(தலைவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்த விடத்து வேறுபட்டதலைவியை நோக்கி, “நீ ஆற்றல் வேண்டும்" என்று வற்புறுத்திய தோழிக்கு, "அவர் கூறிய பருவம் வந்தது; அவர் வந்திலர்" என்று தலைவி வருந்திக் கூறியது.)
  314.    
சேயுயர் விசும்பி னீருறு கமஞ்சூற்  
    
றண்குர லெழிலி யொண்சுட ரிமைப்பப்  
    
பெயறாழ் பிருளிய புலம்புகொண் மாலையும்  
    
வாரார் வாழி தோழி வரூஉம்  
5
மின்னுற ழிளமுலை ஞெமுங்க  
    
இன்னா வைப்பிற் சுரனிறந் தோரே.  

என்பது பிரிவிடை வேறுபட்ட கிழத்தி வற்புறுத்துந் தோழிக்குப்பருவங்காட்டி அழிந்து கூறியது.

பேரிசாத்தன் (பி-ம். பெருஞ்சாத்தன், பேறிச்சாத்தன், பேரிச்சாத்தன்.)

     (பி-ம்.) 2. ‘ரிழைப்பப்’ 3. ‘பெயருமிருளிய’ 5. ‘மின்னுமிளமுலை’‘மின்னுறலிளமுலை’ 6. ‘சுரமிறந்தோரே’.

     (ப-ரை.) தோழி--, இன்னா வைப்பின் - துன்பத்தைச்செய்யும் இடங்களையுடைய, சுரன் இறந்தோர் - பாலைநிலத்தைக் கடந்து சென்றவர், சேய் உயர் விசும்பின் - நெடுந்தூரம் உயர்ந்த வானத்தின்கண், நீர் உறு கம சூல் - நீர்மிக்க நிறைந்த கருப்பத்தையுடைய, தண் குரல் எழிலி - தண்ணிய முழக்கத்தையுடைய மேகம், ஒள் சுடர் இமைப்ப - ஒள்ளிய மின்னலின் ஒளிவிட்டு விளங்க, பெயல் தாழ்புஇருளிய - மழைபெய்து இருண்ட, புலம்பு கொள் மாலையும் - தனிமையைக் கொண்ட மாலைக்காலத்திலும், வரூஉம் - வளருகின்ற, மின் உறழ் இளமுலை ஞெமுங்க - மின்னுதல் மிக்க இளைய முலைகள் அழுந்தும்படி தழுவுதற்கு, வாரார் - வாராராயினார்.

     (முடிபு) தோழி, சுரனிறந்தோர் ஞெமுங்க மாலையும் வாரார்.

     (கருத்து) கார்ப்பருவம் வரவும் தலைவர் வந்திலர்.

     (வி-ரை.) "வானினு முயர்ந்தன்று" (குறுந். 3:1) என்று சிறப்பித்தலின்,சேயுயர் விசும்பென்றாள். தண்ணிய எழிலி, குரலெழிலியெனக் கூட்டிப்பொருள் கொள்ளுதலும் பொருந்தும். மாலை: கார்காலத்துமாலை.மாலையும்: உம்மை, சிறப்பும்மை. வாழி: அசை நிலை. வரூஉம் - எழும்;‘வருமுலை - எழுகின்ற பெரியமுலை' (சிறுபாண். 72, ந.) இன்னுறல்இளமுலையென்னும் பாடத்திற்கு, இனிய முயக்கத்தையுடைய இளையநகிலென்று பொருள் கொள்க; ‘இன்னுறல் வியன் மார்ப-இனிய முயக்கத்தையுடைய அகற்சியையுடைய மார்பனே' (கலி. 8:23, 100:21, ந.) ஞெமுங்கத் தழுவுதற்கென ஒரு சொல் வருவிக்க.

     ஒப்புமைப் பகுதி 1-2. கமஞ்சூலெழிலி: "கமஞ்சூன் மாமழை" (முருகு. 7; நற். 347: 1; அகநா. 134:2.)

     5. பி-ம். இன்னுறல்: அகநா. 399:3.

     6. சுரனிறந்தோர் : குறுந். 211:7, 215:7, 260:8.

(314)