(இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறமாக இருப்பத்தோழி,இயற்பழித்த விடத்துத் தலைவி "அவரது நட்பு என்றும் அழியாதது"என்று கூறியது.)
 313.    
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை  
    
நீத்துநீ ரிருங்கழி யிரைதேர்ந் துண்டு  
    
பூக்கமழ் பொதும்பிற் சேக்குந் துறைவனொ  
    
டியாத்தேம் யாத்தன்று நட்பே  
5
அவிழ்த்தற் கரிதது முடிந்தமைந் தன்றே.  

என்பது இரவுக்குறி வந்து ஒழுகுங் காலத்துத் தலைமகனது வரவுணர்ந்து,பண்பிலர் என்று இயற்பழித்த தோழிக்கு, அவரோடு பிறந்த நட்புஅழியாத நட்பன்றோ வென்று, சிறைப்புறமாகத் தலைமகள் இயற்படமொழிந்தது.

(ஆசிரியர் பெயர் காணப்படவில்லை)

     (பி-ம்.) 1. ‘கடற் றிரையது’.

     (ப-ரை.) தோழி, பெரு கடல் கரையது - பெரிய கடற்கரையின் கண்ணதாகிய, சிறுவெள் காக்கை - சிறியவெண்மையையுடைய காக்கையானது, நீத்து நீர் இரு கழிஇரை தேர்ந்து உண்டு - வெள்ளமாகிய நீரையுடைய கரியகழியிடத்து மீனாகிய இரையைத் தேடி உண்டு, பூ கமழ்பொதும்பில் சேக்கும் துறைவனொடு - மலர் மணம் வீசும்சோலையினிடத்துத் தங்கும் துறையையுடைய தலைவனோடு, யாத்தேம் - நம்மைக் கட்டினேம்; நட்புயாத்தன்று - அங்ஙனம் கட்டப்பட்ட நட்பு நன்றாகப் பொருந்தியது;அது அவிழ்த்தற்கு அரிது - அது பிறராற் பிரித்தற்கு அரியதாகி, முடிந்து அமைந்தன்று - முடிக்கப்பட்டு அமைந்தது.

     (முடிபு) துறைவனோடு யாத்தேம்; நட்புயாத்தன்று; அது அவிழ்த்தற்கரிதாகி, முடிந்தமைந்தன்று.

     (கருத்து) தலைமகனது நட்பு அழியாதது.

     (வி-ரை.) தலைவன் வரையாது வந்தொழுகுவது குறித்துத் தோழி,"அவர் நம் நிலையை யறியும் பண்பிலர்" என்று அவனது இயல்பைஇழித்துக் கூறினாள்; அது கேட்ட தலைவி, "அவர் நமது நிலையைஉணர்ந்தவரே; அவரது நட்பு என்றும் கெடாத உறுதியினது" என்று கூறிஅவன் விரைவில் வரைந்து கொள்வானென்பதைப் புலப்பட வைத்தாள்.இது கேட்ட தலைவன் வரைந்து கோடல் பயன்.

     கடற்கரையின்கண் இரை தேர்ந்துண்ட காகம் பூக்கமழ் பொதும்பில்தங்குந் துறைவனென்றது, களவொழுக்கத்தின் கண் வந்து ஒழுகும்தலைவன் வரைந்து கொண்டு தன் மனையிலிருந்து இல்லறம்நடத்துவானென்னும் குறிப்புணர்த்தியது.

     யாத்ததாக நட்பைக் கூறினமையின் நட்பை முடியாக (முடிச்சாக)உருவகித்தாளாயிற்று; "அற்புத் தளையு மவிழ்ந்தன" (நாலடி. 12) என்றுபிறரும் கூறுதல் காண்க.

     பால்வயப்பட்டு நின்றதாதலின் நட்பு அவிழ்த்தற்கு அரிதாயிற்று.

     மேற்கோளாட்சி மு. தலைவனைத் தவறிலனென்று தலைவி கூறியது (தொல். கற்பு. 6, ந.)

     ஒப்புமைப் பகுதி 1. மு. குறுந். 246:1, ஒப்பு.

     1-3. மு. ஐங். 162:1-4.

     3-4. தலைவனது நட்பு: குறுந். 247:6-7, ஒப்பு.

     3-5. தலைவன் நட்பு, கெடாதது: குறுந். 170:4-5, 264:4-5.

(313)