(தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்தில், “நீ ஆற்றும்வன்மை யுடையாயோ?” என வினாவிய தோழிக்கு, “தலைவன்வாராவிடினும், அவன் வருவானென்னும் நினைவினால் நான்துயின்றிலேன்” என்று தலைவி கூறியது.)
 301.    
முழவுமுத லரைய தடவுநிலைப் பெண்ணைக் 
    
கொழுமட லிழைத்த சிறுகோற் குடம்பைக் 
    
கருங்கா லன்றிற் காமர் கடுஞ்சூல் 
    
வயவுப்பெடை யகவும் பானாட் கங்குல் 
5
மன்றம் போழு மினமணி நெடுந்தேர் 
    
வாரா தாயினும் வருவது போலச் 
    
செவிமுத லிசைக்கு மரவமொடு 
    
துயிறுறந் தனவா றோழியென் கண்ணே. 

என்பது வரைவிடை வைப்ப, “ஆற்ற கிற்றியோ?” என்ற தோழிக்குக்கிழத்தி சொல்லியது.

குன்றியன்.

     (பி-ம்.) 2. ‘சிறுபொற்’; 5. ‘போழு மணியுடை’; 8. ‘துயின்மறந் தனவால்’.

     (ப-ரை.) தோழி--, முழவுமுதல் அரைய - முழவினைப்போன்ற அடி மரத்தையுடைய, தடவு நிலை பெண்ணை -வளைந்த நிலையையுடைய பனையினது, கொழு மடல்இழைத்த - கொழுவிய ஓலையின் கண்ணே இயற்றிய, சிறுகோல் குடம்பை - சிறிய சுள்ளிகளாலாகிய கூட்டிலுள்ள,கருகால் அன்றில் - கரிய காலையுடைய அன்றிலினது,காமர் கடுசூல் வயவு பெடை - விருப்பத்தையுடைய முதல்சூலினால் உண்டான நோயையுடைய பெண் பறவை,அகவும் - ஆண்பறவையை அழைக்கின்ற, பானாள் கங்குல் -பாதியிரவில், மன்றம் போழும் - தனது சக்கரத்தால்மன்றத்தைப் பிளந்து கொண்டு வரும், இனம் மணி நெடுதேர் - தொகுதியாகிய மணியையுடைய தலைவனது நெடியதேர், வாராதாயினும்--, வருவது போல--, செவி முதல்இசைக்கும் அரவமொடு - காதினிடத்து ஒலிக்கும் ஒலியினால்,என் கண் - என்னுடைய கண்கள், துயில் துறந்தன -தூக்கத்தை நீத்தன.

     (முடிபு) தோழி, கங்குலில் தேர் வாராதாயினும் வருவது போலஇசைக்கும் அரவமொடு என் கண் துயில் துறந்தன.

     (கருத்து) தலைவன் வரவை எதிர்பார்த்துத் துயின்றிலேன்.

     (வி-ரை.) இஃது ஆற்றேனென்றும், அதன் காரணம் இன்னதென்றும்கூறியவாறு.

     கங்குலில் தலைவனது தேர் வருவதை முன்னம் அறிந்தவளாதலின்அப்பழக்கத்தாலும் நினைவாலும் தேர்மணியின் ஒலி கேட்பதாகத்தோற்றியது.

     மேற்கோளாட்சி 6-8. எதிர்பெய்து பரிதலென்னும் மெய்ப்பாடு வந்தது; ‘வாராதென்றுணர்ந்தது இக்காலத்தாகலான் அதற்கு முன் இன்னவாறு பட்டதன்று என்றமையின் எதிர்பெய்து பரிதலாயிற்று’ (தொல். மெய்ப்.22, பேர்; இ.வி. 580.)

     மு. இரவுக்குறி பிழைத்த விடத்துத் தலைவி கூறியது (தொல். களவு.16, ந.)

     ஒப்புமைப் பகுதி 1. பனைமரத்தின் அடிக்கு முழவு: “முழாவரைப் போந்தை” (புறநா. 85:7, 37:4.)

     4. பானாள்: குறுந். 94:3, ஒப்பு.

     3-4. கங்குலில் அன்றில் அகவுதல்: (குறுந். 160:1-4, ஒப்பு.); “ஏங்குவயி ரிசைய கொடுவா யன்றில், ஓங்கிரும் பெண்ணை யகமட லகவ” (குறிஞ்சிப். 219-20); “கடவுண் மரத்த முண்மிடை குடம்பைச், சேவலொடு புணராச் சிறுகரும் பேடை, இன்னா துயங்குங் கங்குலும்”(அகநா. 270:12-4.)

     கடுஞ்சூல் வயவுப் பெடை: “கடுஞ்சூல் வயவொடு கானலெய்தாது, கழனி யொழிந்த கொடுவாய்ப் பேடைக்கு” (நற். 263: 5-6.)

     அன்றிற் பெடை சேவலை யழைத்தல்: “அன்றிற் பேடை யரிக்குரலழைஇச், சென்றுவீழ் பொழுது சேவற் கிசைப்ப” (மணி. 5:127:8.)

    5. மன்றம் போழ்தல்: குறுந். 346:3.

     தேர்மணி: குறுந். 275:8; அகநா. 4:12.

     4-6. தலைவன் தேர் பானாளில் வருதல்: குறுந். 311:3-7.

     8. தலைவி துஞ்சாமை: குறுந். 6:4, ஒப்பு.

(301)