(அயலார் தலைவியை மணம் செய்யும் பொருட்டு முயன்ற காலத்தில் அதுகாறும் தலைவனைப் பற்றிய செய்தியை வெளியிடாத தலைவி, “நான் ஆடுகளத்தில் துணங்கையாடும் இயல்புடையேன்; என்னோடு நட்பு செய்து பிரிந்தமையால் என் கைவளைகளை நெகிழச் செய்த தலைவன் அத்துணங்கைக்குத் தலைக்கை தந்தான். அவன் இப்பொழுது எங்கே உள்ளானோ? பல இடங்களில் தேடியும் கண்டேனில்லை” என்று உண்மையைத் தோழிக்கு வெளிப்படுத்தியது).
 31.    
மள்ளர் குழீஇய விழவி னானும்  
    
மகளிர் தழீஇய துணங்கை யானும்  
    
யாண்டுங் காணேன் மாண்டக் கோனை  
    
யானுமோ ராடுகள மகளே யென்கைக் 
5
கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த 
    
பீடுகெழு குரிசிலுமோ ராடுகள மகனே. 

என்பது நொதுமலர் வரைவுழித் தோழிக்குத் தலைமகள் அறத்தொடு நின்றது.

    (நொதுமலர் - தலைவன் அல்லாத அயலார். வரைவுழி -மணத்திற்கு உரிய பரிசத்தோடு வந்தபொழுது).

ஆதிமந்தியார் (கு-பு.) ஆதிமருதியார் என்று படித்தற்கும் இடமுண்டு.

    (பி-ம்.) 3. ‘ஆண்டுங்’ 5. ‘ஞெகிழ்த்த’ 6. ‘குரிசிலு மாடுகள’

    (ப-ரை.) மாண் தக்கோனை - மாட்சிமை பொருந்திய தகுதியை உடையோனை, மள்ளர்குழீஇய விழவினானும் - வீரர் கூடியுள்ள சேரி விழாவின் கண்ணும், மகளிர் தழீஇயதுணங்கையானும் - மகளிர் தம்முள் தழுவி ஆடுகின்ற துணங்கைக் கூத்தின் கண்ணும், யாண்டும் - ஆகிய எவ்விடத்தும், காணேன் - கண்டேனில்லை; யானும் ஓர் ஆடு களம் மகளே - யானும் ஆடுகின்ற களத்திற்குரிய ஒரு மகளே; என் கை - என் கையில் உள்ள, கோடு ஈர் இலங்குவளை நெகிழ்த்த - சங்கை அறுத்துச் செய்து விளங்குகின்ற வளையல்களை நெகிழச் செய்த, பீடு கெழு - பெருமை பொருந்திய, குரிசிலும் - தலைவனும், ஓர் ஆடுகளம் மகனே - ஆடுகின்ற களத்தில் உள்ள ஒருவனே.

    (முடிபு) மாண் தக்கோனைக் காணேன்; யானும் ஓர் ஆடுகள மகள்; குரிசிலும் ஓர் ஆடுகள மகன்.

    (கருத்து) என்னோடு துணங்கை ஆடிய தலைவன் ஒருவன் உளன்.

    (வி-ரை.) மள்ளர் - வீரர் (குறுந். 34:5). திருவிழாக் காலங்களில் வீரர்கள் தத்தம் சேரிகளில் விளையாட்டுப் போர் நிகழ்த்துவர்; “மாயோன் மேய வோண நன்னாள் ... மறங்கொள் சேரி மாறுபொரு செருவில், மாறா துற்ற வடுப்படு நெற்றிச், சுரும்பார் கண்ணிப் பெரும்புகன் மறவர்” (மதுரைக். 591-6) என்பதையும், ‘அத்திருநாளில் பொரும் சேரிப்போர் கூறினார், (ந.) என்னும் அதன் உரையையும், “கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனிற், கார்தரு சோலைக் கபாலீச் சரமமர்ந்தான், ஆர்திரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்” (தே. திருஞா.) என்பதையும் பார்க்க. துணங்கை - ஒருவகைக் கூத்து; இதனைச் சிங்கிக் கூத்தென்பர் (முருகு. 56, வேறுரை); “பழுப்புடை யிருகை முடக்கி யடிக்கத், துடக்கிய நடையது துணங்கை யாகும்” (முருகு. 56, ந.மேற்.) என்பது இதன் இலக்கணம்.

    மகளிர் விழாக் காலத்தே துணங்கை ஆடுதலும் ஆடவர் அவர்கட்கு முதற்கை கொடுத்தலும் பண்டை வழக்கங்கள், “முழவிமிழ் துணங்கை தூங்கும் விழவின்” (அகநா.336:16) என்பது விழாவில் துணங்கைக் கூத்து நடத்துதலையும், “நிரைதொடி நல்லவர் துணங்கையுட்டலைக் கொள்ளக், கரையிடைக் கிழிந்தநின் காழகம்வந் துரையாக்கால்” (கலி. 73: 16-7), “மெல்லிணர்க் கண்ணி மிலைந்த மைந்தர், எல்வளை மகளிர் தலைக்கை தரூஉந்து” (புறநா. 24:8-9) என்பவை ஆடவர் முதற்கை தருதலையும் விளக்கும். விழவினானும், துணங்கையானும் என்ற இடங்களில் மூன்றன் உருபுகள் ஏழன் பொருண்மைக்கண் வந்தன (குறள், 1196, 1213, பரிமேல்). விழவின் கண்ணும் துணங்கையின் கண்ணும் காணேன் என்றது தலைவன் வீரன் என்பதையும் ஆடுகள மகன் என்பதையும் புலப்படுத்தியது. யாண்டும் - வேறு எவ்விடத்துமென்றலுமாம். மாண்டக்கோன் என்றது தனக்கு ஏற்றவன் என்றவாறு. யானும் ஓர் ஆடுகள மகளே என்றது தான் துணங்கை ஆடியதையும் குரிசிலும் ஓர் ஆடுகள மகனே என்றது அவன் அத்துணங்கைக்குத் தலைக்கை கொடுத்தான் என்பதையும் புலப்படுத்தி அறத்தொடு நின்றதாயிற்று. வளை நெகிழ்த்த என்றது தன்பால் உண்டான வேறுபாட்டிற்குக் காரணம் தலைவனது பிரிவென்னும் நினைவிற்று. பீடுகெழுகுரிசில் என்பது தலைவனது உயர்வை வெளிப்படுத்தியவாறு.

    இத்தகைய தலைவன் ஒருவன் என்னோடு நட்பு செய்திருப்ப நொதுமலர் வரைதல் அறனன்று. ஆதலின் நீ அதனை மாற்ற முயல்வாயாக என்பது குறிப்பு.

    (மேற்கோளாட்சி) 1-3. ‘நாயகியானவள் நாயகனான ஸர்வேச்வரனைப் புறம்பே திரளிடையாகிலுங் காண ஆசைப்பட்டுப் புலம்பின பாசுரம் ... இந்தக் கிளவி, மள்ளர் ... கோனையென்று அகத் தமிழிலும் சொல்லப்பட்டது’ (திவ். திருவிருத்தம், 84, அழகிய மணவாள ஜீயர் ஸ்வாபதேசம்).

    3-4. இருவகைக் கட்டளையடியும் தொடுத்த அடிமோனை வந்தது (தொல்.செய்.92, ந.).

    மு. இது காதலற்கெடுத்த ஆதிமந்திபாட்டு; இவை தத்தம் பெயர் கூறிற் புறமாமென்று அஞ்சி வாளாது கூறினார். ஆதிமந்தி தம் பெயரானும் தம் காதலனாகிய ஆட்டனத்தி பெயரானும் கூறிற் காஞ்சிப்பாற்படும்; ஆதிமந்தி போல, ஏதஞ் சொல்லிப் பேதுபிறி துறலே யெனவும், வெள்ளி வீதியைப்போல நன்றும் செலவயர்ந் திசினால் யானே யெனவும் அகத்திணைக்கண் சார்த்து வகையான் வந்தனவன்றித் தலைமை வகையான் வந்தில வென்பது’ (தொல். அகத். 54, ந.); ‘நொதுமலர் வரைவின்கண் தலைவி தன் குடிப்பிறப்பும் கற்பும் முதலிய உயர்ச்சிக்கேற்ப அதனை மறுத்துத் தலைவன் வரையுமாறு நீ கூறெனத் தோழிக்குக் கூறும்’ (தொல். களவு.16, ந.); காமக் கிழவ னுள் வழிப்படினு மென்பதற்கு மேற்கோள்; ஆண்டுங் காணேனென அவனுள் வழிப்பட்டுக் கூறினமையின் கற்பின்பாலதாய்த் தோழியும் தலைவனும் பெண்டன்மையிற் றிரியக் கருதாது நன்கு மதித்தவாறு காண்க’ (தொல். களவு.22, ந.); ‘மள்ளர் குழீஇய விழவினானும் ... என்பனவற்றுள் தலைவி தேடிச் சென்றதும் செல்வாமென்றதும் சிறைப் புறமாக வரைவுகடாய பொருட்பயன் தருதலின், அறக் கழிவுடையவேனும் அமைந்தன’ (தொல். பொருளியல், 24, ந.).

    ஒப்புமைப் பகுதி 2. மகளிர் துணங்கை: “வணங்கிறைப் பணைத்தோ ளெல்வளை மகளிர், துணங்கை நாளும் வந்தன” (குறுந். 364:5-6); “இலங்குவளை மடமங்கையர், துணங்கையஞ்சீர்த் தழூஉ” (மதுரைக். 159-60); “கலிகெழு துணங்கை யாடிய மருங்கின்”, “முழாவிமிழ் துணங்கைக்குத் தழூஉப்புணை யாகச் சிலைப்புவல் லேற்றிற் றலைக்கை தந்துநீ, நளிந்தனை வருதல்” (பதிற்.13:5, 52:14-6); “தணந்ததன் றலையுநீ தளரிய லவரொடு, துணங்கையா யெனவந்த கவ்வை”, “நினக்கொத்த நல்லாரை நெடுநகர்த் தந்துநின், தமர்பாடுந் துணங்கையு ளரவம்வந் தெடுப்புமே” (கலி.66:17-8, 70:13-4). வீரர்கள் ஆடும் துணங்கையும், பேய்களாடும் துணங்கையும் உண்டு.

    1-2. விழாவும் துணங்கையும்: “முழவிமிழு மகலாங்கண், விழவு நின்ற வியன்மறுகிற், றுணங்கையந் தழூஉவின் மணங்கமழ் சேரி”, “தழூஉப் பிணையூஉ, மன்றுதொறு நின்ற குரவை சேரிதொறும், உரையும் பாட்டு மாட்டும் விரைஇ, வேறுவேறு கம்பலை வெறிகொள்பு மயங்கிப், பேரிசை நன்னன் பெறும்பெயர் நன்னாள், சேரி விழவி னார்ப்பெழுந் தாங்கு” (மதுரைக். 327-9, 614-9); “விழவயர் துணங்கை” (நற்.50:3); “துணங்கையர் குரவையர்” (சிலப்.5:70). 4. ஆடுகள மகள்: அகநா.370: 15.5 கோடீரிலங்குவளை, சங்கை அறுத்து வளை செய்தல், வளை நெகிழ்தல்: குறுந். 11:1, ஒப்பு.

  மு. 
“வில்லார் விழவினும் வேலாழி சூழுலகில்  
  
  நல்லார் விழவகத்து நாங்காணேம் - நல்லாய் 
  
  உவர்க்கத் தொரோவுதவிச் சேர்ப்பனொப் பாரைச்  
  
  சுவர்க்கத் துளராயிற் சூழ்”                       (திணைமா. 62) 
  
“தையனல் லார்கள் குழாங்கள் குழிய குழுவினுள்ளும் 
  
 ஐயநல் லார்கள் குழிய விழவினு மங்கங்கெல்லாம்  
  
 கையபொன் னாழிவெண் சங்கொடுங் காண்பா னவாவுவனான் 
  
 மையவண் ணாமணி யேமுத்த மேயென்றன் மாணிக்கமே”                    (திவ். திருவிருத்தம், 84)  
(31)