தேவ குலத்தார். (பி-ம்.) 3. ‘கருங்காற் குறிஞ்சிப்.’
(ப-ரை.) சாரல் - மலைப் பக்கத்தில் உள்ள, கரு கோல் குறிஞ்சிப் பூ கொண்டு - கரிய கொம்புகளை உடைய குறிஞ்சி மரத்தின் மலர்களைக் கொண்டு, பெரு தேன் இழைக்கும் -பெரிய தேனை வண்டுகள் செய்தற்கு இடமாகிய, நாடனொடு நட்பு- நாட்டைஉடைய தலைவனோடு யான் செய்த நட்பானது, நிலத்தினும் பெரிது-பூமியைக் காட்டிலும் அகலம் உடையது; வானினும் உயர்ந்தன்று-ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தது; நீரினும் அருமை அளவின்று- கடலைக் காட்டிலும் அளத்தற்கரிய ஆழம் உடையது.
(முடிபு) நாடனொடு செய்த நட்பு, பெரிது; உயர்ந்தது; அளவினதுஎன்க.
(கருத்து) தலைவனொடு செய்த நட்பு மிகச் சிறந்தது.
(வி-ரை.) அளவின்று- அளவினை உடையது; ‘இருபாற்பட்ட வொருசிறப் பின்றே’’ (தொல்.புறத்.16); ‘பெரும்புலம் பின்று’’ (நற்.54:5.) கருங்கோல்: கருமை- வன்மையுமாம். குறிஞ்சி: இது பன்னிரண்டு வருடத்திற்கு ஒரு முறை மலரும் என்றும், அம்மலரில் இருந்துஈக்களால் எடுக்கப்படும் தேன் மிக்க சுவையை உடையது என்றும்,நீலகிரியில் உள்ள தொதுவர் என்னும் ஒருவகைச் சாதியார் இது மலரும்காலத்தைக் கொண்டே தம்முடைய பிராயத்தைக் கணக்கிடுவர் என்றும்சொல்வர். பெருந்தேன்- அளவிற் பெரிதாகிய மலைத்தேன்; ‘நெடுவரைப்பெருந்தேன்’’, "பெருந்தேன் கண்படுவரை’’ (குறுந்.60:1-2, 273:5); ‘கயிலையுகுபெருந்தேன்" (திருச்சிற்.16); "இம்மலைப் பெருந்தேன்’’ (பெரிய.11;101) தேன்- தேனடையுமாம். நாடன்- குறிஞ்சி நிலத் தலைவன்; ‘குறிஞ்சி நிலமுடைமையால் நாடனென்று சொல்லுவேனோ` (புறநா.49:1,உரை);‘கணங்கொ ளருவிக் கான்கெழு நாடன்’’ (ஐங். 183:1).
(மேற்கோளாட்சி) 3. ‘முதற்பொருள் முதலிய மூன்றுங்கொண்டே இவ்வைந்திணை ஆமென மேற்கூறுபவாகலின் இவற்றிற்கு இப் பெயரும் முறையும்முறையான கருப் பொருள் பற்றியும் உரிப் பொருள் பற்றியும் ஆயினபோலும்என்பது; அற்றேல் பொருள் கொருள் பலவன்றே? அவற்றுள் குறிஞ்சிமுதலாயினவற்றால் பெயர் பெற்றவாறு என்னை யெனின், கருங்கோற் குறிஞ்சியெனவும்... சான்றோரான் எடுத்துக் கூறப்படுதலின் அவற்றுள்அவை சிறத்தலானென்க’ (இ.வி.379.)
3-4. ‘முல்லை குறிஞ்சி யென்பன இடுகுறியோ காரணக் குறியோ வெனின் ஏகதேச காரணம் பற்றி முதலாசிரியர் இட்டதோர் குறியென்று கொள்ளப்படும்; என்னை காரணமெனின்... கருங்கோற்... நட்பே: என்ற வழி மைவரையுலகிற்குக் குறிஞ்சிப் பூச் சிறந்ததாகலானும்... இந்நிலங்களை இவ்வாறு குறியிட்டார் என்று கொள்ளப்படும்' (தொல். அகத்.5, இளம்.)
2-4. ‘சாரற்... நட்பே; இதில் நாட்டிற்கு அடையாகி வந்த குறிஞ்சிப்பூவும் தேனும் இறைச்சிப் பொருள் என்று கொள்க' (தொல்.பொருளியல்33, இளம்; இ.வி.588.)
மு. ‘நிலத்தினும்... நட்பே என்பது பெருமை வியப்பு; கருங்கோற்குறிஞ்சிப் பூக் கொண்டு பெருந்தேன் இழைத்தாற்போல வழிமுறைமுறையால் பெருகற்பலதாகிய நட்பு மற்று அவனைக் கண்ணுற்றஞான்றேநிலத்தினது அகலம்போலவும் விசும்பினோக்கம் போலவும் கடலின் ஆழம்போலவும் ஒரு காலே பெருகிற்றென்றமையின்; இது தன்கட்டோன்றிய பெருமை வியப்பு; இது தலைமகன் கருத்தினுள்ள நட்பிற்குக் கொள்ளுங்கால் பிறன்கட்டோறிய பெருமை வியப்பா மென்பது கொள்க’ (தொல்.மெய்ப்.7, பேர்; இ.வி.578); ‘தலைவிக்கு உரிமையைக் கொடுத்த கிழவோன்மாட்டுப் பெருமை யிற்றிரியாத அன்பின்கண்ணும்தலைவிக்குக் கூற்று நிகழும்; நிலத்தினும்... நட்பே: எனவரும்’ (தொல்.கற்பு.6, இளம்.); ‘இது நிறுத்தற்கட் கூறியது’ (தொல். கற்பு. 6, ந); 'இஃது ஈற்றயலடி மூச்சீர்த் தாயிற்று’ (தொல். செய்.68, ந.); இஃது ஈற்றயலடி முச்சீரான் வந்தமையின் நேரிசை ஆசிரியப்பா’ (வீர.யாப்புப்.9; யா.வி.71; யா. கா. செய்.7, இ.வி.747); ‘ஆசிரிப்பா அளவடியான் வந்தது' (யா.வி.27.)
ஒப்புமைப் பகுதி 1. ‘நிலத்தினும் பெரிதே நேர்ந்தவர் நட்பே’’ (தொல். களவு. 20, ந. மேற்.)
2. ‘கடலினும் பெரிதெமக் கவருடை நட்பே’’ (ஐங்.184:4.)
1-2. நிலம் வான் கடல் என்ற மூன்றும் பெருமைக்கு எல்லையாகக் கூறப்படுதல்; ‘காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும், ஞாலத்தின் மாணப் பெரிது’’, ‘‘பயன்றூக்கார் செய்த உதவி நயன்றூக்கின் நன்மை கடலிற் பெரிது’’, "வானுயர் தோற்ற மெவன்செய்யுந் தன்னெஞ்சம், தானறி குற்றப் படின்’’, (குறள்.102,103, 272); ‘மண்ணினும் வானினுமற்றை மூன்றினும், எண்ணினும் பெரியதோரிடர்’’(கம்ப.அயோமுகி.99.)
3. கருங்கோற் குறிஞ்சி: ‘கருங்கோற் குறிஞ்சிநும் முறைவினூர்க்கே’’(அகநா.308:16); ‘கருங்கோற் குறிஞ்சி யடுக்கம்’’ (புறநா.374:8); ‘கருங்கோற்குறிஞ்சியுங் கடிநாள் வேங்கையும்’’ (பெருங்.1:50:26).
4. நாடனது நட்பு: ‘மலைநாடன் கேண்மை’’ (திணைமா. 18).
3-4. குறிஞ்சித்தேன்: "குறிஞ்சிப் பெருந்தேனிறால்’’ (கல்.'வேற்றுப் பிடி')
(3)