(இற்செறிக்கப்பட்டுக் காப்புமிகுதியால் வருந்திய தலைவி, “என்காமநோய் நீங்குதற்கு உரியன செய்யுந் துணையைப் பெற்றிலேன்”என்று தானே கூறுமுகத்தால் அறத்தொடு நிற்றல் வேண்டுமென்பதைத்தோழிக்குப் புலப்படுத்தியது.)
  305.    
கண்டர வந்த காம வொள்ளெரி  
    
என்புற நலியினு மவரொடு பேணிச் 
    
சென்றுநா முயங்கற் கருங்காட் சியமே 
    
வந்தஞர் களைதலை யவராற் றலரே 
5
உய்த்தனர் விடாஅர் பிரித்திடை களையார் 
    
குப்பைக் கோழித் தனிப்போர் போல 
    
விளிவாங்கு விளியி னல்லது 
    
களைவோ ரிலையா னுற்ற நோயே. 

என்பது காப்பு மிகுதிக்கண், தோழி அறெத்தாடு நிற்பாளாக, தனதுஆற்றாமை தோன்றத் தலைமகள் தன்னுள்ளே கூறியது.

     (நிற்பாளாக - நிற்கும் பொருட்டு.)

குப்பைக் கோழியார்.

     (பி-ம்.) 1. ‘வெள்ளெரி’; 8. ‘இல்லையா’.

     (ப-ரை.) கண் தர வந்த காமம் ஒள் எரி - தலைவரைக்கண்ட கண்கள் தந்ததனால் உண்டாகிய காமமாகிய ஒள்ளியதீ, என்பு உற நலியினும் - என்பைப் பொருந்தும்படி வருத்தினும், அவரொடு பேணி சென்று - அவர்பால் விரும்பிப்போய், முயங்கற்கு - அளவளாவுதற்கு, நாம்--, அருகாட்சியம் - முன்பு நம்மை அவர் கண்ட இடத்திற் காணுதல்அரியேமாயினேம்; அவர்--, வந்து அஞர் களைதலைஆற்றலர் - நாமிருக்கும் இடத்திற்கு வந்து துன்பத்தைநீக்குதல் செய்தாரல்லர;, இந்த நிலையில், யான் உற்றநோய் - யான் அடைந்த இக்காமநோய், உய்த்தனர் விடாஅர் - பிறர் செலுத்தி விடார், பிரித்து இடை களையார் -இடையிலே சென்று பிரியச் செய்து நீக்காராக, குப்பைகோழி தனி போர் போல - குப்பைக் கோழிகளின் தனிமையையுடைய சண்டையைப் போல, விளிவாங்கு விளியின்அல்லது - தானே அழியும் வழி அழிந்தாலன்றி, களைவோர்இல்லை - இதனை நீக்குவார் இல்லை.

     (முடிபு) காம ஒள்ளெரி நலியினும் சென்று முயங்கற்கு அருங்காட்சியம்; அவர் வந்து களைதலை ஆற்றலர்; யான் உற்ற நோய்போர்போல விளிவாங்கு விளியினல்லது, களைவோர் இல்லை.

     (கருத்து) என் துன்பத்தை நீக்கும் துணையாவாரைப் பெற்றிலேன்.

     (வி-ரை.) தலைவனைக் கண்டபோதே பால் வயப்பட்ட நெஞ்சம் அவன்பாற் காமத்தையுடையதாயிற்றாதலின், கண்தர வந்த காமவொள்ளெரி யென்றாள். என்புற நலிதல் புறத்தே தோற்றாமல் அகத்தே வருத்தும் துன்பமிகுதியைக் குறித்தது. பகற்குறிக் கண்ணே தலைவன் எளிதிற் காணும் நிலை நீங்கிக் காப்பிற்பட்டவளாதலின் அருங்காட்சிய மென்றாள்; அருங் காட்சியமென்றது, “அருங்கேடன்” (குறள், 210) என்றாற் போல நின்றது: காட்சி யரியமென்னும் பொருட்டு.

     போரின்பொருட்டு வளர்க்கப்பட்டு அப்போரில் ஊக்கமுடையாரால்உய்க்கப்படும் சேரிக்கோழியின் போர் பெருந்திரளான மக்கட்கிடையேநிகழும்; குப்பைக் கோழிப் போர் உய்ப்பாரும் களைவாரும் காண்பாரும்இலதாயிற்று.

     யான் உற்ற நோயைக் களைவாரில்லை யென்றது அங்ஙனம்களைவாரொருவரை வேண்டி நிற்றலைப் புலப்படுத்தியது; இதனால்அறத்தொடு நிற்றல் வேண்டுமென்பதைத் தோழிக்குத் தலைவிகுறிப்பித்தாள்.

     ஒப்புமைப் பகுதி 1. கண் தரவந்த காமம்: “கண்டாங் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய், தாங்காட்ட யாங்கண்டது”, “தெரிந்துணராநோக்கிய வுண்கண் பரிந்துணராப், பைத லுழப்ப தெவன்”, “கதுமெனத்தாநோக்கித் தாமே கலுழு, மிதுநகத் தக்க துடைத்து”, “பெயலாற்றாநீருலந்த வுண்க ணுயலாற்றா, உய்வினோ யென்க ணிறுத்து”, “படலாற்றாபைத லுழக்குங் கடலாற்றாக், காமநோய் செய்தவென் கண்’’, “ஓவினிதேயெமக்கிந்நோய் செய்தகண், தாஅ மிதற்பட்டது”, “உழந்துழந் துண்ணீரறுக விழைந்திழைந்து, வேண்டி யவர்க்கண்ட கண்” (குறள், 1171-7);“கருநெடுங் கண்டருங் காம நோயே” (நன். 403, சங்கர. மேற்.)

     காம எரி: “நீருட், குளிப்பினுங் காமஞ் சுடுமேகுன் றேறி, ஒளிப்பினுங் காமஞ் சுடும்” (நாலடி. 90); “காமநோய் போல, விடிற்சுடலாற்றுமோ தீ” (குறள், 1159); ‘‘காமக் கனலெரி” (பெருங். 1.33:203): “மொழிந்த காமக் கொடுங்கனன் மூண்டதால்’’ (கம்ப. சூர்ப்பநகைப். 72.)

     6. குப்பைக் கோழி: “குப்பை கிளைப்போவாக் கோழி” (நாலடி. 341): “குப்பை கிளைப்பறாக் கோழி போல்வர்”(பெருங். 3. 14:112)

(305)