(தலைவன் சிறைப்புறத்தினனாகத் தோழிக்குக் கூறுவாளாய்,"தலைவன் ஒரு நாள் என்னைப் பிரிந்திருந்தானாயின் எனக்கு அதனால்உண்டாகும் துன்பம் பலநாள் என்னை வருத்துகின்றது" என்று கூறி,இனிப் பிரிவு நேராதவண்ணம் வரைதலே தக்கதென்பதைத் தலைவிபுலப்படுத்தியது.)
 326.    
துணைத்த கோதைப் பணைப்பெருந் தோளினர்  
    
கடலாடு மகளிர் கான லிழைத்த  
    
சிறுமனைப் புணர்ந்த நட்பே தோழி  
    
ஒருநாட் டுறைவன் றுறப்பிற்  
5
பன்னாள் வரூஉ மின்னா மைத்தே.  

என்பது சிறைப்புறம்.

(ஆசிரியர் பெயர் காணப்படவில்லை.)

     (பி-ம்.) 1. ‘தோகைப்பிணைப்பெருந்’.

     (ப-ரை.) தோழி--, துணைத்த கோதை பணை பெருதோளினர் - கட்டிய மாலையை யணிந்த மூங்கிலைப் போன்றபருத்த தோளையுடையாராகிய, கடல் ஆடு மகளிர் - கடலில்நீர் விளையாடலைச் செய்யும் மகளிர், கானல் இழைத்த - கடற்கரைச் சோலையிலே செய்த, சிறு மனை - சிற்றிலினிடத்தே, புணர்ந்த நட்பு - யாம் தலைவனோடு பொருந்தியநட்பு, துறைவன் ஒரு நாள் துறப்பின் - அத்தலைவன் ஒருநாள் நம்மைப் பிரிந்தால், பல் நாள் வரூஉம் இன்னாமைத்து - பல நாளில் வருகின்ற துன்பத்தையுடையது.

     (முடிபு) தோழி, சிறுமனையிற் புணர்ந்த நட்பு ஒரு நாள் துறைவன்துறப்பின் பன்னாள் வரூஉம் இன்னாமைத்து.

     (கருத்து) தலைவன் சிறிது பொழுது பிரியினும் எனக்குப் பெரியதுன்பம் உண்டாகின்றது.

     (வி-ரை.) துணைத்த - கட்டிய; ‘கழுநீர் துணைப்ப - செங்கழுநீர்களை மாலை கட்டும்படியாக' (மதுரைக். 551, ந.); இரட்டையாகக் கட்டிய வெனலுமாம் (குறுந். 229:6.) சிறுமனை - சிற்றில்; தலைவி சிற்றிலிழைத்து விளையாடுகையில் தலைவனுடைய நட்பு உண்டாயிற்று.

     களவொழுக்கமாதலின் இடையிடையே பிரிவு நேர்வது கருதி,‘ஒருநாள் துறைவன் துறப்பின் பன்னாள் வரூஉம் இன்னாமைத்து'என்றாள். இதனால் இடையீடின்றி உடனுறையும் இல் வாழ்வே தக்கதென்றும் அதற்கு வரைந்து கொள்ளுதலே விரகென்றும் தலைவன் உணரவைத்தாள். ஏகாரங்கள் அசை நிலை.

     ஒப்புமைப் பகுதி 1. பணைப்பெருந்தோள்: குறுந். 268:6, ஒப்பு.

     3. தலைவனது நட்பு: குறுந். 247:6- ஒப்பு.

     2-3. விளையாடுகையில் தலைவனைக் கண்டு தலைவி நட்புச்செய்தல்: (குறுந். 294:1-4); "புனையிழை நோக்கியும் புனலாடப்புறஞ்சூழ்ந்தும், அணிவரி தைஇயுநம் மில்வந்து வணங்கியும், நினையுபுவருந்துமிந் நெடுந்தகை" (கலி. 76:1-3); "தொடலை யாயமொடு கடலுடனாடியும், சிற்றி லிழைத்துஞ் சிறுசோறு குவைஇயும், வருந்திய வருத்தந்தீர யாஞ்சிறி, திருந்தன மாக, வெய்த வந்து, தடமென் பணைத்தோண்மடநல் லீரே, எல்லு மெல்லின் றசைவுமிக வுடையேன், மெல்லிலைப்பரப்பின் விருந்துண் டியானுமிக், கல்லென் சிறுகுடித் தங்கின்மற்றெவனோ, எனமொழிந் தனனே யொருவ னவற்கண், டிறைஞ்சிய முகத்தேம் புறஞ்சேர்பு பொருந்தி, இவைநுமக் குரிய வல்ல விழிந்த, கொழுமீன் வல்சி யென்றன மிழுமென, நெடுங்கொடி நுடங்கு நாவாய் தோன்றுவ, காணா மோவெனக் காலிற் சிதையா, நில்லாது பெயர்ந்த பல்லோ ருள்ளும், என்னே குறித்த நோக்கமொடு நன்னுதல், ஒழிகோயானென வழிதகக் கூறி, யான்பெயர் கென்ன நோக்கித் தான்றன், நெடுந்தேர்க் கொடுஞ்சி பற்றி, நின்றோன் போலு மென்றுமென் மகட்கே", "நகைநனி யுடைத்தாற் றோழி தகைமிகக், கோதை யாயமொடு குவவுமணலேறி, வீததை கானல்வண்ட லயரக், கதழ்பரித் திண்டேர் கடைஇ வந்து, தண்கயத் தமன்றவொண்பூங் குவளை, அரும்பலைத் தியற்றிய சுரும்பார் கண்ணி,பின்னுப்புறந் தாழக் கொன்னே சூட்டி, நல்வர லிளமுலை நோக்கி நெடிதுநினைந்து, நில்லாது பெயர்ந்தன னொருவன்" (அகநா. 110:6-25, 180:1-9); "வண்டலுற் றேமெங்கண் வந்தொரு தோன்றல் வரிவளையீர்,உண்டலுற் றேமென்று நின்றதொர் போழ்துடை யான்புலியூர்க், கொண்டலுற் றேறுங் கடல்வர வெம்முயிர் கொண்டுதந்து, கண்டலுற்றேர்நின்றசேரிச்சென் றானொர் கழலவனே" (திருச்சிற். 290.)

     3-5. குறுந். 271:3-5.

(326)