(தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்தில் தன்னை வற்புறுத்திய தோழியின்பாற் சினமுற்று, “என் நிலையைத் தலைவருக்குஉரைப்பாருளராயின் என் உயிர் உளதாகும்” என்று கூறியது.)
 
 310.    
புள்ளும் புலம்பின பூவுங் கூம்பின  
    
கானலும் புலம்புநனி யுடைத்தே வானமும்  
    
நம்மே போலு மம்மர்த் தாகி  
    
எல்லை கழியப் புல்லென் றன்றே  
5
இன்னு முளெனே தோழி யிந்நிலை  
    
தண்ணிய கமழு ஞாழற்  
    
றண்ணந் துறைவர்க் குரைக்குநர்ப் பெறினே. 

என்பது வரைவிடை முனிந்து கிழத்தி தோழிக்கு உரைத்தது.

பெருங்கண்ணன்.

     (பி-ம்.) 2. ‘புலம்புபெரி துடைத்தே’; 5. ‘முளனே’; ‘தோழி முன்னிலை’; 7. ‘துறையவர்க்கு’.

     (ப-ரை.) தோழி--, புள்ளும் புலம்பின - பறவைகளும்ஒலித்தன; பூவும் கூம்பின - மலர்களும் குவிந்தன; கானலும்புலம்பு நனி உடைத்து - கடற்கரைச் சோலையும் தனிமையைமிகவுடையதாயிற்று; வானமும்--, நம்மே போலும் மம்மர்த்துஆகி - நம்மையே போன்ற மயக்கத்தையுடையதாகி, எல்லைகழிய - பகல் கழிய, அதனால், புலலென்றன்று - பொலிவழிந்தது; இ நிலை - இந்த என் நிலைமையை, தண்ணியகமழும் ஞாழல் - தண்ணியனவாய் மணம் வீசுகின்றமலரையுடைய ஞாழல்கள் வளர்ந்த, தண்ணந் துறைவர்க்குஉரைக்குநர் பெறின் - தண்ணிய அழகிய துறையை உடையதலைவருக்கு உரைப்பாரைப் பெற்றால், இன்னும் உளென் -இனி மேலும் உயிரோடு இருப்பேனாவேன்.

     (முடிபு) தோழி, புலம்பின; கூம்பின; உடைத்து; புல்லென்றன்று;துறைவர்க்கு உரைக்குநர்ப் பெறின் இன்னும் உளென்.

     (கருத்து) யாரேனும் என் துயர்நிலையைத் தலைவனுக்குஉரைப்பாராயின் நன்றாம்.

     (வி-ரை.) பூ வென்றது ஆம்பல் முதலிய நீர்ப்பூக்களை. நம்மேபோலும் மம்மர்த்தாகி யென்பதனால் தான் மயக்கமுடையளாதலைத்தெரிவித்தாள். எல்லை - சூரியனெனலுமாம். ஞாழல் - புலிநகக் கொன்றை. ‘என்னைக் கடிந்து சொல்வாரையன்றி என் துயர்நிலைக்கு இரங்கித் தலைவர்பாற் சென்று இந்நிலையைத் தெரிவிப்பார் ஒருவரும் இலர்’ என்னும் நினைவினால், ‘உரைக்குநர்ப்பெறினே’ என்றாள்.

     மேற்கோளாட்சி மு. தலைமகள் தன் துயர் தலைவற் குரைத்தல் வேண்டியது. (நம்பி. 164.) (கு-பு. இக்கருத்து சிறப்புடையதாகத் தோற்றுகின்றது.)

    1. ஒப்புமைப் பகுதி மாலையில் மலர் கூம்புதல்: குறுந். 122:2-3.

    2. கானல் புலம்புடைத்தாதல்: “இனிப்புலம் பின்றே கானலும்”(அகநா. 240:4.)

    4. எல்லை: பகல், சூரியன்; குறுந். 355:3, 387:1; குறிஞ்சிப். 215.

     புல்லென்றல்; குறுந். 19:2, ஒப்பு. 2-4. “அமரக மருங்கிற் கணவனை யிழந்து, தமரகம் புகூஉ மொருமகள் போலக், கதிராற்றுப் படுத்த முதிராத் துன்பமோ, டந்தி யென்னும் பசலைமெய் யாட்டி, வந்திறுத்தனளான் மாநகர் மருங்கென்” (மணி. 5:137-41.)

     6. தண்ணிய கமழும்: குறுந். 273:3. 5-7. (குறுந். 98:1-3); “வரைப் பான் மதுரைத் தமிழ்தெரி வாணன்றென் மாறைவையை, நுரைப்பான் முகந்தன்ன நுண்டுகி லாயிந்த நோயவர்க்கின், றுரைப்பாருளரே லுயிரெய்த லாநமக் கூர்திரைசூழ், தரைப்பால் வளரும் புகழெய்த லாமவர் தங்களுக்கே” (தஞ்சை. 217.)

(310)