(தலைவன் பிரிந்த காலத்தில் வருந்திய தலைவி, "தலைவர் சென்றநாட்டில் என்னை வருத்தும் மாலையும் புலம்பும் இலவோ?" என்றுதோழிக்குக் கூறியது.)
 330.    
நலத்தகைப் புலைத்தி பசைதோய்த் தெடுத்துத்  
    
தலைப்புடைப் போக்கித் தண்கயத் திட்ட  
    
நீரிற் பிரியாப் பரூஉத்திரி கடுக்கும்  
    
பேரிலைப் பகன்றைப் பொதியவிழ் வான்பூ  
5   
இன்கடுங் கள்ளின் மணமில கமழும்  
    
புன்கண் மாலையும் புலம்பும்  
    
இன்றுகொ றோழியவர் சென்ற நாட்டே.  

என்பது பிரிவிடை வேறுபட்ட கிழத்தி தோழிக்குச் சொல்லியது.

கழார்க்கீரனெயிற்றியன் (பி-ம். கிழாற்கீரனெயிற்றியன், கிழார்க்கீரன்.)

     (பி-ம்.) 1. ‘புலைச்சி’, ‘புலத்தி’, 2. ‘தண்ணயத்’, 3. ‘பரூஉக்கிரி’, 7. ‘நாடே’.

     (ப-ரை.) தோழி--, நலம் தகை புலைத்தி - நன்மையையும் அழகையும் உடைய வண்ணாத்தி, பசை தோய்த்துஎடுத்து - கஞ்சியிலே தோய்த்து எடுத்து, தலைபுடை போக்கி - முதல் தப்பலைத் தப்பிவிட்டு, தண் கயத்து இட்ட - தண்ணிய நீர்நிலையிலே போகட்ட, நீரில் பிரியா பரூஉதிரிகடுக்கும் - அந்நீரிலே பிரியாத பருத்த ஆடையின் முறுக்கைஒக்கும், பெரு இலை பகன்றை பொதி அவிழ் வால் பூ - பெரிய இலையையுடைய பகன்றையினது கூம்பு மலர்ந்தவெள்ளிய மலர், இன்கடு கள்ளின் - இனிய கடுமையாகியகள்ளைப் போல, மணம் இல கமழும் - நறு நாற்றமில்லாதனவாகி நாறுகின்ற, புன்கண் மாலையும் - துன்பத்தைத்தரும் மாலைக் காலமும், புலம்பும் - தனிமையும், அவர்சென்ற நாட்டு - அத்தலைவர் நம்மைப் பிரிந்து சென்றநாட்டிலே, இன்று கொல் - இல்லையோ.

     (முடிபு) தோழி, மாலையும் புலம்பும் அவர் சென்ற நாட்டு இன்றுகொல்?

     (கருத்து) மாலைக்காலமும் தனிமையும் எனக்கு வருத்தத்தை உண்டாக்குகின்றன.

     (வி-ரை) தகை - தகுதியுமாம். புலைத்தி - வண்ணாத்தி. அவள்ஆடையைப் பசையில் தோய்த்தல் வழக்கம்;

  
"பசைவிரற் புலைத்தி நெடிதுபிசைத் தூட்டிய 
  
 பூந்துகில்"                    (அகநா. 387:6-7) 

பகன்றையின் பூவை,

  
"தளைபிணி யவிழாச் சுரிமுகப் பகன்றை"      (அகநா. 24:3) 

என்பவாதலின் அது முறுக்கிய ஆடையை ஒத்தது. பகன்றை - சிவதையென்பர் நச்சினார்க்கினியர் (குறிஞ்சிப் . 88, உரை.) பெருங்கையாலென்பர் அடியார்க்கு நல்லார் (சிலப். 13:155-60, உரை.)

     பொதி-தளையவிழாத கட்டு. பகன்றைமலர் வெண்ணிற முடையது.மணமென்றது நறுமணத்தை; நச்சினார்க்கினியரும், ‘மணமில்லாதபகன்றைப் பூ' என்பர் (கலி. 73:1-5, உரை.)

     ‘மாலையும் புலம்பும் அவர் சென்ற நாட்டில் இன்று கொல்' என்றது,‘தலைவரது பிரிவால் இவ்விரண்டும் எனக்குத் துன்பத்தைத் தருகின்றன;அவை என்னைப் பிரிந்த தலைவருக்கும் துன்பத்தைத் தருவனவாம்.அவர் துன்புறுவரேல் ஆண்மையுடையவராதலின் அத்துன்பத்தினின்றும்நீங்க ஈண்டே வருவர். அவர் நாட்டில் இவையின்மையின் துன்பத்தைஅறிந்திலர் போலும்!' என்னும் நினைவிற்று. இன்றென்பதை மாலைக்கும்புலம்பிற்கும் தனித்தனியே கூட்டுக. கொல்: ஐயம். நாட்டே: ஏ அசைநிலை.

     ஒப்புமைப் பகுதி 1. புலைத்தி: கலி ; 72:14; புறநா. 311:2.

     1-3. புலைத்தி பசை தோய்த்தல்: "அறனில் புலைத்தி யெல்லித்தோய்த்த, புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு" (நற். 90:3-4); "பசைகொன் மெல்விரற் பெருந்தோட் புலைத்தி" (அகநா. 34:11.)

     4. பகன்றை: குறிஞ்சிப் 88; நற். 86:3 ஐங். 87:1; அகநா. 176:10,316:6; புறநா. 16:14, 235:18.

     பேரிலைப் பகன்றை வான்பூ: "பேரிலைப், பகன்றை வான்மலர்"(அகநா. 219:3-4.)

     பகன்றையின் மலர் வெண்ணிறமுடையது: "பகன்றை வான் மலர்","வெள்ளிதழ்ப், பகன்மதி யுருவிற் பகன்றை மாமலர்" (ஐங். 97:1, 456:1-2); "பகன்றைப்பூ வுறநீண்ட பாசடைத் தாமரை, கண்பொரவொளிவிட்டவெள்ளிய வள்ளத்தாற், றண்கமழ் நறுந்தேற லுண்பவண் முகம்போல,வண்பிணி தளைவிடூஉம் வயலணி நல்லூர்" (கலி. 73:2-5); "பகன்றை,நீலுண் பச்சை நிறமறைத் தடைச்சிய, தோலெறி பாண்டிலின் வாலியமலர" (அகநா. 217:6-8.)

     3-4. பகன்றைப் பூவிற்கு ஆடை: "பனித்துறைப் பகன்றைப்பாங்குடைத் தெரியல், கழுவுறு கலிங்கங் கடுப்பச் சூடி" (பதிற். 76:12-3); "போதுவிரி பகன்றைப் புதுமல ரன்ன, அகன்றுமடி கலிங்கமுடீஇ" (புறநா. 393:17-8.)

     5. இன்கடுங்கள்: குறுந். 298:5, ஒப்பு. 6-7, மு. குறுந். 46:6-7.

(330)