(வரைவிடை வேறுபட்ட தலைவியை நோக்கி, “நின் பொருட்டன்றேதலைவன் பிரிந்தான்” என்று தோழி கூறியது.)
 308.    
சோலை வாழைச் சுரிநுகும் பினைய 
    
அணங்குடை யருந்தலை நீவலின் மதனழிந்து 
    
மயங்குதுய ருற்ற மையல் வேழம் 
    
உயங்குயிர் மடப்பிடி யுலைபுறந் தைவர 
5
ஆமிழி சிலம்பி னரிதுகண் படுக்கும் 
    
மாமலை நாடன் கேண்மை 
    
காமந் தருவதோர் கைதாழ்ந் தன்றே. 

என்பது வரைவிடைக் கிழத்தியை வன்சொற் சொல்லி வற்புறுத்தியது.

பெருந்தோட் குறுஞ்சாத்தன்.

    (பி-ம்) 1. ‘சுரித்துகும்பிணிய’; 2. ‘யிருந்தலை’.

    (ப-ரை.) சோலை வாழை சுரிநுகும்பு - சோலையின்கண் உள்ள வாழையினது சுருண்ட குருத்து, இனைய -தான் வருந்தும்படி, அணங்கு உடை அரு தலை நீவலின் -தெய்வத்தையுடைய பிறர் இருத்தற்கரிய மத்தகத்தைத்தடவுதலினால், மதன் அழிந்து - வலி கெட்டு, மயங்குதுயர் உற்ற மையல் வேழம் - கலங்கிய துயரத்தை அடைந்தமயக்கத்தையுடைய களிறு, உயங்கு மயிர் மடம் பிடி -வருந்திய மூச்சையுடைய மடப்பத்தையுடைய பிடி, உலைபுறம் தை வர - வருந்தும் தன் முதுகைத் தடவ, ஆம்இழி சிலம்பின் - நீர் இறங்கியோடும் மலைப்பக்கத்தில்,அரிது கண்படுக்கும் - அரிதிற்றுயில்கின்ற, மாமலை நாடன்கேண்மை - பெரிய மலைநாட்டையுடைய தலைவனது நட்பு, காமம் தருவது ஓர் கை தாழ்ந்தன்று - மெய்யுறுபுணர்ச்சியைத் தருகின்றதொரு செயலிலே தங்கியது.

     (முடிபு) நாடன் கேண்மை காமந்தருவதோர் கை தாழ்ந்தன்று.

     (கருத்து) தலைவன் நினக்கு நன்மை உண்டாதற் பொருட்டன்றேபிரிந்தான்.

     (வி-ரை.) வாழைத் தோட்டத்தைச் சோலையென்றலும் மரபு;நுகும்பென்றது குருத்தை; ‘நுகும்பென்பது பனை, வாழை, மரம், புல்என்பவற்றிற்குரித்து’ (நன். 387, மயிலை.) வாழையினால் யானையின்வலிகெடுமென்பது, ‘ஆனைக்கு வாழைத்தண்டு, ஆளுக்குக் கீரைத்தண்டுஎன்னும் பழமொழியாலும் பெறப்படும்.

     வாழையால் மதனழிந்த வேழம் மயங்கிப் பின் கண்படுக்குமென்றது,நாம் வரைவு கடாவினமையின் மயங்கிய தலைவன் வரைந்து கொண்டுஇடையீடில்லாத இன்பத்தைப் பெறுவானென்ற குறிப்பினது.

     காமம்: இங்கே மெய்யுறுபுணர்ச்சி. “அவன் வரையா தொழுகுங்காலும் ஆற்றினாயல்லை; நின்னை வரைந்து கொள்ளும் முயற்சியினனாகவும் ஆற்றாயாயினை” என்று தோழி வன்சொற் கூறினாள்.

    ஒப்புமைப் பகுதி 1. சோலைவாழை: மலைபடு. 131; நற். 232:3.

    1-2. வாழையிலை யானையை நீவுதல்: “சிலம்பிற் போகிய செம்முகவாழை, அலங்க லந்தோ டசைவளி யுறுதொறும், பள்ளி யானைப்பரூஉப்புறத் தைவரும், நல்வரை நாடன்” (அகநா. 302:1-4.)

    1-4. வாழையினால் யானை வலியழிதலும் பிடி அதனைஆற்றுதலும்: “வாழை யோங்கிய தாழ்கண் ணசும்பிற், படுகடுங் களிற்றின்வருத்தஞ் சொலியப், பிடிபடி முறுக்கிய பெருமரப் பூசல்” (அகநா. 8:9-11.)

    6. தலைவன் கேண்மை: குறுந். 61:5, ஒப்பு.

(308)