ’.

    (ப-ரை.) அன்னை - தாய், ஒரு நாள் - ஒரு நாளில்,நகை முகம் விருந்தினன் வந்தென - நகுதலை உடையமுகத்தைக் கொண்ட விருந்தினனாகித் தலைவன் வந்தானாக,பகைமுகம் ஊரின் - பகைவர் மாறுபடும் போர்க் களத்தின்கண் உள்ள ஊரினரைப்போல, துஞ்சல் இலள் - பலநாளும்துயில் செய்தல் இலள்; மண்ணிய சென்றஒள் நுதல் அரிவை -நீராடும் பொருட்டுச் சென்ற ஒள்ளிய நெற்றியை உடையபெண், புனல் தரு பசு காய் தின்றதன் தப்பற்கு - அந்நீர்கொணர்ந்த பசுங்காயைத் தின்றதாகிய குற்றத்திற்காக,ஒன்பதிற்று ஒன்பது களிற்றோடு - எண்பத்தொரு ஆண்யானைகளோடு, அவள் நிறை பொன் செய் பாவை கொடுப்பவும் கொள்ளான் - அவளது நிறையை உடைய பொன்னால்செய்த பாவையைக் கொடுப்பவும் கொள்ளானாகி, பெண்கொலை புரிந்த நன்னன் போல - அப்பெண்ணைக் கொலைசெய்த நன்னனைப் போல, வரையா நிரையத்து செலீஇயர் -நீக்குதல் இல்லாத நரகத்தின்கண் சென்று துன்புறுவாளாக.

     (முடிபு) அன்னை, ஒரு நாள் விருந்தினன் வந்தெனத் துஞ்சல்இலள்; நிரையத்துச் செலீஇயர்.

     (கருத்து) அன்னையின் காப்பு இப்பொழுது மிக்கது.

     (வி-ரை.) நன்னன் என்னும் சிற்றரசன் ஒருவன் ஆற்றங்கரையில்இருந்த தன் தோட்டத்தில் அரிதின் வளர்த்த மா மரத்தின் காயொன்றுஅவ்வாற்றிலே வீழ்ந்து மிதந்து வர, அதனை ஆற்றிற்கு நீராடச் சென்றபெண் ஒருத்தி எடுத்துத் தின்றாள். அது கண்ட காவலர் அவளைநன்னன்முன் கொண்டு நிறுத்த, அவன் அவளுக்குக் கொலைத்தண்டம்விதித்தான்; அதனை அறிந்த அவள் தந்தை அவளது நிறைக்கேற்றபொன்னால் செய்த பாவையையும், எண்பத்தொரு களிற்றையும் தண்டமாக இருப்பதாகக் கூறவும் நன்னன் அதற்கு உடம்படாமல் கொலை புரிவித்தான்.

     அரசனைப் பிழைத்தவர் தம் நிறையுள்ள பொன்னால் பாவைசெய்து தண்டமாக இறுத்தல் மரபு;

  
“.. ... ... ... .. ஆடுவி ருளிரெனின் 
  
 ஆடகப் பொன்னினு மளவி னியன்ற 
  
 பாவை யாகும் படுமுறை”          (பெருங். 1. 40:371-3.)  

     தலைவன் விருந்தினர்களோடு ஒருவனாகப் புக்கபோது தாய் அவனை அறிந்து கொண்டாள்; இங்ஙனம் புகுவதுண்டு என்பது, இந்நூல் 118-ஆம் செய்யுளாலும் பெறப்பட்டது.

     மேற்கோளாட்சி 2. தன்மை முன்னிலைகட்குரிய தரலென்பது படர்க்கைக்கண் வந்தது (தொல். கிளவி. 30,இளம், கல், 29, ந; நன். 380, மயிலை; இ.வி. 301.)

     5-6. நன்னன் பெண் கொலை செய்த குற்றத்தால் அவனது குலத்தில் பிறந்தார், சான்றோரால் வரையப்படுதற்குக் காரணமாவர் (புறநா. 151, உரை.)

     மு. புகாக் காலத்துத் தலைமை மிக்க தலைவன் புக்கதற்குவிருந்தேலாது, செவிலி இரவும் துயிலாதாளைத் தலைவி முனிந்து கூறியது(தொல்.களவு. 16, ந.): “தாய் துஞ்சாமை” (நம்பி. 161; இ.வி.519.)

     ஒப்புமைப் பகுதி 3. தப்பல்: குறுந். 79:7, ஒப்பு.

     4. பொன் செய் பாவை கொடுத்தல்: அகநா. 127:8.

     8. பகை முக ஊர் துஞ்சாமை: குறுந். 91:7-8, ஒப்பு.

(292)