(தலைவன் சிறைப்புறத்தே நிற்ப ஆற்றை நோக்கி, "நீ தலைவனைக்காட்டிலும் கொடியை" என்று கூறும் வாயிலாகத் தலைவி அவனதுகொடுமையை உணர்த்தியது.)
 327.    
நல்கின் வாழு நல்கூர்ந் தோர்வயின்  
    
நயனில ராகுத னன்றென வுணர்ந்த  
    
குன்ற நாடன் றன்னினு நன்றும்  
    
நின்னிலை கொடிதாற் றீய கலுழி  
5
நம்மனை மடமக ளின்ன மென்மைச்  
    
சாயல ளளிய ளென்னாய்  
    
வாழைதந் தனையாற் சிலம்புபுல் லெனவே.  

என்பது கிழவன் கேட்கும் அண்மையனாக அவன் மலையினின்றுவரும் யாற்றிற்கு (பி-ம். அண்மையானாக யாற்றோடு) உரைப்பாளாய்உரைத்தது.

அம்மூவன்.

     (பி-ம்.) 4. ‘றீங்கலுழுதி’, ‘றீயகலுழ்தி’ 6. ‘சாயலளியள்’, ‘சாயலளியவென்னாய்’.

     (ப-ரை.) தீய கலுழி - பொல்லாங்கையுடைய ஆறே,நம் மனை மடம் மகள் - நாம் செல்லும் மனையிடத்துள்ளமடப்பத்தையுடைய தலைவி, இன்ன - இதனைப் போன்ற,மென்மை சாயலள் - மெல்லிய சாயலை உடையவள்,அளியள் - அளிக்கத் தக்காள், என்னாய் - என்று கருதாயாகி,சிலம்பு புல்லென - மலைப்பக்கம் பொலிவழியும்படி,வாழை தந்தனை - அங்கே வளர்ந்த வாழை மரத்தைப்பெயர்த்துக் கொணர்ந்தனை; ஆதலின், நல்கின் வாழும் - தாம் தண்ணளி செய்தால் வாழ்கின்ற, நல்கூர்ந்தோர்வயின் - வறியோர்பால், நயன் இலர் ஆகுதல் நன்று என உணர்ந்தகுன்றம் நாடன் தன்னினும் - அன்பு இல்லாராதல் நல்ல தென்று உணர்ந்த குன்றநாடனது நிலையைக் காட்டிலும்,நின்நிலை நன்றும் கொடிது - நினது இயல்பு மிகவும்கொடியது.

     (முடிபு) கலுழி, புல்லென வாழை தந்தனை; குன்ற நாடன் றன்னினும் நின்னிலை கொடிது.

     (கருத்து) தலைவன் கொடியன்.

     (வி-ரை.) தலைவன் நெடுநாள் வரையாது வந்தொழு கினானாக,அதனை விரும்பாத தலைவி கூறியது இது.

     உலகின்மேல் வைத்துச் சொல்லினும் நல்குதலென்று தலைவன்தண்ணளி செய்தலையும், நல்கூர்ந்தோரென்றது தலைவியையும்,நயனிலராகுதலென்றது வரையாது ஒழுகுதலையும் குறித்து நின்றன.பொதுவகையாற் கூறுதலின் பன்மை வாசகம் படவைத்தாள். நாடன் - நாடனது நிலை; ஆகுபெயர். நன்றும்: மிகுதியைப் புலப்படுத்தியது. யாறுதலைவனது குன்றத்திலிருந்து வந்து தலைவியின் மனைக்கு அருகில்ஓடுவதாதலின் ‘நம்மனை மடமகள்’ என்று உளப்படுத்திக் கூறினாள். (குறுந். 284:6-8.)

     தலைவியின் மென்மைக்கு வாழையின் மென்மை உவமை.நின்னோடு உறவுடைய என்னை நினைக்கச் செய்யும் வாழையைப் பறித்துவந்ததும், நீ தோன்றும் மலையின் பொலிவு அழியச் செய்ததுமாகியகொடுமை தலைவனது கொடுமையினும் மிக்கதென்றாள். தலைவன்பழகியார்திறத்து அன்பிலனாதலொடு அமைய, யாறோ பழகியார்பாற்பகைத்தன்மையும் உடையதாயிற்றாதலின் அதனை நன்றுங் கொடியதென்றாள்.

    ஆல், ஏ: அசை நிலைகள்.

     ஒப்புமைப் பகுதி 1. தலைவன் நல்குதல்: குறுந். 37:1, ஒப்பு.

     7. சிலம்பில் வாழை வளர்தல்: "வாழையஞ் சிலம்பு" (அகநா.328:14, 332:9.)

     மு. ஆற்றை நோக்கிக் கூறல்: அகநா. 398.

(327)