கச்சிப் பேட்டு நன்னாகையார்.(பேட்டு: இது ‘பட்டு’ என வழங்குகின்றது). (பி-ம்) 1. ‘யகலநற்’; 2. ‘மெய்யுறமரீஇ’ 3. ‘வாய்த்தரு’, ‘வரத்தகை கனாமுன் மருட்ட’ 6. ‘வளியன்’.
(ப-ரை.) தோழி - , கேட்டிசின் - கேட்பாயாக: அல்கல்- இராக் காலத்தில், பொய்வலாளன் - பொய் கூறுதலில் வன்மை உடைய தலைவன், மெய் உறல் மரீஇய - என் உடம்புடன் அணைதலைப் பொருந்திய, வாய் தகை - மெய்போலும் தன்மையை உடைய, பொய்கனா - பொய்யாகிய கனவு, மருட்ட - மயக்கத்தை உண்டாக்க, ஏற்று எழுந்து - துயிலுணர்ந்து எழுந்து, அமளி தைவந்தனன் - தலைவனென எண்ணிப் படுக்கையைத் தடவினேன்; வண்டுபடு குவளை மலரின் - வண்டுகள் வீழ்ந்து உழக்கிய குவளை மலரைப் போல, சாஅய் - மெலிந்து, மன்ற - நிச்சயமாக, தமியேன் - தனித்தவளாயினேன்; யான் - அத்தகைய யான், அளியேன் - அளிக்கத் தக்கேன!்
(முடிபு) தோழி, கேட்டிசின்; பொய்வலாளன் மரீஇய பொய்க்கனா மருட்ட எழுந்து அமளி தைவந்தனன்; தமியேன் அளியேன்!
(கருத்து) யான் தலைவனோடு அளவளாவியதாகக் கனாக் கண்டேன்.
(வி-ரை.) கேட்டிசின்: சின் முன்னிலையசைச் சொல் (தொல். இடை. 27); நற். 103:1 வாழி: அசை நிலை. அல்கல் - இரவு (கலி.65:2). பொய்வலாளன் என்றது தான் கூறிய நாளில் வந்து வரையாமையைப் புலப்படுத்தியது. வாய்த்தகைப் பொய்க்கனா - உண்மையைப் போலத் தோன்றிப் பொய்யாக முடியும் கனவு; இது கனவு என்னும் மெய்ப்பாடு. ஏற்றெழுதல் - துயிலுணர்ந்தெழுதல் (மலைபடு.257, ந.) தமியேனென்றாள் நனவில் தனியளானமை பற்றி.
(மேற்கோளாட்சி) மு. காமம் இடையீடுபட்டுழித் தலைவி கனாக் காண்டலும் உரித்து (தொல்.பொருளியல், 3, இளம், இ.வி. 571); வரைதற்குப் பிரிய,வருந்துகின்றது என்னென்ற தோழிக்குத் தலைவி கனவு நலிவுரைத்தல் (தொல். களவு.21, ந.); தலைமகள் கனவு நலிவுரைத்தல் (நம்பி.164; இ.வி. 521.)
ஒப்புமைப் பகுதி 2. பொய்வலாளன்: குறுந்.25:2, ஒப்பு.
3. தலைவி கனாக்காண்டல்: குறள்.1211-20. வாய்த்தகைப் பொய்க்கனா: “வறுங்கை காட்டிய வாயல் கனவின், ஏற்றேக் கற்ற வுலமரல்” (அகநா. 39:23-4) ஏற்றெழுதல்: மலைபடு 257; கலி.12:8, 37:20; பெருங்.2.11:66. பொய்க்கனாக் கண்டு எழுதல்: குறுந். 147:3-4.
1-3. அல்கற்கனா: “அல்கற், கனவுகொ னீகண்டது” (கலி.90:21).
5. வண்டுபடு மலரைப் போல மெலிதல்: “காமருதேன், கரும்புண் டெழுநன் மலரிற் றொலைநலம்” (அம்பிகாபதிகோவை, 16); “வண்டுபோ கட்ட மலர்போன் மருண்மாலை, உண்டுபோ கட்ட வுயிர்க்கு” (நள. சுயம்வர. 119).
மு. | “களியானைத் தென்னன் கனவின்வந் தென்னை |
| அளியா னளிப்பானே போன்றான் - தெளியாதே |
| செங்காந்தண் மெல்விரலாற் சேக்கை தடவந்தேன் |
| என்காண்பே னென்னலால் யான்” (முத்.63) |
(30)