(ஆசிரியர் பெயர் காணப்படவில்லை) (பி-ம்.) 1. ‘மலைச்சேரஞ் செஞ்சாந்தினார’, ‘மலைச்சேரஞ் செஞ்சாந்தின்’ 4. ‘மடமாவரிவை’ 8. ‘திறம்பல்’.
(ப-ரை.) அன்னை--, மடவரல் அரிவை - மடப்பம்வருதலையுடைய அரிவையே, நின் மார்பு அமர் இன்துணை - நினது மார்பைப் பொருந்தும் இனிய தலைவன்,மலை செ சாந்தின் ஆரம் மார்பினன் - மலையில் உண்டாகியசெஞ்சந்தனத்தையும் முத்து மாலையையும் அணிந்த மார்பினனாகியும், சுனை பூ குவளை சுரும்பு ஆர் கண்ணியன் - சுனையில் மலர்ந்த குவளையினது வண்டுகள் நிறைந்த கண்ணியை உடையவனாகியும், நம் மனை நடு நாள்வந்து - நம்முடைய வீட்டிற்கு நள்ளிரவில் வந்து, பெயரும் - மீண்டு செல்வான்; அக்காலத்தில், மன்றம் மரையா இரிய - மன்றத்தின்கண் உள்ள மரையாவானது நீங்க, ஏறு அட்டு - அதன் ஆணைக்கொன்று, செ கண் இரு புலி குழுமும் -செவ்விய கண்களையுடைய கரிய புலி முழங்கும்;அதனால்--, மறைத்தற்காலை அன்று - நம் ஒழுக்கத்தைமறைக்கும் காலம் இஃது அன்று; நம் கதவு - நமதுமந்தணத்தை, திறப்பல் - வெளியிடுவேன்; வேண்டு - இதனை நீ விரும்புவாயாக.
(முடிபு) அன்னை, அரிவை, நின் துணை, மார்பினன், கண்ணியன்,வந்து பெயரும்; புலி ஏறு அட்டுக் குழுமும்; அதனால் மறைத்தற்காலைஅன்று; நம் கதவு திறப்பல், நீ வேண்டு.
(கருத்து) நான் அறத்தொடு நிற்பேன்.
(வி-ரை.) மலைச்சாந்தை யணிந்து வருவதனால் தலைவன்வருகையைப் பிறர் அச்சாந்தின் மணத்தாலறிவ ரென்னும் குறிப்பும்பெறப்படும். மார்பென்றது ஆகு பெயரால் நகில்களைக் குறித்தலுமாம்.மன்றம் - பொதுவிடம். புலிகுழுமும் என்றது தலைவன் வரும்இடையாமத்தில் அப்புலியினால் அவனுக்கு ஏதம் நிகழ்தலுங் கூடுமென்றஅச்சத்தைக் கொண்ட நினைவிற்று. அதனால் இனி அறத்தொடு நின்றுஅவனது வரைவை ஏற்றுக் கொள்ளச் செய்தலே நன்றென்பதைத் தோழிஉணர்த்தினாள்.
கதவு திறப்பலென்றது, பிறரறியாவாறு மறைக்கப்பட்டிருந்த நும்நட்பைப் பிறருக்கு வெளியிடுவேனென்ற பொருளையுடையது.
வாழி : அசை நிலை. நான் அறத்தொடு நிற்ப, அதனால் நீ வாழ்வாயாக வென்பதும் ஆம்.
நம் கதவென்றாள் தானும் அம்மறையை உணர்ந்த வளாதலின்.
ஒப்புமைப் பகுதி 1. தலைவன் சந்தனம் பூசி வருதல்: குறுந். 150:3, ஒப்பு; நற். 168:10-11, 344:5-8; அகநா. 100:1-4.
2. சுனைப்பூங் குவளை: குறுந். 59:2-3, ஒப்பு; நற். 105:8.
2-3. தலைவன் குவளைப்பூ அணிந்து வருதல்: நற். 376:5-6;அகநா. 38:2, 128:9-10.
1-3. தலைவன் சந்தனம் பூசியும் கண்ணிபூண்டும் வருதல்: "நாடன்,ஆர மார்பி னரிஞிமி றார்ப்பத், தாரன் கண்ணிய னெஃகுடை வலத்தன்...... புகுதந்து" (அகநா. 102:9-13.)
4. மடவரலரிவை: குறுந். 378:5.
3-4. தலைவன் நடுநாளில் வருதல்: குறுந். 268:5, 311:4-5.
5. மன்ற மரையா: "மரைசேர் மன்றத்து" (அகநா. 373:2.)
6. புலி குழுமுதல்: ஐங். 218:3-4, 274:2.
செங்கணிரும் புலி: நற். 148:9; அகநா. 92:4.
5-6. மரையாவைப் புலி கொல்லுதல்: மலைபடு. 505-6;அகநா. 3:7-9.
8. கதவு திறப்பல்: குறுந். 333:6. வாழி வேண்டன்னை: குறிஞ்சிப். 1; ஐங். 101-10, 201-10; அகநா. 48:1, 68:1.
(321)